மாற்றுத்திறனாளிகள் விளையாட்டுத்துறையில் பல்வேறு சாதனைகள் படைத்துவருகின்றனர். விளையாட்டு வீரர்கள் வெளிச்சத்துக்கு வந்தாலும், அவர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை எனத் தொடர்ந்து மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் குற்றம்சாட்டிவருகின்றனர். இந்தநிலையில், மதுரையைச் சேர்ந்த பரசுராமன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடர்ந்த வழக்கில், ``சுமார் 20 வருடங்களுக்கு மேல் மாற்றுத்திறன் விளையாட்டு வீரர்களுக்கு இலவசப் பயிற்சி அளித்துவருகிறேன்.
இதனால் பல வீரர்கள் வெற்றியடைந்து பரிசுகள் பெற்றிருக்கிறார்கள். குறிப்பாக, குருநாதன் என்ற விளையாட்டு வீரர் வெளிநாடுகளில் நடந்த மாற்றுத்திறனாளி வீரர்களுக்கான பல போட்டிகளில் பங்கேற்று தங்கம், வெள்ளி, வெண்கலம் உள்ளிட்ட 26 பதக்கங்களை வென்றிருக்கிறார். மேலும், மலேசிய விளையாட்டுப் போட்டிகளில் வட்டு எறிதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், போட்டிகளில் கலந்துகொண்டு நமது நாட்டுக்கு சிறப்பு சேர்த்திருக்கிறார்.
மேலும், இந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் பாராலிம்பிக் போட்டிகளிலும் வெற்றிபெற்றிருக்கிறார். இந்த மாற்றுத்திறனாளி வீரர் தற்போது தற்காலிகப் பணியாளராகப் பணிபுரிந்துவருகிறார். இவருக்கு நிரந்தரப் பணி வழங்க வேண்டும். அதேபோல மாற்றுத்திறனாளிகளில் சாதனை படைத்த பல வீரர்கள் அரசுப் பணியின்றி தவித்துவருகின்றனர். அவர்களுக்கும் அரசு நிரந்தரப் பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தனது மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசு தரப்பில், ``மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு நிறைய வேலைவாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால் அவற்றைப் பெறுவதற்கு அவர்கள் பதிவு செய்திருக்க வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள் ``புதிய விளையாட்டு வீரர்களை உருவாகவில்லை எனினும், உருவாகும் விளையாட்டு வீரர்களுக்கான வாய்ப்பு குறித்த விவரங்களையாவது முழுமையாகத் தெரிவிக்க வேண்டும். ஆனால், அதுபோல தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் செயல்படுகிறதா எனச் சந்தேகமாக இருக்கிறது.
விளையாட்டு வீரர்களைத் தேர்வு செய்வதிலும் அரசியல் இருக்கிறது. அதிர்ஷ்டவசமாக தற்போது கிரிக்கெட்டில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் தேர்வாகியிருக்கிறார்” எனக் கருத்து தெரிவித்த நீதிபதிகள் தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் விளையாட்டுகள் சார்ந்து அறிந்த, ஆர்வமுடைய அதிகாரிகளை நியமிக்க வேண்டும் எனத் தெரிவித்ததோடு, இது குறித்து தமிழக அரசுத் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.
source https://www.vikatan.com/news/judiciary/madurai-high-court-comment-on-sports
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக