வங்க கடலில் கடந்த மாதம்உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாகவும் பின்னர் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் உருவெடுத்து, புயலாக நேற்று வலுப்பெற்றது. புரெவி என பெயரிடப்பட்ட இந்த புயல் நேற்று இலங்கையை கடந்த நிலையில், இன்று மன்னார் வளைகுடா பகுதியை கடந்து தமிழக கடலோர பகுதிகளை அடையும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. தற்போது வங்கக்கடலில் பாம்பனுக்கு 90 கி.மீ. தொலைவில் புரெவி புயல் மையம் கொண்டுள்ளது. மேலும் மணிக்கு 12 கி.மீ வேகத்தில் புரெவி புயல் பாம்பனை நெருங்கிக்கொண்டிருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் திரிகோணமலையில் நேற்று கரையை கடந்த புரெவி புயல் பாம்பன், குமரி இடையே இன்று இரவு அல்லது நாளை அதிகாலைக்குள் மீண்டும் கரையை கடக்கும் எனவும் தெரிவித்துள்ளது. வானிலை ஆய்வு மையம். இந்நிலையில் புரெவி புயல் முன்னெச்சரிக்கையாக காரைக்காலில் 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
புரெவி புயல் இலங்கையில் கரையை கடந்துள்ள நிலையில் அதன் தாக்கம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இரவு மழை பெய்தது. பாம்பன் பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்த நிலையில், சென்னை, தஞ்சாவூர், நாகை, திருவாரூர், விழுப்புரம் உள்ளிட்ட தமிழகத்தின் பிற பகுதிகளிலும் கனமழை பெய்தது.
புரெவி புயலின் வெளிப்புற சுற்று மேகங்கள் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களை அடைந்து வருகிறது. இதன் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார புறநகர் பகுதிகள் பரவலாக இன்று முழுவதும் விட்டு விட்டு மழை பொழிவு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மலாய் தீபகற்பம் அருகே நிலவும் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சியின் காரணமாக தெற்கு அந்தமானில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
source https://www.vikatan.com/news/tamilnadu/cyclone-burevi-near-pamban-moving-12-km-speed
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக