திருச்சியில் பாலியல் தொழில் கொடிகட்டிப் பறப்பதாகப் புகார் எழுந்திருக்கிறது. `பாடி மசாஜ்' (ஸ்பா) என்கிற பெயரில் வீட்டுக்கே சென்று பாலியல் தொழில் நடக்கும் அளவுக்கு நிலைமை மோசமடைந்திருக்கிறது. இளைஞர்கள், ஐடி ஊழியர்கள், வங்கி ஊழியர்கள் மற்றும் முதியவர்களைக் குறிவைத்து இந்த டீம் பணத்தைக் கறப்பதாக போலீஸாருக்கு புகார் சென்றது.
திருச்சி மாநகரில் ஸ்பா சென்டர் என்ற பெயரில் பெண்களை வைத்து விபசாரத்தில் ஈடுபடுத்தி போலியாக மசாஜ் சென்டர் நடத்தி வரும் குற்றவாளிகளைப் பிடிக்க மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் உத்தரவிட்டார். பெண் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்தநிலையில் நேற்று மதியம் தனிப்படை டீமுக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில் உறையூர், அண்ணாமலை நகர், தில்லை நகர், டி.வி.எஸ் டோல்கேட், ஜி கார்னர், ஆகிய இடங்களில் தனிப்படை டீம் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
ஸ்பா மையம் என்ற போலியான பெயரில் கட்டிடங்களை வாடகைக்கு எடுத்து ஏழ்மையில் உள்ள பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் டிக்டாக் புகழ் ரவுடிபேபி சூர்யா என அழைக்கப்படும் திருப்பூர் குமரன் தெருவைச் சேர்ந்த விநாயகம் என்பவரின் மனைவி சூர்யா என்கிற சுப்புலட்சுமியும் கைது செய்யப்பட்டார். புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் வெள்ளாளர் தெருவைச் சேர்ந்த அவரது உறவினர் தினேஷும் கைது செய்யப்பட்டார்.
Also Read: திருச்சி: `மது பாட்டில் வீச்சு; தடியடி!’ - களேபரமான வ.உ.சி பேரவையினரின் போராட்டம்
இதுதொடர்பாக உறையூர், கே.கே நகர்,தில்லை நகர் மற்றும் விபசாரத் தடுப்புப் பிரிவு போலீஸார் வழக்குகள் பதிவு செய்தனர். இந்த விவகாரத்தில் சூர்யா என்கிற சுப்புலட்சுமி, புரோக்கர் தினேஷ் உள்ளிட்ட 10 பேரை போலீஸார் கைது செய்தனர். இதில், பாதிக்கப்பட்ட 12 பெண்கள் மீட்கப்பட்டு அரசு பெண்கள் பாதுகாப்பு இல்லத்தில் அனுப்பிவைக்கப்பட்டனர்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய சமூக ஆர்வலர் கார்த்தி, ``திருச்சி மாநகரில் கஞ்சா, லாட்டரி சீட்டு விற்பனை, ஸ்பா தொழில் என்கிற பெயரில் பாலியல் தொழில் என சட்டவிரோத செயல்கள் கொடிகட்டிப் பறக்கின்றன. இதனைத் தடுக்கவேண்டும் என்று பலமுறை போலீஸாரிடம் புகார் கொடுத்தோம். அவர்கள் பெரிதாக நடவடிக்கை எடுக்கவில்லை. காரணம், இந்தத் தொழில்களின் பின்புலத்தில் காவல்துறைச் சேர்ந்த சிலரும், அவர்களது வாரிசுகளும் இருக்கிறார்கள்.
அத்தோடு இந்த தொழிலை நடத்தும் உரிமையாளர்கள் போலீஸாரை சிறப்பாகக் கவனிப்பதால் எதையும் கண்டுகொள்ளாமல் இருந்து வந்தனர். இந்நிலையில்,லோகநாதன் ஆணையராகப் பதவி ஏற்றபின்பு, இவை அனைத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதோடு இரும்புக்கரம் கொண்டு அடக்கி வருகிறார். இவரது செயல்பாடுகள் பாராட்டுக்குரியது" என்றார்.
இதுகுறித்து கமிஷ்னர் லோகநாதனிடம் பேசினோம்.``ஸ்பா சென்டர்களைத் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருந்தோம். ஐந்து இடங்களில் பாலியல் தொழில் நடப்பதாகத் தகவல் வந்தது. அதன் பேரில் போலீஸார் அதிரடியாக ஆய்வு செய்து பலரைக் கைது செய்துள்ளனர். ஸ்பா சென்டரை நடத்தும் உரிமையாளர்களோடு சூர்யா என்ற பெண்ணும் இணைந்து, இந்த ஸ்பா தொழிலைத் நடத்தி வந்தது விசாரணையில் தெரியவந்தது.
அதன் அடிப்படையில் அவரையும் கைது செய்து, அரசு காப்பகத்துக்கு அனுப்பி வைத்துள்ளோம். சட்டத்திற்குப் புறம்பான இதுபோல் போலியான ஸ்பா என்ற பெயரில் பெண்களை ஏமாற்றி விபசாரத்தில் ஈடுபடுத்தி வருவது கண்டறியப்பட்டதால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
source https://www.vikatan.com/news/crime/trichy-police-busts-prostitution-racket-arrests-10
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக