இந்த ‘முட்டை பொடிமாஸ்’ டாஸ்க் இன்றும் தொடர்ந்தது. நேற்றாவது பாலாஜி தெரியாமல் முட்டை மீது அமர்ந்து உடைத்தார். ஆனால் அர்ச்சனாவோ ஸ்மார்ட்டாக விளையாடுவதாக நினைத்துக் கொண்டு முட்டையை மண்ணில் புதைத்து அதன் மீது ஏறத்தாழ படுத்துக் கொண்டார். பின்னர் எதிரிநாட்டு பீரங்கிப் படையிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்வது போல மேலே வைக்கோல் போரினால் மூடிக் கொண்டார்.
‘கோழி மிதித்து குஞ்சு சாகாது’ என்பார்கள். என்னதான் அன்பின் திருவுருவமாக அர்ச்சனா இருந்தாலும், முட்டைக்கு வலிக்காமல் படுத்தததாக சொன்னாலும் ‘எடை’ என்கிற சமாச்சாரம் முட்டைக்கு சேதம் ஏற்படுத்தியிருக்கும்தானே?
இதற்கு நடுவில், ‘ஹே... ரெண்டுக்கு நான்தான் போகணும்.’ என்று ஒருவர் சொல்ல, இன்னொரு போட்டியாளர் ‘ரெண்டுக்கு நான்தான்-ன்னு முன்னாடியே சொல்லிட்டேன்’ என்று அடித்துக் கொண்டிருந்த வசனங்கள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தன.
ஒருவேளை பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றி அறியாத ஒருவர், இந்தக் காட்சிகளைப் பார்த்திருந்தால், "என்னதிது கருமம்... ‘ரெண்டுக்கு’ போறதுக்கு இப்படி சண்டை போட்டுக்கறாங்க... ஒவ்வொருத்தவரா பாத்ரூம் போய்ட்டு வர்ற வேண்டியதுதானே?” என்று தலையில் அடித்துக் கொண்டிருப்பார். அல்லது வடிவேலு சொன்னது மாதிரி ‘ரெண்டு ரெண்டு பேரா போய் ஜோலியை முடிச்சுட்டு வாங்கடா’ என்றும் சொல்லியிருக்கலாம்.
இன்றைக்கும் அதேதான். மகா குழப்பான உரையாடல்களும் தலையைச் சுற்ற வைக்கும் ரகசிய பேரங்களும் குடுமிடிப்பிடி சண்டைகளும் நடந்த இன்றைய எபிஸோடை குத்துமதிப்பாக ஆவணப்படுத்த முயன்றிருக்கிறேன்.
73-ம் நாளில் என்ன நடந்ததென்று பார்ப்போம்.
72-ம் நாளின் தொடர்ச்சி. ‘டேமேஜ் ஆன பீஸூ நானே...’ என்று பாடிக் கொண்டிருந்தார் பாலாஜி. முட்டையை டேமேஜ் பண்ணிய லட்சணத்தை இப்படி பாட்டாகவே பாடி விட்டார் போல். "ஒருத்தர் மட்டும்தான் வரணும்-ன்ற சென்ஸ் உனக்கு இருந்தது. மத்தவங்களுக்கு இல்ல..." என்று பாலாஜிக்கு சான்றிதழ் தந்து கொண்டிருந்தார் ரியோ. (பக்கத்தில் அர்ச்சனா இல்லாததால் வந்த தைரியம் போலிருக்கிறது).
‘என்கிட்ட காசே இல்ல’ என்று ஆஜீத் புலம்பிக் கொண்டிருந்ததைப் பார்த்து மற்றவர்கள் சிரித்தார்கள். பின்பு ஷிவானியுடன் வாக்கிங் சென்று கொண்டிருந்த ஆஜீத், "நான் வெச்சிருக்கிற காசை வெச்சு ஷாப்பிங்ல லாலிபப் கூட வாங்க முடியாது. நாளைக்குத்தான் இந்த காளியோட ஆட்டத்தைப் பார்க்கப் போறீங்க. நெகட்டிவிட்டி வேணாம்னு நெனச்சேன்... இதுவரைக்கும் தின்னு தூங்கி சேஃப் கேம் ஆடிட்டோம்” என்று கொலைவெறியுடன் அனத்திக் கொண்டிருந்தார். எழுபது நாட்கள் கழித்துதான் தம்பிக்கு ஞானோதயம் வந்திருக்கிறது. ஆனால் வந்த கோபத்தில் ‘கோழியோட மடியிலேயே படுத்துப்பேன்’ என்று சொன்னதெல்லாம் சென்சார் செய்யப்பட்டிருக்க வேண்டிய வசனம்.
நாள் 73 விடிந்தது. ‘கோழி. வெடக்கோழி’ பாடலைப் போட்டார் பிக்பாஸ். (இன்னமும் ‘கோழி கூவுது’ படப்பாட்டு மட்டும்தான் பாக்கி). அது எந்தப் பாட்டாக இருந்தாலும் ரப்பர் பேண்டில் சுருக்கிய பேப்பர் போல முகத்தை இறுக்கிக் கொண்டு ஆரி ஆடும் நடனத்தின் வகை என்னவென்று தெரியவில்லை.
அந்த மெகாசைஸ் கோழியானது ஓவர் டைம் போட்டு உல்லாசமாக இருக்கிறது போல. காலையிலேயே இரண்டு முட்டைகளை இட்டது. ஷிவானி மற்றும் ரியோவிற்கான முட்டைகள் அவை. ஷிவானியெல்லாம் ஒரே நொடியில் அவுட் ஆகக்கூடிய எளிய டார்கெட். மேலும் ரமேஷ் இப்போது இருந்திருந்தால், "யப்பா டேய்... நான் அப்படி ஓரமா படுத்துக்கறேன். யாராவது என் முட்டையைப் பார்த்துக்கறீங்களா?” என்று டீல் பேசி கட்டையைச் சாய்த்திருப்பார்.
கோழி வட்டத்திற்குள் இருக்கும்போது எந்த நரியும் முட்டையைத் தொடக்கூடாதா, இவை எத்தனை சுற்றுகள், ஒரு நபருக்கு எத்தனை முட்டைகள் வரும், என்பது உள்ளிட்ட பல விஷயங்கள், விதிகள் புரியாமல் ‘தேமே’வென்றுதான் இந்த டாஸ்க்கை நாம் பார்க்க வேண்டியிருந்தது.
நரிகள் கூடி மறுபடியும் ரணகளமாக விவாதத்தில் ஈடுபட்டன. அதென்னமோ சோம் ரோபோட்டின் உள்ளே ஏதாவது ஷார்ட் சர்க்யூட் ஆகி விட்டதா என்று தெரியவில்லை, சோம் கூட இன்று ஆவேசமாக இருந்தார். ஆரி ப்ரோவெல்லாம் 24x7 சண்டைக் கோழி மோடிலேயே இருக்கிறார்.
"யார் முதலில் சென்று முட்டையைத் தொடுவது?" - காசு குறைவாக இருப்பதின் அடிப்படையிலா? இதுவரை வாய்ப்பே கிடைக்காதவர்களின் அடிப்படையிலா? வாய்ப்பு தரப்பட்டும் இதுவரை முட்டையைத் தொடாதவர்களின் அடிப்படையிலா? என்றெல்லாம் இவர்கள் வரையறுத்துக் கொள்ள முயன்றாலும் சோமிற்கும் பெண்கள் அணிக்கும் இடையில் முட்டிக் கொண்டது. குறிப்பாக அனிதாவும் சோமுவும் அடித்துக் கொள்ளாத குறைதான். ‘கன்னுக்குட்டி ரொம்பத்தான் துள்ளுது’ என்று சோம் நினைத்திருப்பார். “நான் முதல்லேயே ரெண்டாம் நம்பருக்கு இடம் பிடிச்சிட்டேன். நீ லேட்டா வந்தா நானா பொறுப்பு?" என்று அனிதா கத்திக் கொண்டிருந்தார்.
ஒவ்வொரு நபரும் குறிப்பிட்ட விநாடிகளில் முயல வேண்டும் என்கிற டீலுக்கு இறுதியில் வந்தார்கள். "யார் எண்ணப் போறது..? நான் செஞ்சா போங்காட்டம்னு சொல்லிடுவீங்க..” என்று ரம்யா ஆதங்கப்பட்டார். "நான் எண்ணறேன்" என்று ஹாஸ்டல் வார்டன் மாதிரி சத்தமாக குரல் கொடுத்தார் அர்ச்சனா.
பஸ்ஸர் அடித்தது. முன்பே சொன்னபடி ஷிவானியின் முட்டையை உடனே தொட்டு விட்டார் பாலாஜி. (இப்படி வரும் வார்த்தைகளை எல்லாம் அப்படியேதான் வாசிக்க வேண்டும். தவறாக எதையும் கற்பனை செய்து கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்). ஒப்பந்தப்படி ரியோவின் முட்டையை முதலில் தொடச் சென்று வாலை இழந்தது ஆஜீத் நரி. (என்னப்பா தம்பி... நேத்து அப்படி ஆவேசமா இருந்தே?!).
ஆஜீத் தோற்று விட்டதால் அடுத்ததாக அனிதா செல்ல வேண்டும். அவர் முட்டையின் மீது பாய முயன்ற அதே சமயத்தில் ஆரியும் பாய்ந்தார். அந்தச் சமயத்தில் அனிதாவின் வாலை ரியோ பற்றி அவுட் ஆக்கி விட்டார் போலிருக்கிறது.
‘நான்தான் முதலில் தொட்டேன்’ என்று ஆரியும் அனிதாவும் பரஸ்பரம் அடித்துக் கொண்டார்கள். ஆரி முட்டையைத் தூக்கிக் கொண்டு போய் கேமராவின் முன்பு கிளைம் செய்து கொண்டார். ஆனால் முட்டையை யார் முதலில் தொட்டது என்பது குறித்து தனக்கு தெளிவில்லை என்று கூறி விட்டார் ரியோ.
"ஒவ்வொருத்தராதான் போகணும்னு அவ்ளோ நேரம் பேசி முடிவு பண்ணினோம். அப்படியும் அஞ்சு பேரும் ஒரே நேரத்துல பாய்ஞ்சா எப்படி?” என்று கோபத்துடன் சலித்துக் கொண்டார் அர்ச்சனா. பிறகு டைனிங் டேபிளின் அருகே உலாத்திக் கொண்டிருந்த ஆரியை நோக்கி, "நீங்கதான் தப்பு பண்ணீங்க. நரியா இருந்தாலும் மானத்தோட வாழ முடியும். நான் ரெண்டாங்கிளாஸ் புக்குல அப்படியொரு கதை படிச்சிருக்கேன்" என்று ஜாடையாக திட்ட "எனக்கு மானமே கிடையாதும்மா” என்று நேர்மையாக ஒப்புக் கொண்டார் ஆரி. (என்ன இருந்தாலும் ஹமாம் சோப்பு... ஹமாம் சோப்புதான்).
"நான் அவுட்டான்னே எனக்கு டவுட்டா இருக்கு" என்ற ரியோ, ஆரி கிளைம் செய்து வைத்திருந்த முட்டையை எடுத்து தனது வட்டத்திற்குள் மறுபடி வைத்துவிட்டார். பிக்பாஸ் தெளிவுப்படுத்தினால் அதை ஒப்புக் கொள்கிறேன் என்பது அவரின் கோரிக்கை. ஆனால் விடாக்கொண்டாக அதை மறுபடியும் ஆரி ப்ரோ எடுத்து வைக்க, கொடாக்கண்டனாக மறுபடியும் தன்னிடத்தில் எடுத்து வைத்தார் ரியோ. "பிக்பாஸ் சொல்லட்டும்" என்கிற பாட்டை மறுபடியும் பாடினார் ரியோ.
இதற்கிடையில் ‘சந்தைக்குப் போகணும்... ஆத்தா வையும் காசைக் கொடு’ என்று ஆரி வந்து நிற்க, "ஹலோ பாஸ். இன்னமும் முடிவே எனக்குத் தெரியலை... தெரியாம எப்படி காசு தர முடியும்?” என்று ரியோ மறுக்க, "டேய்... அண்ணன் இதுக்காக மான ரோஷத்தையெல்லாம் இழந்துட்டு வந்து நிக்கறேண்டா.. அச்சு வேற என்னை ஏற்கெனவே திட்டிட்டாங்க... அதுக்காகவாது காசைக் கொடுத்துர்றா தம்பி" என்று கெஞ்சியும் ரியோ தராததால், ‘நீயே வெச்சுக்க’ என்று கோபமாக கிளம்பினார் ஆரி.
“எப்படி என் பிளானு... நான் காசும் தரலை. முட்டையையும் காப்பாத்திக்கிட்டேன்" என்று ஷிவானியிடம் தன் பெருமையைப் பேசிக் கொண்டிருந்த ரியோ, பிறகு நரிகளின் இடையே நடந்து கொண்டிருந்த ரணகளச் சண்டையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஷிவானியின் தோளில் கைபோட்டுக் கொண்டு ‘எப்படியிருக்கு சீஸன் ஃபோர்’ என்று உல்லாசமாக கேட்டுக் கொண்டிருந்தார். (பாலாஜி கண்ல இந்தக் காட்சி பட்டா முட்டையை உடைச்சிடுவாரு ரியோ ப்ரோ!).
‘நான் ஏன் அப்படி அத்துமீறி போனேன்’ என்பதற்கான நியாயத்தை அர்ச்சனா மற்றும் ரம்யாவிடம் பிறகு மல்லுக்கட்டிக் கொண்டிருந்தார் ஆரி. "என்னிடம் காசு குறைவாக இருந்தது. எனில் காசு குறைவாக இருப்பவர்கள் செல்வதுதானே நியாயம்?” என்பது அவரின் கோரிக்கை. "அப்ப நீங்க மீட்டிங்ல ஒழுங்கா உக்காந்திருக்கணும். திடீர்னு எழுந்து அந்தப் பக்கமா போனா எங்களுக்கென்ன தோணும்?” என்று ரம்யா பதிலுக்கு மல்லுக்கட்டியதை ஆரி ஏற்கவில்லை.
‘இனிமேதான் பார்க்கப் போறீங்க. இந்த காளியோட ஆட்டத்தை’ என்று ஆரி ப்ரோ மீண்டும் உறுமத் துவங்கினார். அவர் நேற்றிலிருந்து இதைத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறாரே தவிர. உருப்படியாக எதையும் செய்யவில்லை. ஒவ்வொரு முறையும் தோற்று விட்டு ‘இனிமே பாருங்க. எப்படி ஆடறேன்னு?!’ என்கிற உறுமலில் மட்டும் குறைச்சல் இல்லை.
"நீ ஆரிக்கு காசு தராதே... நியாயமா அனிதா மட்டும்தான் வந்திருக்கணும்... ஆரி உள்ளே பூந்துட்டாரு" என்று ரியோவிற்கு ஸ்கூரூ ஏத்திக் கொண்டிருந்தார் அர்ச்சனா. "ஒரு பேச்சுக்கு நரின்னு சொன்னா உண்மையாவே நரியா இருக்கணுமா?” என்று ரம்யாவை பாலாஜி கிண்டல் செய்ய "நரிக்கு மூளை இருக்கும். எனக்கு இல்லை" என்று தன்னையே பகடி செய்து கொண்டார் ரம்யா. ஆனால் கோபத்தில் இருந்த ஆரிக்கு இது புரியவில்லை. "ஆமாம்மா. நீங்கல்லாம் புத்திசாலிங்க.. நாங்கெல்லாம் முட்டாப்பசங்க"’ என்று எரிச்சலுடன் சொன்னார். (மறுபடியும் ஹமாம்).
ஆனால் மெலிதான கோபம் மட்டும் முகத்தில் தெரிய அந்த நேரத்திலும் புன்னகையை தவழ விட்ட ரம்யாவிடம்தான் ‘Angry Management’ பற்றி கற்றுக் கொள்ள வேண்டும் போல. (உண்மையிலேயே அவர் பெயரை ‘ஸவப்னா’ என்று மாற்றி விடலாம். அத்தனை ஸ்மார்ட்).
அடுத்ததாக கேபியின் முட்டை மட்டுமே வந்தது. எனில் ரியோ அவுட் ஆகவில்லை என்று பொருள். பிக்பாஸ் தந்த ரிசல்ட்டை மகிழ்ச்சியுடன் தலைவணங்கி ஏற்றுக் கொண்டார் ரியோ. (ரியோ செய்த காரியமும் புத்திசாலித்தனமானது). ஆக களத்தில் கோழிகளாக இப்போது இருக்கிறவர்கள் கேபி மற்றும் ரியோ.
தன் முட்டையின் சேஃப்டிக்காக சோமு மற்றும் ஆஜீத்துடன் டீல் போட்டுக் கொண்டார் கேபி. ரியோவின் முட்டைக்காக ஆரியும் பாலாஜியும் டீல் போட்டுக் கொண்டார்கள். ‘படுத்தே விட்டேன்னய்யா’ என்கிற ரேஞ்சிற்கு ரியோவின் முட்டையின் அருகில் பெயிண்ட் கையுடன் படுத்தே விட்டார் பாலாஜி. தன் வாலையும் பத்திரமாக சுருட்டி வைத்துக் கொண்டார். (தன் வாலை பாலாஜி சுருட்டி வைத்திருப்பது அவரின் ‘மனமாற்றத்திற்கான’ குறியீடு).
“டேய் தம்பி. இப்படில்லாம் அநியாயம் பண்ணா எப்படிர்ரா விளையாடறது?” என்று சிரித்துக் கொண்டே கேட்டார் ரியோ. பஸ்ஸர் அடித்ததும் விநாடிக்கும் குறைவான நேரத்தில் முட்டையைத் தொட்டு விட்டார் பாலாஜி.
கேபியின் முட்டையை டார்க்கெட் செய்து அர்ச்சனா டீம் தனியாக டீல் போட்டது. எனவே பாதுகாவலர்களாக நின்ற சோம் மற்றும் ஆஜீத்தை மீறி மிக எளிதாக தொட்டு முட்டையைக் கைப்பற்றினார் அனிதா. இதில் வரும் பணத்தை பெண்கள் அணி நால்வரும் பங்கிட்டுக் கொள்வார்கள்.
"ரூல்ஸை மாத்திட்டீங்களா என்ன?” என்று இப்போதும் வந்து மல்லுக்கட்டினார் ஆரி. அவருக்கு விளக்கம் அளித்தே பெண்கள் அணி டயர்ட் ஆகிவிடும் போல. இந்த கோழி டாஸ்க்கின் மூலம் நடந்த ஒரு நல்ல விஷயம் என்னவெனில், அனிதாவிற்கும் அர்ச்சனாவிற்கும் இடையில் இருந்த பகைமை மறைந்து, அனிதாவிற்கு சப்போர்ட் செய்யுமளவிற்கு மாறி விட்டார் அர்ச்சனா. (ஆனால் நிஷாவின் இடத்திற்கு போயிடாதீங்க அனிதா!).
"இதை சுவாரஸ்யமா விளையாடினா பார்க்கறவங்களுக்கு நல்லாயிருக்கும்" என்று பார்வையாளர்களையும் மைண்டில் வைத்துக் கொண்டு ரியோ சொன்னது சரியான விஷயம்.
நானாக இருந்தால் இந்த விளையாட்டின் விதியை இப்படி மாற்றியமைத்திருப்பேன். ஒரு சமயத்தில் ஒரு நரி மட்டுமே வர வேண்டும். அவர்களுக்கு ஒரு நிமிடம் மட்டுமே நேரம் தரப்படும். அதற்குள் கோழியுடன் போராடி முட்டையைத் தொட வேண்டும். போலவே அதே நேரத்தில் நரியின் வாலைப் பிடுங்குவதற்கு கோழிக்கும் சந்தர்ப்பம் கிடைக்கும். இப்படி கோழியும் ஒரு நரியும் மட்டுமே களத்தில் இருக்கும் போது பார்ப்பதற்குக் குழப்பம் இல்லாமல் இருக்கும். சுவாரஸ்யமாகவும் அது அமையக்கூடும்.
"அனிதா நெருக்கத்தில் வந்து என் முட்டையைத் தொட்டது சரியா?” என்று பெண்கள் அணியிடம் சண்டை போட்டுக் கொண்டிருநதார் கேபி. இதற்கிடையில் அனிதாவிற்கும் சோமுவிற்கும் இடையில் மறுபடியும் முட்டிக் கொண்டது. நீண்ட நாட்கள் கழித்து இந்தச் சண்டையைப் பார்க்க முடிந்தது. அனிதாவின் தொணதொணப்பை தாங்க முடியாத சோம் தனது டெஸிபலை உயர்த்த காதை மூடிக் கொண்டார் அர்ச்சனா.
பிறகு சோமுவிடம் பேசிக் கொண்டிருந்த அர்ச்சனா. "ஆம்பளை பொம்பளையைப் பார்த்து கத்தினா. ஆம்பளை மேலதான் தப்பு. என்னிக்குமே இதுதான் நியாயம்" என்கிற பன்ச் வசனத்தை சொன்னார். (என்னடா இது. பித்தலாட்டமான லாஜிக்கா இருக்கு?!). அனிதாவின் தொணதொணப்பை ஜாலியாக மிமிக்ரி செய்து காட்டினார் சோம்.
அடுத்ததாக அனிதா மற்றும் அர்ச்சனாவின் முட்டைகள் வந்தன. இதுதான் கடைசி சுற்று. (ஹப்பாடா!). இதுதான் கடைசி சந்தர்ப்பம் என்பதால் நரிகள் கொலைவெறியுடன் சுற்றின. ஆளாளுக்கு கூடிக் கூடி டீல் பேசிக் கொள்ளும் காட்சி எல்லாம் பார்க்க நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், முட்டையைப் பார்த்ததும் அத்தனை நரிகளும் பாய்வதுதான் கடைசியில் நடக்கிறது.
சோமுவும் ஆஜீத்தும் தனியாக டீல் பேசிக் கொண்டிருக்க, "டேய் என்னையும் கவனிங்கடா... ஜீரோல இருக்கேன்" என்று கெஞ்சிக் கொண்டிருந்தார் ரியோ.
துப்பாக்கி தோட்டாவிலிருந்து மறைந்து கொள்ளும் போர்வீரன் மாதிரி தன்னை வைக்கோல் போரினால் மறைத்து, ஆடைக்குள் முட்டையைப் பதுக்கி பாதுகாப்பு வியூகத்தை மிக பலமாக அமைத்துக் கொண்டிருந்தார் அர்ச்சனா. (இவரின் கணவர் ஆர்மியில் பணிபுரிவதால் கற்றுக் கொண்ட பயிற்சிபோல). அர்ச்சனாவிடம் டீல் போட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளில் அவருக்கு உதவிக் கொண்டிருந்தார் உப தளபதி ரம்யா.
அர்ச்சனாவின் ஏழு கட்ட பாதுகாப்பு வட்டத்தைப் பார்த்து விட்டு "என்னாங்க இது?!” என்று சிரித்தபடி வந்தார் பாலாஜி. மற்றவர்கள் மாதிரி இல்லாமல் வித்தியாசமாக அர்ச்சனா சிந்தித்தது உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டிய விஷயம். (காத்திருந்து பாருங்கள்… கமலும் இதை நிச்சயம் பாராட்டுவார்).
“முடிஞ்சா வந்து தொட்டுப் பாருடா” என்று இந்தச் சமயத்தில் சோமிடம் ஜாலியாக சவால் விட்டார் அர்ச்சனா. இந்த விஷயம்தான் சோமுவை உசுப்பேற்றியிருக்க வேண்டும். சோமுவும் ரியோவும் அர்ச்சனாவின் முட்டையின் டார்க்கெட்டிற்காக ஆலோசித்துக் கொண்டிருந்தபோது "பொம்பளை ஆளுங்களை எப்படிப்பா தொடறது" என்று சங்கட்டப்பட்டுக் கொண்டிருந்தார் ரியோ.
ஏதோ வயதிற்கு வந்த பெண்ணின் சடங்கு நிகழ்ச்சியில் முறைமாமன் வந்து ஓலை கட்டும் சம்பிரதாயம் போல அர்ச்சனாவின் அருகில் தென்னை ஓலைகளையெல்லாம் கொண்டு வந்து போட்டார் ரம்யா. வைக்கோல் போரினுள் தன்னை பந்து மாதிரி சுருட்டி படுத்துக் கொண்டார் அர்ச்சனா.
பஸ்ஸர் ஒலித்தது. ஒப்பந்தப்படி ஆஜீத் முதலில் போக வேண்டும் போல. அவர் வைக்கோலை தயக்கத்துடன் எடுத்துப் போட்டுக் கொண்டிருக்க, வைக்கோலில் ஊசி தேடுவது மாதிரி தயக்கத்துடன் ரியோ முயற்சி செய்துவிட்டு ‘நான் தொட்டுட்டேன்’ என்றார். ஆனால் அதை அர்ச்சனா ஒப்புக் கொள்ளவில்லை.
எனவே ‘டேய் தள்றா’ என்றபடி வந்த சோம் சற்று தைரியத்துடன் அர்ச்சனாவின் உடலைத் தள்ளி முட்டையைத் தொட முயன்றார். அர்ச்சனாவின் நெருக்கமான நண்பராக சோம் இருந்ததால் இந்தத் தைரியம் அவருக்கு வந்திருக்க வேண்டும். வேறு எவராக இருந்தாலும் யோசித்திருப்பார்கள். சோம் பலவந்தமாக முட்டையைத் தொட வந்ததால் அர்ச்சனா தன்னை மிகவும் இறுக்கிக் கொண்டார். இந்தச் சமயத்தில் அவர் எழுந்து பார்க்கும் போது முட்டை உடைந்திருந்தது.
முதலில் எது வந்தது. 'கோழியா.. முட்டையா?’ என்கிற கேள்வியைப் போல ‘நீதான் உடைச்சே’ என்று பரஸ்பரம் சோமுவும் அர்ச்சனாவும் சண்டை போட்டுக் கொண்டார்கள். "நான் ஒரேயொரு கையை மட்டும்தான் வெச்சிருந்தேன். அந்த எடைல எப்படி முட்டை உடையும்?” என்று சோம் கேட்பது லாஜிக்கானது. அர்ச்சனா தனது முழு எடையையும் வைத்து படுத்துக் கொண்டிருந்ததால் அப்போது உடைந்திருக்கவே அதிக சந்தர்ப்பம் உள்ளது. இதை கேமரா சாட்சியத்தின் வழியாகவும் நிரூபிக்க முடியாது என்பதுதான் சங்கடம்.
அர்ச்சனாவிடம் சண்டை போட்ட கோபத்தில் உடைந்த முட்டையை, அமாவாசை தின பூசணியைப் போல சிதறுகாயாக கீழே எறிந்தார் சோம். இதற்காக அர்ச்சனா மிகவும் கோபப்பட்டார். அதில் அவரது புகைப்படம் இருக்கிறதாம். இதர போட்டியாளர்களின் புகைப்படங்களை எரிக்கும் டாஸ்க் கூட முன்பு நடந்தது. அப்போதும் அர்ச்சனாவிற்கு கோபம் வந்ததா என்று தெரியவில்லை.
அர்ச்சனா கோபப்பட்டதால் குரலை தாழ்த்திய சோம், "சரி... வரும் போதே உடைஞ்சுதான் வந்தது. Manufacturing defect... அப்படி வெச்சுக்கலாமா" என்கிற ரேஞ்சிற்கு பிறகு பணிந்து போனார். பிறகு கைகழுவும் இடத்தில் சோம் உருக்கமாக மன்னிப்பு கேட்க 'சரி... சட்டை கிழியாத சண்டை எங்கே நடக்குது’ என்று அர்ச்சனா சொன்னாலும் கோபம் இன்னமும் குறையாமல்தான் இருந்தார்.
இன்னொரு பக்கம் அனிதாவின் முட்டையை எளிதாக தொட்டு ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்தார் பாலாஜி. இதற்காக அவர் ஷிவானியுடன் டீல் போட்டுக் கொண்டிருந்தார். (பாசம்!). கேபி டீலுக்கு வராததால் அவருக்கு ‘பெப்பே’.
"நான்தான்க்கா முதலில் தொட்டேன்" என்று அர்ச்சனாவிடம் ரியோ அனத்திக் கொண்டிருந்தார். அவர் ஜீரோ பேலன்ஸில் இருப்பதால் ஏற்பட்ட நெருக்கடி. "அப்ப நீயே வெச்சுக்க. சோமு கிட்ட பேசிக்க" என்று பணத்தை டேபிளில் வைத்துவிட்டு அர்ச்சனா சென்று விட்டார். ரியோ அந்தப் பணத்தை எடுக்கத் தயங்கினார்.
முதலில் மறுத்து பிறகு அந்தப் பணத்தை ரியோவிடமிருந்து வாங்கிய சோம் "பிக்பாஸ் சொல்லட்டும். அப்புறம் பார்த்துக்கலாம்" என்கிற டீலுக்கு ஒப்புக் கொண்டார். ஆஜீத்திடம் பேசியபடி சோம் பணத்தைத் தர, அவரும் தயக்கத்துடன் வாங்கிக் கொண்டார்.
ஒருவழியாக இந்த ‘கோழி –நரி’ விளையாட்டு முடிந்துத் தொலைந்தது.
‘அழுகாச்சி டாஸ்க்’ இல்லை போல என்கிற ஆறுதலுடன் இருந்தால் ‘கோழி’ டாஸ்க் முடிந்தவுடன் அதை தூசு தட்டி எடுத்து வந்தார் பிக்பாஸ். இம்முறை ‘க்ரையிங் பேபி’யாக அவர் அழைத்தது அனிதாவை. ‘ஒவ்வொருத்தருக்கும் ஒரு பிரேக்கிங் பாயிண்ட் இருக்கும்’ என்ற வசனத்தை ‘குருதிப்புனல்’ திரைப்படத்தில் கமல் சொல்வார். அது போல அனிதாவிற்கான ‘பிரேக்கிங் பாயிண்ட்’ கன்னுக்குட்டி என்கிற சொல்.
எனவே பிக்பாஸ் அந்த வார்த்தையை சரியாக ‘டச்’ செய்ய, ஸ்விட்ச் போட்டாற் போல் மாறிய அனிதா, தன் கணவரை நினைத்து அழத் துவங்கினார். ‘அழாதே... கோபப்படாதே’ என்று அவர் படித்து படித்து சொல்லி அனுப்பினாராம். (என்ன ஒரு நம்பிக்கை!). அதையும் மீறி இங்கு அனிதா நடந்து கொள்ள வேண்டியிருந்ததாம்! அப்படியெல்லாம் தன் இயல்பான குணாதசியங்களை மறைத்துக் கொண்டு இருக்கத் தேவையில்லை. இருக்கவும் முடியாது. ‘ஆங்க்ரி பேர்டாக’ இருப்பதுதான் அனிதாவிற்கு அழகு! (என்ன சொல்றீங்க மக்களே!).
வறுமை காரணமாக இளமைப் பருவத்தில் எதிர்கொண்ட சம்பவங்களை நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்த அனிதா அதற்கும் சேர்த்து கலங்க ‘ஓகே... ஒரு செமீ அளவிற்கு மழை பெய்தது’ என்று திருப்தியடைந்த பிக்பாஸ் ‘ஓகே கன்னுக்குட்டி.. ஆல் தி பெஸ்ட்’ என்று சொல்லி அனிதாவை வழியனுப்பி வைத்தார். (‘கன்னுக்குட்டி’ என்பது அனிதாவிற்கான அந்தரங்கச் சொல் என்பதால் நான் அந்த வார்த்தையை மேற்கோள் காட்ட சமயங்களில் தயங்கினேன். போகிற போக்கைப் பார்ததால் ஒட்டுமொத்த தமிழ்நாடே அனிதாவை பாசத்துடன் ‘கன்னுக்குட்டி’ என்று குறிப்பிடும் அளவிற்கு அந்த வார்த்தை அனிதாவிற்கான பிராண்ட் ஆகிவிட்டது போல).
அடுத்ததாக அர்ச்சனாவை வரவழைத்தார் பிக்பாஸ். ஆட்டோகிராஃப்’ திரைப்படத்தின் ஆரம்பத்தில் சேரனின் வாய்ஸ் ஓவர் வரும். ‘உங்க கண்களை மூடிக்குங்க’ என்று ஆரம்பித்து ஒவ்வொருவரின் இளமைப்பருவ காதல்களை நினைவுகூரும் மூடிற்கு பார்வையாளர்களை செட் செய்திருப்பார் சேரன். அதைப் போல அர்ச்சனாவின் மகள் வீட்டின் கதவை திறக்கும் காட்சியை கற்பனை செய்து கொள்ளச் சொன்னார் பிக்பாஸ். அதைச் செய்து பார்த்து அர்ச்சனா அழுது தீர்க்க பிக்பாஸிற்கு திருப்தியானது.
“இங்க அன்பால ஜெயிக்கலாம்னு வந்தேன். ஆனா சந்தைக்கடையா சண்டை நடக்குது" என்கிற புராணத்தை அர்ச்சனா இங்கும் பாடத்தவறவில்லை. "நான் ஒரு போராளியின் மனைவி. இனிமேதான் இருக்கு... இந்த காளியோட ஆட்டம்" என்றபடி வீறுகொண்டு வெளியே நடந்தார் அர்ச்சனா. (என்னடா. இது! ஆளாளுக்கு இந்தப் பன்ச்சையே சொல்றீங்க?!).
அர்ச்சனாவிடம் மன்னிப்பு கேட்கும் படலத்தை மீண்டும் ஆரம்பித்தார் சோம். "அக்கா முக்கியமா. ரூ.200/- முக்கியமா..” என்று சர்காஸ்டிக்காக அர்ச்சனா கேட்க மறைமுகமாக சோம் சொல்லிய பதில் "சோறுதான் முக்கியம்”. நைட்வாட்ச்மேன் மாதிரி கவுண்டவுன் சொல்லி பிக்பாஸ் வீட்டின் விளக்குகளை சோம் அணைத்ததும் இன்றைய எபிஸோட் முடிந்தது.
முட்டையிட்ட கோழிகளின் வலி பெரியதா, அதைப் பிடுங்கிய நரிகளின் தந்திரம் ஜெயித்ததா என்பதற்கான பதில் நாளைய ஷாப்பிங்கில் தெரியும்.
source https://cinema.vikatan.com/bigg-boss-tamil/hen-and-fox-task-concludes-bigg-boss-tamil-season-4-day-73-highlights
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக