Ad

புதன், 9 டிசம்பர், 2020

தேனி: சுருளி அருவியில் கல்வெட்டை மறைத்து ரூ.5 லட்சத்தைச் சுருட்டிய வனத்துறை அதிகாரி!

தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் அமைந்துள்ளது சுருளி அருவி. தினமும் நூற்றுக்கணக்கானோர், விடுமுறை நாள்களில் ஆயிரக்கணக்கானோர், அருவிக்கு வருகை தருவது வழக்கம். மேகமலை வன உயிரின சரணாலயத்துக்கு உட்பட்ட சுருளி அருவியை வனத்துறை, தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. அருவிக்குச் செல்ல கட்டணம் வசூலும் செய்கிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்ட சுருளி அருவி, ஊரடங்கு தளர்வுகளுக்கு பின்னர் இப்போது வரை திறக்கப்படவில்லை.

சுருளி அருவி

சுருளி அருவியில், மக்கள் தங்களது முன்னோர்களுக்கு திதி உட்பட சடங்குகள் செய்யப்படுவது வழக்கம். மேலும், அங்கேயே சமைத்து, அன்னதானமும் செய்வர். மக்களின் வசதிக்காக, கம்பத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவர், 2 ஆண்டுகளுக்கு முன்னர், அருவி வளாகத்தில் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில், சமையலறை, மக்கள் அமர்ந்து சாப்பிடும் மண்டபம் ஆகியவற்றைக் கட்டிக்கொடுத்தார்.

Also Read: சுருளி மலை இரட்டைக் கொலை வழக்கு.! – பின்னணியும் திருப்பம் உண்டாக்கிய ஜூனியர் விகடன் செய்தியும்

இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்னர், கட்டடத்தில் இருந்த ரமேஷ் பெயர் பொறித்த கல்வெட்டை வனத்துறை அதிகாரிகள் பெயர்த்து எடுத்திருக்கிறார். பின்னர், அதனை மறைத்துவைத்துவிட்டு, அரசு செலவில் கட்டடம் கட்டியதாக போலிக் கணக்கு எழுதி பணத்தைச் சுருட்டியதாக சர்ச்சை எழுந்தது.

சுருளி அருவி

இந்நிலையில், மேகமலை உதவி வனப்பாதுகாவலர் குகனேஷ், சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரிகள் மற்றும், கட்டடம் கட்டிக்கொடுத்த ரமேஷ் உள்ளிட்ட சிலரிடம் விசாரணை மேற்கொண்டார். விசாரணையில், சுருளி அருவி வனவர் திலகர், 5,35,500 ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

Also Read: சுருளி அருவியில் `திடீர் கட்டண உயர்வு’ - சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சி!

குகனேஷின் விசாரணை அறிக்கை, மேகமலை வன உயிரினச் சரணாலயப் பாதுகாவலர் போன்ஸ்லே சச்சின் துக்காராமிடம் சமர்பிக்கப்பட்டது. அறிக்கையில் அடிப்படையில், வனவர் திலகரை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார் போன்ஸ்லே. மேலும், சுருளி அருவியில் இதே போல வேறு ஏதேனும் முறைகேடுகள் நடந்துள்ளனவா என விசாரித்து வருவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கல்வெட்டு

Also Read: தேனி: சிறுவனின் உயிரைப் பறித்த அரசு கட்டடத்துக்காகத் தோண்டப்பட்ட குழி! - என்ன நடந்தது?

தனிநபர் ஒருவர், பொது நலனைக் கருத்தில் கொண்டு கட்டிக்கொடுக்கப்பட்ட கட்டடத்தை காண்பித்து அரசை ஏமாற்றி லட்சக்கணக்கில் பணத்தை சுருட்டிய சம்பவம், தேனி மாவட்ட வனத்துறை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.



source https://www.vikatan.com/government-and-politics/corruption/theni-forest-officials-suspend-forester-over-5-lakh-rupees-duping-from-government

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக