Ad

திங்கள், 14 டிசம்பர், 2020

ராமேஸ்வரம்: தமிழக மீனவர்கள் 22 பேரை சிறைபிடித்த இலங்கை கடற்படை! - கரை திரும்பாத 7 பேர் நிலை என்ன?

மீன் பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படையினர் துப்பாக்கி முனையில் சிறைபிடித்து சென்றனர். புரெவி புயல் காரணமாக பல நாட்களுக்கு பின் கடந்த வாரத்தில்தான் மீனவர்கள் கடலுக்கு சென்ற நிலையில் சிறைபிடிப்பு சம்பவம் மீனவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள்

பாக் நீரிணை பகுதியில் உள்ள பாரம்பரிய மீன்பிடி பகுதிகளில் தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பில் ஈடுபடுவது வழக்கம். குறைந்த கடல் பரப்பினை எல்லையாக கொண்ட ராமேஸ்வரம் மீனவர்கள் அவ்வப்போது இலங்கை கடற்பகுதிகுள்ளும் செல்ல நேரிடும். இவ்வாறு செல்லும் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடவதும், படகுடன் மீனவர்களை சிறைபிடித்து செல்வதும் வழக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் துவங்கிய கொரோனா ஊரடங்கு மற்றும் மீன்பிடி தடை காலம் ஆகியவற்றால் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதன் பின் கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் மீன்பிடிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் மீன்பிடிக்க சென்ற மீனவர்களை கொரானோ அச்சத்தின் காரணமாக இலங்கை கடற்படையினர் சிறைபிடிக்காமல் தவிர்த்து வந்தனர். ஆனால் அவ்வப்போது கற்கள், பாட்டில்கள் கொண்டு மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி வந்தனர். இதில் சில மீனவர்கள் காயமடைந்த சம்பவங்கலா அரங்கேறியது. இதனிடையே இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடிப்பில் ஈடுபடும் தமிழக மீனவர்களால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி இலங்கை மீனவர்கள் போராட்டங்கள் நடத்தினர். மேலும் இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை தடுப்பதில்லை என்றும் குற்றம்சாட்டி வந்தனர்.

சிறைபிடிக்கப்பட்ட படகுடன் இலங்கை கடற்படையினர்.

இதனிடையே ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று காலை 500-க்கும் மேற்பட்ட விசைபடகுகள் மீன்பிடிக்க சென்றன. இவர்கள் நேற்று பகலில் பாரம்பரிய பகுதிகளில் மீன்பிடித்து கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதனால் அச்சமடைந்த மீனவர்கள் கடலில் பாய்ச்சியிருந்த வலைகளை அறுத்துவிட்டு அங்கிருந்து கரையை நோக்கி திரும்பினர். இதனால் ஆத்திரம் அடைந்த இலங்கை கடற்படையினர் கற்களை வீசி மீனவர்களை தாக்கியதுடன் சில படகுகளையும் சிறைபிடித்தனர்.

சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள்

இதில் ராமேஸ்வரத்தை சேர்ந்த உதயன், தங்கச்சிமடத்தை சேர்ந்த ஆரோக்கிய குரூஸ், பாம்பனை சேர்ந்த அந்தோணிராஜ் ஆகியோருக்கு சொந்தமான 3 விசைப்படகுகளையும், அதில் இருந்த மீனவர்கள் சுரேஷ், அசோக், குமரேசன், கோபி, அப்துல்கலாம், ஜெனோவர், டைடஸ், சூசை, நம்பு, பாலா, ஆன்ட்ரூஸ் உள்ளிட்ட 22 மீனவர்களையும் சிறை பிடித்து சென்றனர். இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட இம்மீனவர்கள் விசாரணைக்காக காங்கேசன் துறை கடற்படை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

சிறைபிடிக்கப்பட்ட படகுடன் இலங்கை கடற்படையினர்.

இதனிடையே தங்கச்சிமடத்தை சேர்ந்த சிம்சன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகும் அதில் சென்ற 7 மீனவர்களும் கரை திரும்பவில்லை. இவர்களை தலைமன்னார் பகுதி கடற்படையினர் நடுக்கடலில் பிடித்து விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. இவர்கள் இன்று காலை வரை கரை திரும்பாத நிலையில் மீனவர்களின் நிலை என்னவென தெரியாமல் உள்ளது அவர்களது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் கொரோனா, மீன்பிடி தடை காலம், புரெவி புயல் என அடுத்தடுத்த தடைகளால் பல மாதங்கள் மீன்பிடிக்க செல்ல முடியாமல் வறுமையில் தவித்த மீனவர்கள் கடந்த சில நாட்களாகத்தான் மீன்பிடிக்க சென்று வருகின்றனர். இந்நிலையில் 22 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடித்து செல்லப்பட்ட சம்பவம் மீனவர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.



source https://www.vikatan.com/news/tamilnadu/22-tamil-nadu-fishermen-arrested-by-sri-lankan-navy

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக