ஒவ்வொரு முறையும் ஏதேனும் சர்ச்சை கிளம்பும் போதுதான், நாம் சாப்பிடும் உணவுகளின் மீது நமக்கு அக்கறை பிறக்கும். பெப்ஸி, கோககோலா போன்ற குளிர்பானங்கள் அதிகமாக விற்றுக்கொண்டிருந்த போது, சினிமா நடிகர்களும் கிரிக்கெட் வீரர்களும் அவற்றைக் குடித்து சாகசங்கள் செய்துகொண்டிருந்த நேரத்தில், திடீரென பூச்சிக்கொல்லி படிமங்கள் அவற்றில் இருப்பதாக ஓர் அறிக்கை வெளியானது. சட்டென அந்நிறுவனங்களின் பங்குச்சந்தை அடிவாங்கியது. விற்பனைகள் குறைந்தன. தொழிற்சாலைகள் உற்பத்தியைக் குறைத்தன. இப்போது அப்படியான நிலை தேனுக்கு வந்திருக்கிறது.
இந்தியாவில் அதிகம் விற்கப்படும் 13 பிராண்டுகள் ஜெர்மனியில் நடத்தப்படும் NMR (Nuclear Magnetic Resonance) சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அறிவியல் மற்றும் சுற்றுச்சூழலுக்கான மையம் (Centre for Science and Environment - CSE) இந்த பரிசோதனைகளை மேற்கொண்டது. அவற்றுள் பத்து நிறுவனங்கள் இந்த சோதனையில் கலப்படமான தேனை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவற்றுள் டாபர், இமாமி, பதஞ்சலி போன்ற பெரு நிறுவனங்களும் அடக்கம்.
அந்நிய குளிர்பான நிறுவனங்களின் மீது 2006-ம் ஆண்டு இதே CSE தலைமை அதிகாரி சுனிதா நரைன்தான் ஆதாரங்களோடு குற்றம் சுமத்தினார். சில காலம் அவற்றின் விற்பனை சரிந்தன. பின்பு நடிகர்களை வைத்து, கோலா பாதுகாப்பானதுதான், நாங்கள் சொல்கிறோம் என கோடிகளில் விளம்பரம் செய்தன கோலா நிறுவனங்கள். இப்போது தேனில் பெருத்த முதலீடுகளைச் செய்திருக்கும் பெரு நிறுவனங்களின் மீது கல்லெறிந்திருக்கிறார் சுனிதா நரைன். அமைதி காக்கும் நிறுவனங்கள், இவரின் கூற்றுக்கு அடுத்த நாளே மறுப்புக் கடிதம் எழுதின. இந்தியாவிலேயே NMR பரிசோதனை மையம் சொந்தமாக வைத்திருக்கும் ஒரே நிறுவனம் நாங்கள்தான், இது எங்கள் நிறுவனத்தின் ஸ்திரத்தன்மை மீது விடுக்கப்பட்டிருக்கும் சவால் என்கிறது டாபர். இந்தியாவின் 22 FSSAI தரச்சான்றிதழும் பெற்று, எந்தவித இனிப்பு கூட்டல்களும் சேர்க்கப்படாத ஒரே தேன் எங்களுடையதுதான் எனத் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் வெளியிட்டிருக்கிறது டாபர். அவர்களின் ட்விட்டர் பயோ உட்பட பலவற்றை இந்த சர்ச்சையால் மாற்றியிருக்கிறார்கள். ஆன்லைன் தளங்களில் அதிகமாக 1+1 ஆஃபர்களின் வாடிக்கையாளர்களால் தேர்வு செய்யப்படும் நிறுவனங்களில் டாபரும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இமாமி நிறுவனமும் இப்படியானதொரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. இந்தியா கேட்டிருக்கும் அனைத்து சோதனைகளிலும் நாங்கள் பாஸாகி இருக்கிறோம். உலக அரங்கில் இந்திய நிறுவனங்களின் பெயரைக் கெடுக்கப் பார்க்கிறார்கள் என்கிறது பாபா ராம் தேவின் பதஞ்சலி நிறுவனம்.
Saffola, Markfed Sohna, Nature’s Nectar இந்த மூன்று நிறுவனங்கள் தான் NMR சோதனையில் தகுதி பெற்றவை. இரண்டு நாள்களுக்கு முன்பு இந்த நிறுவனங்கள் போலி என ட்விட்டரில் பணம் கொடுத்து டிரெண்டு செய்தன சில நிறுவனங்கள்.
உண்மையில் தேனில் இப்படியான கலப்படங்களை எளிதாகச் செய்ய முடியுமா?
ஆதி மனிதன் தேனைச் சுவைத்த காலம் என்பது 9000 ஆண்டுகளுக்கு முன்பாம். ஆம், நமக்கும் தேனிக்களின் மூலம் கிடைக்கும் தேனுக்குமான பந்தம், ஒன்பதாயிரம் ஆண்டுகளைக் கடந்தது. உலக அளவில் தேனிக்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு குறைந்து கொண்டே வருகிறது. மாறிவரும் இயற்கைச் சூழல், செயற்கையாக நாம் உருவாக்கும் தேனீக்களுக்கான பூக்கள் போன்றவற்றால், தேனீக்களுக்கு ஒருவித அழுத்தம் உருவாகிறதாம். இன்னும் எளிமையாகச் சொல்ல வேண்டுமென்றால், தேனீக்கள் இப்போது இந்தத் தொழிலைச் செய்ய விருப்பம் காட்டுவதில்லையாம். இத்தனை ஆண்டு ஏமாற்றத்துக்குப் பின் இந்த முடிவு சற்று சரிதானே?!
நல்ல தேன் என்பது, பூவிலிருந்து ஒரு தேனீ எடுத்துவருவதை, அதன் வாயிலிருந்து இன்னொரு தேனீ அமிலங்களுடன் கவ்விக்கொள்ளுமாம். இப்படியாக மூன்று தேனீக்களின் வாயில் மாறிய பின்னர்தான் தேனானது அடையில் சேகரிக்கப்படுகிறது. ஆம், தேன் என்பது வெறுமனே பூக்களின் இனிப்பு மட்டுமல்ல, அதன் சத்து என்பது தேனின் அமிலமும் சேர்ந்ததுதான்.
இதைத்தான் தேனீ வளர்ப்பார்கள் கவர்ந்துவந்து பெரு நிறுவனங்களுக்கு விற்கிறார்கள். சொசைட்டிகளில் மாடுகளிடமிருந்து கறந்து வந்து பாலை ஊற்றுவது போல. அமெரிக்காவில் 50% அளவுக்கு தேனீக்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது என்கிறது ஓர் ஆய்வு (Netflix Documentary Rotten). ஆனால், அதை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. நமது தேவைக்கும் அதிகமாக தேன் உற்பத்தியாக்கிக்கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் தேனின் தேவை என்பது 18,000 டன் அளவுக்கு அதிகமாகிக்கொண்டிருக்கிறது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 4,000 மெட்ரிக் டன் அளவுக்கு தேன் உற்பத்தி செய்யப்படுகிறது.
உலக அளவில் அதிக அளவிலான தேனை அமெரிக்கர்கள்தான் உட்கொள்கிறார்கள். இப்போது இந்தியாவில் நடந்திருக்கும் இந்த தேன் கலப்பிட சோதனைகள் இருபது ஆண்டுகளாக அமெரிக்காவில் நடந்துவருகிறது. அமெரிக்காவின் மார்க்கெட்டை காலிசெய்தது சீனாதான். தற்போது இந்திய மார்க்கெட்டை உலக அரங்கில் காலி செய்திருப்பதும் அதே சீனாதான்.
ஆம், ஒரு சுவாரஸ்ய ஃபிளாஷ்பேக்.
90-களில் அமெரிக்காவின் தேவை தேனில் அதிகமாக இருந்துவந்தது. 9 மில்லியன் அளவுக்கான தேன் அடைகள் தங்களிடம் இருப்பதாக மார்தட்டியது சீனா. பெரும் படைகளில் அமெரிக்க மார்க்கெட்டுக்குள் உள்நுழைந்தது. அமெரிக்கா நிறுவனங்கள் 200 ரூபாய்க்கு விற்கிறார்கள் என்றால், சீனா அதை 100 ரூபாய்க்கு விற்றது. பாதிக்கு பாதி. விழிபிதுங்கிப் போயின அமெரிக்க நிறுவனங்கள். அமெரிக்காவில் உற்பத்தி செய்யும் விலையைவிட குறைவான விலைக்குக் கொடுத்தது சீனா.
கரும்பு, பீட்ரூட், சோளம் என பல்வேறு பொருட்களில் இருந்து கிடைக்கும் சர்க்கரைகள் தேனுடன் கலக்கப்பட்டு, ஒரிஜினல் தேனாக விற்கப்படுகிறது. இவற்றை சில சோதனைகளின் மூலம் எளிமையாக கண்டறியமுடிந்தது. எல்லாவற்றின் டூப்பையும் செய்யும் சீனா இதற்கும் மாற்றுவழி கண்டுபிடித்தது. அரிசியில் இருந்து எடுக்கப்படும் சர்க்கரை எந்த சோதனையிலும் சிக்கவில்லை. சீனசர்க்கரை - இதுதான் அமெரிக்காவில் கொடி கட்டிய தேன்களின் ரகசியம். அமெரிக்க நிறுவனங்கள் வீழ்கின்றன, சீன தேனிலும் அமெரிக்காவால் குற்றம் சொல்ல முடியவில்லை. எப்படித் தடுப்பது என யோசித்த அமெரிக்கா, சீனாவிலிருந்து வரும் தேனுக்கு மூன்று மடங்கு வரி விதித்தது.
எல்லாவற்றுக்குமே மாற்றுவழி சீனாவிடம் உண்டு. அடுத்த ஆண்டு மலேசியா ஒரே ஆண்டில், 37 மில்லியன் பவுண்டு தேனை ஏற்றுமதி செய்தது. மலேசியாவால் இதில் பத்து சதவிகிதம்கூட உற்பத்தி செய்ய முடியாது என்பதுதான் கள நிலவரம். சீன நிறுவனங்கள் லேபிளை மாற்றிவிட்டன. அப்போதுதான் உலகத்துக்கு ஜெர்மனியில் நடத்தப்படும் NMR சோதனை பற்றி தெரிய வருகிறது. இந்த NMR சோதனை மூலம் மொத்தமாக சிக்குண்டது சீன சர்க்கரை கலந்த தேன்.
நிற்க
ஆம், சீன சர்க்கரை, NMR சோதனை போன்றவைதான் இந்த முறை இந்தியாவில் நடந்திருக்கிறது. அமெரிக்காவில் பயன்படுத்தப்பட்ட ஜெராக்ஸ் மெஷின்கள் ஒரு கட்டத்துக்கு மேல், இந்தியாவுக்கு கப்பல்களில் வருமாம். அத்தகைய இரண்டாம் கட்ட மெஷின்களை நம் நிறுவனங்கள் வாங்கி ஓட்டுமாம். இரண்டாம் கட்ட மெஷின்கள் மட்டுமல்ல, போலிகளும் இந்தியாவுக்குள் இப்படித்தான் வந்திருக்கின்றன.
கொரோனா சூழலால் வட இந்தியாவில் தேன் வளர்ப்பாளர்கள் இந்தாண்டு பெருமளவில் பாதிக்கப்பட்டனர். இம்யூனிட்டி பூஸ்டர், கொரோனா மருந்து, ஆயுர்வேதம் என எந்த ஆண்டையும் விட இந்த ஆண்டு தேனின் தேவை இந்தியாவில் அதிகம். ஆனால், உற்பத்தி மொத்தமாகக் குறைவு. ஆனால், எந்த நிறுவனமும் தேனின் விலையை ஏற்றவில்லை. பெரிய நிறுவனங்கள் 1+1 ஆஃபரை முன்பு போலவே விற்று வந்தன. தேனீக்களில் பெறப்படும் தேனின் உற்பத்தி குறைவு, ஆனால், எல்லோருக்கும் தேன் அதே விலையில் கிடைத்திருக்கிறது. மீண்டும் இந்தக் கட்டுரையை முதலில் இருந்து படிப்பது போல் இருக்கிறதா... ஆம், இங்குதான் சீனா குதித்திருக்கிறது.
வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பூச்சிக்கொல்லிகளையும், ரசாயனங்களையும் பயன்படுத்தி நாம் விவசாயம் செய்யலாம். ஆனால், இங்கிருந்து நாம் ஏற்றுமதி செய்யும் பொருள்களில், No pesticides என்னும் சான்றிதழ் வாங்கியிருத்தல் வேண்டும். அப்படியானதொரு வேடிக்கை விளையாட்டு தேனிலும் உண்டு. ஜெர்மனியிலிருக்கும் NMR சோதனையை பாஸ் செய்யும் தேன் மட்டுமே இந்தியாவிலிருந்து ஏற்றுமதிக்கு அனுமதிக்கப்படும். இந்திய மக்கள் உண்ணத் தகுதியான நிலையில் இருக்கும் தேன், என்றுமே அந்த சோதனைக்கு உட்படுத்தப்படாது. இங்கு C3, C4 பரிசோதனைகள்தான். அவற்றில் கில்லியாக தாண்டி விளையாடும், இந்த சீன சர்க்கரைகொண்ட தேன்.
Golden Syrup, Invert Sugar Syrup, Rice Syrup போன்றவற்றை தேனுக்கு மாற்றாக பயன்படுத்துகிறார்கள் என FSSAI ஏற்கெனவே இந்தாண்டு எச்சரித்திருக்கிறது. 50% கலப்பிடம் கொண்ட தேன் இந்தியாவின் சோதனைகளில் பாஸாகிறது என்றால், நம் சோதனைகளின் தரத்தை மறு பரிசோதனைக்கு முதலில் உட்படுத்த வேண்டியது அவசியம்.
இன்னொன்று ஏற்றுமதிக்கு NMR சோதனை வேண்டுமெனில், இந்தியாவில் வாழும் நமக்கு ஏன் பரிசுத்தமான தேனைத் தர இந்திய அரசு இந்த சோதனைகளை கட்டாயமாக்குவதில்லை என்னும் கேள்வியும் அவசியம்.
எல்லாவற்றையும் கடந்து இரு விஷயங்கள் உள்ளன. NMR சோதனைகளிலும் பாஸ் செய்யும் திறனை சீனாவால் நிச்சயம் கண்டுபிடிக்க முடியும். ஏனெனில், அவர்கள் உற்பத்தி செய்து வைத்திருக்கும் சர்க்கரைப் பாகிற்கு வேறு வழியில்லை. இன்னொன்று நிறுவனங்கள் மனசாட்சிப்படி நடந்துகொள்ளவேண்டும். இங்கு யாரும் தேனை இலவசமாக கேட்கவில்லை. கோலா குளிர்பானங்கள் கேடு எனத் தெரிந்துதான் குடிக்கிறோம். ஆனால், தேனை மருந்து என நம்பி மக்கள் உட்கொள்கிறார்கள்.
கோலா நிறுவனங்களைப் போலவே, தேன் நிறுவனங்களும் இனி பெரிய அளவில் விளம்பரங்களில் ஈடுபடலாம். நாங்கள் கறந்த பாலைவிட சுத்தமானவர்கள் என தொழிற்சாலைக்குள்ளேயே வீடியோ எடுத்து வெளியிடலாம். தேனீ தன் வாயிலிருந்து தேன் துளியை சாப்பிடுவரின் தட்டில் வைப்பதுபோல் கிராஃபிக்ஸ் செய்யலாம். பிரபலங்கள் நாங்கள் சொல்கிறோம், இந்தத் தேன் சுத்தமானதுதான், எங்கள் குடும்பமே இதைத்தான் சாப்பிடுகிறோம் என போலி வாக்குறுதிகள் தரலாம். ஆனால் , அதன் மீதான நம்பகத்தன்மையை அவை இழந்துவிட்டன என்பது தான் நிஜம்!
source https://www.vikatan.com/food/miscellaneous/is-indian-honey-adulterated-nmr-test-says-so
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக