"நான் பொங்கிச் சாப்பிட இங்க வரலை. விளையாட வந்திருக்கேன்" – இது பாலாஜி அடிக்கடி சொல்லும் பஞ்ச் வசனம். "நாங்களும் விளையாடத்தான் வந்திருக்கோம். பின்னே பொடிமாஸ் பண்ணவா வந்திருக்கோம்?” - இது நிஷாக்கா ஒரு முறை சொன்ன கவுன்ட்டர் டயலாக்.
‘ரெண்டு டயலாக்குக்கும் சோடி போட்டு பாத்துடவமா... சோடி’ என்று பிக்பாஸ் இன்று முடிவு செய்து விட்டார் போலிருக்கிறது. “வாங்கோ... வாங்கோ... வாங்கறவங்கள்லாம் ஆபீஸ் ரூமிற்கு வாங்கோ" என்கிற ‘சிவாஜி’ படத்தின் விவேக் காமெடி மாதிரி ஒவ்வொருவரையும் ‘ஆபிஸ் ரூமிற்கு’ அழைத்து ஊமைக்குத்தாக குத்தி வெளியே அனுப்பி வைத்தார். வெளியே வந்தவர்களால் அதைச் சொல்லவும் முடியவில்லை. ஏற்கெனவே அடிவாங்கியவர்கள் மட்டும் ஒருவரையொருவர் பார்த்து ரகசியமாக சிரித்துக் கொண்டது கண்கொள்ளாக்காட்சி.
ஓகே... 61-வது நாளில் என்ன நடந்ததென்று பார்ப்போம்.
‘சொப்பன சுந்தரி. நான்தானே’ என்கிற பாட்டை பத்தாவது முறையாகப் போட்டார்கள். பாலாவும் அனிதாவும் சைக்கிளுக்கு காத்தடிப்பது போல் விநோதமாக டான்ஸ் ஆடி மகிழ்ந்தார்கள்.
மார்னிங் டாஸ்க். வீட்டு வேலைகளை செய்யும்போது அதில் நடனத்தைக் கலந்து வேலையை எப்படி சுலபமாக்குவது என்று கேபி சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். கேபியின் நடனத்திறமையை பிக்பாஸ் வீட்டில் இன்னமும் நாம் பார்க்கவில்லை. அல்லது சம்பந்தப்பட்ட காட்சிகள் எடிட்டிங்கில் போய் விட்டதா என்று தெரியவில்லை. திடீரென்று ஒரு சம்மர் சால்ட் பல்டி அடித்து ஆச்சர்யப்படுத்தினார் கேபி.
நிஷாக்காவின் எதிர்காலத்தைக் குறித்து 'அன்பு' அர்ச்சனா நிறைய பயந்து கொண்டிருந்தார். ‘இந்த ஆரி நிஷாவை தொடர்ந்து விமர்ச்சிக்கிட்டே இருக்காரு... இதனால அவளோட நகைச்சுவையுணர்ச்சி மழுங்கிப் போச்சின்னா அதற்கு யார் பொறுப்பு? விஜய் டிவி ஒரு மகத்தான ஸ்டாரை இழந்து விடுமே? அந்த இடத்தில் ‘பழைய ஜோக்’ தங்கதுரை வந்து அமர்ந்து விடுவாரே’ என்றெல்லாம் அதீதமாக நிஷாவின் மீது அன்பு செலுத்திக் கொண்டிருந்தார் அர்ச்சனா. ‘நிஷாவே ஆரியிடம் சென்று இது பற்றி நேராக பேசிவிட வேண்டும்’ என்பது அவர்களின் எதிர்பார்ப்பு. ரியோவும் ரமேஷூம் பல சமயங்களில் நிஷாவை ‘காமெடி பீஸாக’ நடத்துவது குறித்து அவர்களுக்கு எதுவுமே தோன்றவில்லை போல.
இதற்கிடையில் தன்னிடமிருந்த மனஸ்தாபங்களை ஆரியிடமே நேராக கேட்டுவிட்டார் நிஷா. ‘அய்யோ... நீ வேற. நானும் உன்னை மாதிரியே காமெடி பண்ண டிரை பண்ணேம்மா. அது வரலை...’ என்கிற சுயபரிசீலனை கலந்த உண்மையை சொன்ன ஆரிக்குப் பாராட்டு. ‘இந்த மூஞ்சுல ஏன் ரொமான்ஸ் வரமாட்டேங்குது’ என்பது போல் ஆரி சிரித்தால் கூட அதில் கோபமும் சமூகப் பொறுப்பும் புரட்சியும் மட்டுமே தெரிகிறது.
அடுத்ததாக ஆரம்பித்தது அந்த ரணகளமான டாஸ்க். ‘வாங்கோ... வாங்கோ... ஆபிஸ் ரூமூக்கு வாங்கோ!’ என்று மட்டும்தான் அதற்கு தலைப்பிடவில்லை. ஆனால் சம்பந்தப்பட்ட காமெடி காட்சி இங்கு நன்றாகப் பொருந்தியது. இந்த டாஸ்க் பற்றி போட்டியாளர்களிடம் பிக்பாஸ் எதையும் முன்கூட்டியே சொல்லவில்லை. அதுதான் பிளானும் கூட.
ரமேஷை முதலில் கூப்பிட்ட பிக்பாஸ், "வழக்கமான செயல்களைத் தாண்டி பிக்பாஸ் வீட்டில் உங்களின் பங்களிப்பு என்ன? மக்களை எப்படியெல்லாம் மகிழ்வித்திருக்கிறீர்கள் என்பதை அவர்களிடமே நேரடியாக சொல்லுங்கள். இது ஒரு அரிய சந்தர்ப்பம்” என்கிற டாஸ்க்கை தந்தார். "இந்த வீட்டில் இதுவரை நீ என்னதான் உருப்படியா செஞ்சி கிழிச்சிருக்கே?” என்பதே இதன் சுருக்கமான விளக்கம்.
இந்தக் கேள்வியின் பொருள் தெரியாமலும் பதில் சொல்ல முடியாமலும் மக்கள் தயங்கினார்கள்; மயங்கினார்கள். மென்று விழுங்கினார்கள். தலையைச் சொறிந்து கொண்டார்கள்.
ஒரு பழைய நகைச்சுவை நினைவிற்கு வருகிறது. சுமாராக படிக்கக்கூடிய ஒரு மாணவன் தேர்விற்குத் தயாராகிக் கொண்டிருந்தான். பசு மாட்டைப் பற்றிய கட்டுரை ஒன்றை அவன் நன்றாகப் படித்து தயார் ஆனான். அது பற்றிய கேள்வி நிச்சயமாக வரும் என்று யாரோ சொல்லியிருந்தார்கள். ஆனால் தேர்விற்குச் சென்ற போது அவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ‘தென்னை மரம் பற்றி இருபது வரிகளுக்கு மிகாமல் எழுதுக’ என்கிற கேள்விதான் வந்தது. பசுமாட்டைக் காணோம்.
கேள்வியையே பதில் போல் பெரிதாக நீட்டி எழுதுவது உள்ளிட்ட விஷயங்களில்தான் நம்மாட்கள் அசகாய சூரர்கள் ஆயிற்றே? நம்மாள் பார்த்தான்... பசு மாட்டைப் பற்றி தான் படித்திருந்ததை எல்லாம் விரிவாக எழுதி விட்டு, 'இப்படிப்பட்ட பசுமாட்டை தென்னை மரத்தில் கட்டுவார்கள்’ என்று கடைசியில் ஒரு வரி சேர்த்து விட்டான். கட்டுரையின் தலைப்பு ‘தென்னை மரம்’.
போட்டியாளர்கள் பதில் சொன்ன பாங்கு பெரும்பாலும் இப்படித்தான் இருந்தது. ‘டாஸ்க்லாம் சரியா பண்ணியிருக்கேன். பாத்திரம் பளிச்சுன்னு கழுவியிருக்கேன். நல்லா டிரஸ் பண்ணுவேன்’ என்றெல்லாம் அவர்கள் சொல்லிக் கொண்டிருக்கும் போது ‘நான் என்ன சொன்னேன்... நீ என்ன வாங்கிட்டு வந்திருக்கே’ என்று வாழைப்பழ ஜோக் கவுண்டமணி மாதிரி பிக்பாஸ் இடைமறித்துக் கொண்டேயிருக்க, ‘அதாண்ணே இது’ என்று செந்தில் மாதிரியே மறுபடி மறுபடி பதில் சொல்லிக் கொண்டிருந்தார்கள், போட்டியாளர்கள்.
சிலர் திடீரென்று, "இதன் மூலம் நான் சொல்ல வரும் நீதி என்னன்னா…” என்று நான் எழுதும் கட்டுரையைப் போலவே ஆரம்பிக்க ‘அட்வைஸ் பண்ணாதீங்க’ என்று அவர்களை பங்கம் செய்தார் பிக்பாஸ். இதில் நிஷாவின் பங்குதான் அதிக ரகளையானது. ‘ஓ... பேசணுமா... இது நமக்கு கைவந்த கலையாச்சே’ என்று ‘சிலையைச் செதுக்கிட்டு இருக்கும் போது உதிர்ந்து கீழே விழுந்த கற்கள் சிலையைக் கேட்டுச்சாம்’ என்று அவர் உற்சாகமாக ஆரம்பிக்க, "உங்க பட்டிமன்றத்தை கொஞ்சம் ஆஃப் பண்றீங்களா” என்று பிக்பாஸ் குறுக்கே சொன்னது அட்டகாசமான காமெடி. பெரும்பாலான பட்டிமன்ற பேச்சாளர்கள் தாங்கள் மனப்பாடம் செய்து வருவதைத்தான் மேடையில் அடித்து விடுகிறார்கள் என்பது இதன் மூலம் தெரிகிறது.
முதலில் வந்த ரமேஷ், இப்படியொரு விபரீத டாஸ்க்கை எதிர்பார்க்காமல், "பிக்பாஸ் கொஞ்சம் டைம் எடுத்துக்கலாமா?” என்று அமர்த்தலாக கேட்க ‘ஓ... டைம் எடுத்துக்கிட்டா மட்டும் அப்படியே இவரு ஆற்றித் தள்ளிடுவாருடாடோவ்’ என்று பிக்பாஸ் நினைத்துக் கொண்டாரோ என்னமோ அதை அனுமதித்தார். ரமேஷூம் தயங்கி மயங்கி எதை எதையோ சொல்ல ‘சரி கிளம்புங்க’ என்று அனுப்பி வைத்துவிட்டார்.
ஆபிஸ் ரூமில் அடிவாங்கி ரத்தக் காயத்துடன் வெளியே வந்தவர்களை ‘வெளியே அடிச்சுக்கூட கேப்பாங்க... சொல்லாதீங்க’ என்று பிக்பாஸ் எச்சரித்து அனுப்பியதால் ‘ஹிஹி. ஒண்ணுமில்ல. பிபி சுகர்லாம் செக் பண்ணாங்க’ என்று சமாளித்தார்கள். உள்ளே அவர்கள் பட்ட அவஸ்தைக்கு நிச்சயம் அவர்களின் ரத்த அழுத்தம் உயர்ந்திருக்கும்.
ஆபிஸ் ரூம் சற்று இருளாக பின்னால் மஞ்சள் பல்புகள் நிறைய எரிந்து கொண்டிருக்க திகிலாகத்தான் வடிவமைக்கப்பட்டிருந்தது. போட்டியாளர்கள் நிறைய பல்பு வாங்கியதின் குறியீடோ என்னமோ... ‘இங்க என்னய்யா ஃபர்ஸ்ட் நைட்டா நடக்குது? இருளோன்னு கெடக்குது... ஒருத்தன் நெஜம் சொல்றானா... பொய் சொல்றானான்னு எப்படி தெரியும், லைட்டைப் போடுங்கய்யா’ என்று பல்ராம் நாயுடு சொன்ன மாதிரியே நமக்கும் நினைக்கத் தோன்றியது. எதிரே ஒரு டி.வி வேறு. அதில் விஜய் டிவி சீரியலைப் போட்டிருந்தாலாவது மக்களுக்குச் சற்று பொழுது போயிருக்கும். அதிலும் பிக்பாஸின் லோகோ மட்டுமே இருந்தது.
இந்த டாஸ்க்கின் ஒரு பகுதியை சரியாகப் புரிந்து கொண்டு ‘மக்களை நோக்கி’ முதலில் பேச ஆரம்பித்தவர் கேபிதான். ரம்யா போன்றவர்களே இதில் தடுமாறியபோது ரமேஷ், ஆஜீத், ஷிவானி போன்ற மிக்ஸர் பாக்கெட்டுகள் அதிகம் மயங்கியதில் ஆச்சர்யமில்லை.
ஆபிஸ் ரூமிலிருந்து வெளியே வந்த ஆஜீத், எதையாவது சொல்லி சமாளிக்க வேண்டுமே என்று ‘பிளட் டெஸ்ட் எடுக்கறாங்க’ என்று அடித்து விட ‘அய்யோ ஊசி குத்தறாங்களா?” என்று சனமும் நிஷாவும் அலறினார்கள். ‘அய்யோ... எங்க அம்மா இப்ப இல்லையே?’ என்று சிணுங்கிய ஷிவானியைப் பார்த்து சிரிப்பாகவும் பரிதாபமாகவும் இருந்தது. ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் குழந்தைகளை பெற்றோரைச் சாராமல் வாழ பழக்க வேண்டும். இல்லையென்றால் இப்படித்தான் மனதளவில் எல்கேஜி பாப்பாக்களாக இருப்பார்கள்.
கோவிட் 19 நடைமுறைகளையெல்லாம் மிகக் கறாராக பிக்பாஸ் வீட்டிற்குள் பின்பற்றுகிறோம் என்று சொன்னார்கள். கமல் கூட இதை உறுதிப்படுத்தினார். ஆனால் போட்டியாளர்களின் தலையைச் சுற்றி ஒரு ஈ பறந்து கொண்டேயிருந்தது.
வெளியே வந்த ஆஜீத்தும் கேபியும் ‘உள்ளே எப்படியெல்லாம் அசிங்கப்பட்டார்கள்’ என்பதை தாழ்ந்த குரலில் பேசிக் கொண்ட காட்சி சுவாரஸ்யமான காமெடி. ‘இப்ப என்ன நேரம்’ என்று கேபி கேட்டதற்கு ‘ரொம்ப கெட்ட நேரம்’ என்று சுமாரான ஜோக் அடித்தார் ஆஜீத். பொங்கல் சாப்பிட்ட எபெக்டில் பக்கத்தில் ரம்யா மயங்கிக் கொண்டிருந்ததால் அவர் காதில் விழுந்திருக்காது என்றே நம்புவோம்.
சோமை தூக்கத்தில் எழுப்பி விசாரித்தால் கூட ‘2010-ல் ‘அழகிய தமிழ் மகன்'-ன்னு ஒரு ரியாலிட்டி ஷோல கலந்துக்கிட்டேன்’ என்றுதான் ஆரம்பிப்பார் போலிருக்கிறது. இங்கும் அவர் அதே புராணத்தை ஆரம்பித்து பல்பு வாங்கினார். தனது பிரச்னையிலிருந்து தாண்டி வந்த கதையைப் பற்றி அவர் ஆரம்பிக்க ‘அட்வைஸ் பண்ணாதீங்க’ என்று இடைமறித்தார் பிக்பாஸ். ‘இது அட்வைஸ் இல்ல... tip’ என்று கமல்ஹாசனின் பாணியை அப்போது அவர் டைமிங்காக காப்பியடித்தது சுவாரஸ்யம். ‘எங்க வீட்ல சாமின்றது பாட்டிதான்’ என்றெல்லாம் சென்டியாக எதையோ சொல்லி ‘மொக்கை குமாராக’ மாறினார் சோம்.
வெளியே வந்த சோம் ‘வெறும் ECG-தான் எடுத்தாங்க’ என்று அடித்துவிட்டவர், ரியோவிடம் ‘பேண்டைக் கழட்டிட்டாங்க மச்சான்’ என்று குறியீடாக சொன்னது நல்ல காமெடி. ‘மாமா டவுசர் கழண்டுச்சே’ என்று உண்மையிலேயே உள்ளே பேண்ட்டை உருவி விட்டார் பிக்பாஸ்.
ஆனானப்பட்ட ரம்யாவே இதற்கு தடுமாறும் போது ஷிவானி என்னதான் செய்வார்?! இதர போட்டியாளர்கள் சொன்னதைப் போலவே ஏதேதோ சொல்லி சமாளித்தவர், ‘பிக்பாஸ்... என்னை விட்ருங்க. இந்த அறுபது நாள்ல நான் எதுவுமே பண்ணலை போலிருக்கு’ என்று ஏறத்தாழ கதற ஆரம்பித்து விட்டார். நல்லவேளை, பாலாஜியை தினம் எழுப்பியது, தலைவாரிவிட்டது, ‘மம்மு’ ஊட்டியது போன்ற அத்தியாவசிய பணிகளை எல்லாம் சேர்க்கவில்லை.
சற்று சலிப்பாக சென்று கொண்டிருந்த இந்த டாஸ்க் நாளில், அடிவாங்கி வெளியே வந்தவர்கள் ஒருவரையொருவர் பார்த்து நமட்டுச் சிரிப்புடன் சிரித்துக் கொண்டதுதான் சுவாரஸ்யமான காட்சி. ‘எனக்கு அழுகையே வந்துடுச்சு’ என்று ஷிவானி ஆரம்பிக்க, பக்கத்தில் யாரோ மூட்டையாக படுத்துக் கொண்டிருந்ததை ஆஜீத் சுட்டிக் காட்டியதும் அலறியடித்து வெளியே போனார்கள்.
இருப்பதிலேயே ஹைலைட் ஆன காமெடி, நிஷா வெளியே வந்த போதுதான் நடந்தது. ‘ரொம்ப அவமானமாப் போச்சு’ என்று நிஷா ஆரம்பிக்க, ஏற்கெனவே ஊமைக்குத்தாக வாங்கிய ரமேஷ், ரம்யா, ஆஜீத் ஆகியோர் விழுந்து விழுந்து சிரித்தார்கள். "‘பங்களிப்பு... பங்களிப்பு...’ன்னு அடிக்கடி சொல்றீங்களே.. அது என்னாது’ன்னு பிக்பாஸ் கேட்டுட்டாரு.. பங்கமா போச்சு" நிஷா பரிதாபமாக சொல்ல ரம்யாவால் சிரிப்பை அடக்க முடியவில்லை. நிஷாவிற்கும் சிரிப்பாணி பொங்கிக் கொண்டு வந்தது.
உண்மையில் பிக்பாஸ் எதிர்பார்க்கும் பதில் என்னவென்று நமக்குமே தலைசுற்றியது. அடிவாங்கும் போட்டியாளர்களைப் பார்க்கும் போது பரிதாபமாக இருந்தது. பாஸ் என்கிற பாஸ்கரனில் ஆர்யா, நயன்தாரவிடம் கேட்பதைப் போல... ‘ஏங்க. உங்களை எப்படி கரெக்ட் பண்றதுன்னே எனக்குத் தெரியலை.. நீங்களே ஒரு நல்ல ஐடியா கொடுங்களேன்’ என்று வெள்ளந்தியாக கேட்பதைப் போல பிக்பாஸிடமே இதைக் கேட்டு விட வேண்டும் போல.
ஓகே... இந்த டாஸ்க்கைப் பற்றி சற்று சீரியஸாக யோசிப்போம். (ஆரம்பிச்சிட்டாண்டா!)
ஒருவர் இருக்கிறார்... அவர் பெயர் கோயிஞ்சாமி என்று வைத்துக் கொள்வோம். கோயிஞ்சாமி தினமும் அலுவலகத்திற்குச் செல்கிறார். தனக்கு தரப்பட்ட பணிகளை மட்டும் அதற்கென்று உள்ள வழிமுறையில் அரைகுறையாகவோ, சிறப்பாகவோ தினமும் செய்கிறார். மதியம் தயிர்சாதம், மாலை 23சி பேருந்து என்று அவரது வாழ்க்கை தினமும் இயந்திரமாக கழிகிறது. இப்படியே பல ஆண்டுகள்.
ஒரு நாள்... அவருடைய மேலிட நிர்வாகம் அவரை அழைக்கிறது. ‘இந்த நிறுவனத்தின் மேம்பாட்டிற்காக, வளர்ச்சிக்காக, வழக்கமான பணிகளைத் தாண்டி நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள்?’ என்று கேட்கிறது என்று வைத்துக் கொள்வோம். கோயிஞ்சாமியால் அதற்கு சரிவர பதில் சொல்ல முடியாது. ‘என்னுடைய வேலையை நான் சரியாத்தானே செஞ்சேன்’ என்று தயங்கி மறுகி பதில் சொல்வார்.
அதாவது அவருடைய ஏரியாவில் உள்ள பணிகளை மட்டும் சம்பிரதாயமான வழிமுறையில் ஓர் இயந்திரம் போல் தினமும் செய்ததைத் தவிர அவர் வேறு புதுமை எதையும் செய்யவில்லை. ‘Out of the box thinking’-ல் யோசித்து சம்பிரதாயமான வழிமுறைகளைத் தாண்டிச் சென்று எதையும் மேம்படுத்தவில்லை. எந்தப் புதுவழியையும் கண்டுபிடிக்கவில்லை. ‘Hard Work’-ஐ விடவும் ‘Smart Work’ஐ அதிகம் கணக்கில் எடுத்துக் கொள்ளும் காலம் இது.
இதைப் போலவே பிக்பாஸ் போட்டியாளர்கள், வழக்கமான பணிகளைத் தாண்டி தங்களின் தனித்தன்மையோடு மக்களை எவ்வாறு entertain செய்திருக்கிறார்கள் என்று பார்த்தால் அங்குள்ள பல போட்டியாளர்கள் வாழைப்பழச் சோம்பேறிகளாக இருக்கிறார்கள். நடனத்திறமையுள்ள கேபி அது தொடர்பாக எதையும் செய்தது போல் தெரியவில்லை. பெரிய டேப்ரிகார்டர் வேல்முருகன் சென்றுவிட்ட பிறகு சின்ன டேப்ரிகார்டர் ஆஜீத் அதிகம் பாடியது போல் தெரியவில்லை.
அர்ச்சனாவின் மடியில் தலைசாய்ந்திருந்த சாகசத்தைத் தாண்டி சோம் MMA தொடர்பாக எந்த டெமோவையும் செய்யவில்லை. குறைந்தது அவர் உடற்பயிற்சி செய்யும் காட்சி கூட ஒன்றும் காட்டப்படவில்லை. ‘எங்க பப்லுவைத் திட்டாதீங்க’ என்கிற காமெடி மாதிரி ரியோவிற்கு நிஷா பாதுகாப்பாக வந்து நின்ற காட்சிகள்தான் அதிகம்.
ஒரு சராசரி நபர் செய்வதைத் தாண்டி ‘உங்களின் தனித்திறமை என்ன?’ என்றால் நம்மில் பலர் திகைத்து நின்று விடுவோம் அல்லது எதை எதையோ சொல்லி சமாளிக்கப் பார்ப்போம். அப்படித்தான் பிக்பாஸ் போட்டியாளர்களும் இப்போது தடுமாறுகிறார்கள். ஐடி நிறுவனங்களில் ‘appraisal’ என்றொரு சடங்கை செய்வதைப் போல இங்குள்ள போட்டியாளர்களுக்கும் ஓர் எச்சரிக்கை மணியை பிக்பாஸ் அடித்திருக்கிறார். ஒருவகையான acid test.
இதன் மூலம் வருகிற நாட்களில் இவர்கள் தன்னை உணர்ந்து போட்டியை இன்னமும் கடுமையாக்குவார்கள் என்று அவர் எதிர்பார்க்கிறார். எஞ்சியிருக்கும் நாற்பது நாட்களிலாவது இவர்கள் மேம்படுத்தப்பட்ட பங்களிப்பை தருவார்கள் என்பது பிக்பாஸின் நோக்கமாக இருக்கலாம். ‘மக்களை சந்திச்சிட்டு வர்றேன்’ என்று சொன்ன நிஷா போன்ற போட்டியாளர்களின் அதீதமான நம்பிக்கையை இந்த டாஸ்க் சுக்கு நூறாக உடைத்திருக்கிறது.
இந்த டாஸ்க்கிற்காக இன்று அழைக்கப்பட்டவர்களில் – ரம்யாவைத் தவிர – இதர அனைவருமே ‘மிக்ஸர் பாக்கெட்டுக்களாக’ இருந்ததைக் கவனிக்கலாம். மீதமிருப்போரும் இந்த அமில சோதனைக்கு நாளை உட்படுத்தப்படுவார்கள் என்று தோன்றுகிறது.
இந்த ரணகளமான டாஸ்க்கிற்கு இடையில் ஒரு விஷயம் சொல்ல விட்டுப் போயிற்று. வரிசைப்படுத்தப்பட்ட விவகாரத்தில் நேற்று நடந்தவற்றை மக்கள் இன்னமும் பேசிக் கொண்டிருந்தார்கள். ‘கால்சென்டர் டாஸ்க்ல சனம் பாதிதான் செஞ்சாங்க. அவங்களையும் இரண்டு அழைப்புகளை ஏற்றவர்களையும் எப்படி ஒரே மாதிரி மதிப்பிட முடியும்?’ என்கிற பழைய புராணத்தை இன்னமும் பாடிக் கொண்டிருந்தார் பாலாஜி.
"நீங்க ஏன் சனத்திற்கு சப்போர்ட் பண்ணீங்க... அது சனம் பண்ண வேண்டிய வேலைதானே?" என்று காண்டுடன் கேட்டுக் கொண்டிருந்தார் அனிதா. அதனால்தான் அவருடைய இடம் பறிபோயிற்று. ‘நீதி எங்கெல்லாம் நிலைநாட்டப்பட வேண்டுமோ.. அங்கெல்லாம் இந்த ஆரி இருப்பான்’ என்று கிருஷ்ண பரமாத்மாவாக அபயக்கரத்தை நீட்டி ‘பஞ்ச்’ பேசிக் கொண்டிருந்தார் ஆரி.
“உனக்கு ரெண்டு கால் வந்தது இல்லையா... எனக்கும் ரெண்டு கால் வந்தது... சனத்திற்கு ஒரு கால்தான் இருந்தது" என்று இவர்கள் பேசிக் கொண்டிருந்ததை, டாஸ்க் பற்றி அறியாதவர்கள் எவராவது பார்த்தால் குழம்பிவிடுவார்கள். ஒருக்கால் அவர்கள் தவறாக கூட புரிந்து கொள்ளலாம்.
ஓகே. நண்பர்களிடம் ஒரு கேள்வி. போட்டியாளர்கள் தடுமாறியதைப் பார்த்து நாம் சிரித்துக் கொண்டிருந்திருப்போம்.. அல்லது பரிதாபமாக உணர்ந்திருப்போம். ‘இந்த பிக்பாஸிற்கு என்னதான்யா வேண்டும்’ என்று கூட நினைத்திருப்போம்.
"போட்டியாளர்கள் என்ன மாதிரியான பதில்களைச் சொல்லியிருந்தால் அது சரியாக இருந்திருக்கக்கூடும்?”
‘நான் ஏம்ப்பா நடுராத்திரில சுடுகாட்டுக்குப் போகணும்?’ என்று நினைக்காமல், உங்களை அந்த இடத்தில் வைத்துக் கொண்டு பதில்களை கமெண்ட் பாக்ஸில் சொல்லுங்கள். இதன் மூலம் பார்வையாளர்களின் தரப்பையும் அறிய முயல்வோம்.
source https://cinema.vikatan.com/bigg-boss-tamil/office-room-kinda-task-bigg-boss-tamil-season-4-day-61-highlights
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக