`சங்கஷ்டம்' என்றால் கஷ்டங்கள் என்றுதான் பொருள். ஹர என்றால் போக்குதல். கஷ்டங்களைப் போக்கும் சதுர்த்தி நாள் என்பதால் அந்த நாளில் கணபதியை வழிபட்டு விரதமிருந்தால் நலம் சேரும் என்பர் பெரியோர்.
இந்த விரதத்தை சக்தி தேவி முதன்முதலில் நோற்று கணபதியை மகிழ்வித்தாள் என்று புராணங்கள் கூறுகின்றன. பௌர்ணமிக்கு அடுத்த நான்காம் நாள் சதுர்த்தி திதி, இதுவே சங்கடஹர சதுர்த்தி விரத தினம். அந்த நாள் முழுக்க விரதமிருந்து மாலையும் இரவும் சேரும் அந்தி நேரத்தில் விநாயகருக்கு அபிஷேக, அலங்காரங்கள் செய்து வழிபட்டால் எண்ணியவை நிறைவேறும் என்பது ஐதீகம்.
கார்த்திகை, பௌர்ணமி, ஏகாதசி, பிரதோஷ விரதமிருப்பவர்கள் முதலில் சதுர்த்தி விரதமிருந்த பிறகே தொடங்க வேண்டும் என்பதும் ஐதீகம். சந்திரன், ஸ்ரீகிருஷ்ணர், பிரம்மா, புருசுண்டி முனிவர், செவ்வாய், இந்திரன், அருந்ததி, தமயந்தி போன்றோர் இந்த விரதமிருந்து நலம் பெற்றார்கள் என்கின்றன புராணங்கள். மனநலம் குன்றியவர்களுக்கு மகத்தான நாளாக இந்நாள் உள்ளதென கூறுவார்கள். இந்நாளில் விநாயகப் பெருமானை வணங்கி வழிபட மனம் அமைதியுறும். தேவையற்ற சிந்தனைகள் விலகும். குறிப்பாக தீயப் பழக்கங்கள் (மது, புகை, சூதாட்டம் போன்றவை) கொண்டவர்கள் அதிலிருந்து விலக சங்கடஹர சதுர்த்தி விரதம் இருப்பது உதவும் என்பார்கள். உறுதியான தடுமாற்றமற்ற புத்தி வேண்டும் என்று நினைப்பவர்கள் கட்டாயம் இந்த விரதம் இருக்க வேண்டும் என்று பெரியோர்கள் கூறுவார்கள்.
சந்திரனின் ஆணவத்தை அடக்கி அவனுக்கு மீண்டும் நல்வாழ்வு அளித்தவர் கணபதி. அந்த நாள் சதுர்த்தியே. எனவே இந்நாளில் விரதமிருந்தால் மனோகாரகனான சந்திரன் விரதமிருப்பவருக்கு நிலையான புத்தியைக் கொடுத்து தீய பழக்கங்களிலிருந்து விடுபடச் செய்வார் என்பது நம்பிக்கை. ஆண்கள் இந்த விரதம் இருக்க முடியவில்லை என்றால் அவர்களுக்காக அவர்களுடைய தாயார், மனைவி போன்ற உறவுகள் கூட இருக்கலாம் என்கிறது சாஸ்திரம்.
இந்த நாளில் முழுக்க உபவாசம் இருப்பது நல்லது. முடியாதவர்கள் அடுப்பில் ஏற்றாத பண்டங்களை உண்ணலாம். சங்கடஹர சதுர்த்தி நாளில், வீட்டில் காலையும் மாலையும் கணபதிக்கு முன்னால் விளக்கேற்றுங்கள். அருகம்புல் மாலையோ வெள்ளெருக்கு மாலையோ சார்த்தி வழிபடுவது நல்லது. முடிந்தால் கொழுக்கட்டை, பாயசம், சுண்டல் என உங்களால் முடிந்த ஒரு நைவேத்தியம் செய்து படைக்கலாம். முடியாதவர்கள் ஒரு வாழைப்பழமோ கல்கண்டோ வைத்துக்கூட வழிபடலாம். எளியோர்க்கு எளியோன் கணநாதன் என்பதால் கவலை வேண்டாம். விரதம் அனுஷ்டிக்கும் நாளில் காலையிலோ அல்லது மாலையிலோ அருகிலுள்ள பிள்ளையார் கோயிலுக்குச் சென்று, 11 முறை வலம் வந்து வழிபட வேண்டும். முடிந்தவர்கள் அபிஷேகம், அர்ச்சனைக்கு பொருள்கள் வாங்கித் தரலாம். ஆலய பூஜைக்குப் பிறகு வீட்டுக்கு வந்ததும் ஊற வைத்த பச்சரிசியுடன் சிறிது வெல்லத்தூளும் வாழைப்பழமும் சேர்த்துப் பிசைந்து, பசுக்களுக்குக் கொடுக்கலாம். அல்லது ஒரு எறும்புக்காவது வெல்லம் வைக்கலாம். இதனால் கூடுதல் புண்ணியம் சேரும் என்கிறார்கள் பெரியோர்கள்.
Also Read: இந்த ஐந்தும் இருந்தால் உங்கள் வீட்டு பூஜை அறையே கோயில்தான்!
முதன்முதலாக சதுர்த்தி விரதம் இருப்பவர்கள் ஆவணி மாதத்தில் வருகிற விநாயக சதுர்த்தி தினத்தில் விரதம் தொடங்கி அதிலிருந்து மாதந்தோறும் வருகிற சதுர்த்தி நாள்களில் சங்கடஹர சதுர்த்தி விரதமிருந்து 11 சங்கடஹர சதுர்த்தி விரதம் அனுஷ்டித்து விரதத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும். சதுர்த்தி நாளில் விரதம் இருப்பவர்கள் அன்று முழுவதும் விநாயகர் குறித்த ஸ்லோகங்கள், பாடல்களைப் பாராயணம் செய்ய வேண்டும். மேலும் சக்தி வாய்ந்த மகா கணபதி மந்திரத்தை 11 முறை சொல்லி உங்கள் சங்கல்பங்களை வேண்டிக் கொள்ளலாம்.
ஸ்ரீமகா கணபதி மந்திரம்:
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லெளம் கம்
கணபதயே வர வரத சர்வஜனம் மே
வசமானய ஸ்வாஹா.
தொடர்ந்து சங்கடஹர சதுர்த்தி விரதம் இருப்பவர்கள் வீட்டில் நல்லதே நடைபெறும். தீமைகள் ஒழியும். தடைப்பட்டிருந்த சுபகாரியங்கள் நடந்தேறும். தீயப் பழக்கங்கள், கூடா நட்பு விலகும். மேலும் எதிலும் வெற்றி கிட்டும். தொழில், வியாபாரம் போன்றவற்றில் விருத்தி உண்டாகும். சுருங்கச் சொல்லின் அல்லவை விலகி நல்லவை சேரும் என்பது நிச்சயம்!
source https://www.vikatan.com/spiritual/gods/the-glory-and-specialties-of-sankatahara-chaturthi-viratham
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக