``ஆரம்பத்தில் சூரப்பாவை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு கருத்து வேறுபாடு காரணமாக அவர் மீது விசாரணை ஆணையம் அமைத்துள்ளது. தமிழக ஆளுநர் ஜனநாயகத்திற்குட்பட்டு செயல்படுவதில்லை. அவர் வரம்பு மீறிச் செயல்படுகிறார். இது ஜனநாயகத்திற்கு அழகல்ல" என்று விமர்சித்திருக்கிறார் கார்த்திக் சிதம்பரம்.
திருச்சி விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசிய சிவகங்கை தொகுதி எம்.பி கார்த்தி சிதம்பரம், ``2019-ம் ஆண்டு நடந்த தேர்தலில் பாஜக 35 சதவீத வாக்குகள்தான் பெற்றன. இருந்தபோதும் நாடாளுமன்றத்தில் அவர்கள் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். அதன் காரணமாகக் குருட்டுத் தனமாக அவர்கள் நினைக்கும் சட்டத்தை எல்லாம் நிறைவேற்றுகிறார்கள். விவாதங்கள் சடங்கிற்காகவே நடத்துகின்றனர். அதனடிப்படையில் தான் வேளாண் சட்டங்களையும் நிறைவேற்றினார்கள்.
இந்த சட்டத்தால் பல பிரச்னைகள் உள்ளன. பெருமுதலாளிகளுக்காக இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் எதிரானது. அதனால் விவசாயிகள் தாமாக முன் வந்து போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் நடத்தும் போராட்டம் உள்ளப்பூர்வமான போராட்டம். தாராளமயமாக்கல் கொள்கையைக் கொண்டு வந்தது காங்கிரஸ் கட்சிதான். விவசாய சந்தைகளை அதிகப்படுத்த வழிவகை செய்ய வேண்டும் என அப்போது தெரிவித்தோம்.
ஆனால் பா.ஜ.க அரசு அதைச் செய்யாமல் பல படிநிலைகளைத் தவிர்த்து விட்டு தற்போது உள்ள சட்டத்தை நிறைவேற்றியுள்ளார்கள். இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி மீது குற்றம்சாட்டும் தமிழக பா.ஜ.க தலைவர் முருகன், காங்கிரஸ் கொண்டுவந்தது குறித்துப் படிக்க வேண்டும். அவர் விவாதம் செய்ய விரும்பினால் காங்கிரஸ் கட்சி சார்பில் விவாதம் செய்யத் தயாராக உள்ளோம்.
Also Read: `சங்கி’, `பி டீம்’, ஆவேசம்... சூரப்பா விவகாரத்தில் அறத்தின் பக்கம்தான் நிற்கிறாரா கமல்?
சூரப்பா விவகாரத்தில் பல மர்மங்கள் நிலவுகிறது. அண்ணா பல்கலைக்கழகத்திற்குத் தமிழ்நாட்டைச் சேர்ந்தவரை தான் துணைவேந்தராக நியமித்திருக்க வேண்டும். ஆரம்பத்தில் சூரப்பாவை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு ஏதோ கருத்து வேறுபாடு காரணமாக அவர் மீது விசாரணை ஆணையம் அமைத்துள்ளது. தமிழக ஆளுநர் ஜனநாயகத்திற்குட்பட்டு செயல்படுவதில்லை. அவர் வரம்பு மீறிச் செயல்படுகிறார். இது ஜனநாயகத்திற்கு அழகல்ல.
ரஜினி கட்சி ஆரம்பிப்பேன் என அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பு வந்த பின்பு, கட்சி ஆரம்பித்த பின்பு அது குறித்துப் பேசலாம். கமல்ஹாசன் தமிழ்நாட்டு அரசியலில் கவனிக்கத்தக்க நபர் இல்லை. தமிழ்நாட்டில் தற்போது அ.தி.மு.கவும், தி.மு.க கூட்டணியும்தான் முதன்மையானது. கமல் போன்றோர் ஊடக வெளிச்சத்திற்காக இதைச் செய்கிறார். அவர்கள் தேர்தலில் தி.மு.க அல்லது அ.தி.மு.க அணியுடன் இணைய வேண்டும்.
Also Read: ஸ்டாலினுக்கு அட்வைஸ் செய்த ம.பி முதல்வர் முதல் அப்செட்டில் ரஜினி வரை! - கழுகார் அப்டேட்ஸ்
கமல்ஹாசன் இதுவரை கூறி வந்த சித்தாந்தம் பா.ஜ.க விற்கு எதிரான சித்தாந்தம். அவர் ஜாதி, மதத்திற்கு அப்பாற்பட்டு அரசியல் செய்கிறார். கமலின் மனசாட்சிப்படி அவர் அரசியல் இருக்க வேண்டுமென்றால் அவர் திரும்ப வேண்டிய இடம் காங்கிரஸ் கட்சி. ஆனால் காலச்சக்கரம் எப்படிச் சுழல்கிறது எனத் தெரியவில்லை.
ரஜினி கட்சி ஆரம்பித்து கூட்டணி அமைக்கலாம், தனித்து நிற்கலாம். ஆனால் முதலில் அரசியலில் நிலைப்பாடு எடுக்க வேண்டும். அவர் நிலைப்பாட்டைப் பொறுத்தே எதையும் கூற முடியும். அவர் அறிவிப்பு திடீர் அறிவிப்பு. அந்த அறிவிப்புக்குப் பின்னால் சிலர் இருக்கிறார்கள். ரஜினி ஆரம்பிக்க உள்ள கட்சி பா.ஜ.கவின் கட்சி. அதை இயக்கப் போவதும் பா.ஜ.க தான்" என்றார்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/karthi-chidambaram-says-there-are-mysteries-in-the-surappa-issue
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக