லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகளை பொறி வைத்து பிடிக்க உருவாக்கப்பட்டதுதான் லஞ்ச ஒழிப்புத்துறை. அப்படிப்பட்ட துறையில் நேர்மையாக இருக்க வேண்டிய அதிகாரியே லஞ்சம் வாங்கினால், அதன் நோக்கமே அர்த்தம் இல்லாமல் போகும்.
அப்படி நேர்மை தவறிய அதிகாரி ஒருவர் சிறை தண்டனை பெற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவில் 2010-ம் ஆண்டில் ஆய்வாளராக பணியாற்றியவர் பெருமாள் பாண்டியன்.
அவர் பணியாற்றிய காலகட்டத்தில் மதுரை அரசு மருத்துவர் அசோக்குமார் மீது அரசு அனுமதி இல்லாமல் வீடு வாங்கிய புகாரை விசாரித்துள்ளார் ஆய்வாளர் பெருமாள் பாண்டியன், அப்போது அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க 7 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டிருக்கிறார்
இந்த புகாரை வைத்து கையும் களவுமாக பிடித்த அப்போதைய ஊழல் கண்காணிப்பு துணை கண்காணிப்பாளர் இராம.அம்பிகாபதி வழக்குப் பதிவு செய்து பெருமாள் பாண்டியனை கைது செய்தார். அவ்வழக்கு, மதுரை ஊழல் வழக்குகளுக்கான தனி நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
ஆய்வாளர் பெருமாள் பாண்டியன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு, நேற்று இவ்வழக்கில் அவருக்கு மூன்றாண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து மதுரை தனி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஊழல் தடுப்புப் பிரிவில் பணியாற்றும் ஒருவர் ஊழல் தடுப்புப் பிரிவினராலேயே கைது செய்யப் பட்டு சிறைத்தண்டனை பெறுவது தமிழ் நாட்டில் இதுவே முதல் முறையாகும். வேலியே பயிரை மேய்ந்தாலும் அதற்கு தண்டனை உண்டு என்பதை இத்தீர்ப்பு உறுதி செய்துள்ளது.
source https://www.vikatan.com/news/crime/vigilance-officer-sentenced-to-jail-in-bribe-case
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக