மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் கோழி இறைச்சி கடை ஒன்று நவம்பர் 29-ம் தேதி அன்று புதிதாகத் திறக்கப்பட்டது. இதையொட்டி சிறப்பு சலுகையாக 5 பைசா நாணயம் கொண்டு வந்தால் அவர்களுக்கு ஒரு கிலோ கோழி இறைச்சி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து உசிலம்பட்டி சுற்றுவட்டாரத்தில் உள்ள பொதுமக்கள் பலரும் தங்கள் வீடுகளில் இருந்த பழைய 5 பைசா நாணயங்களைத் தேடிக் கண்டுபிடித்து கொண்டுவந்து கடை முன்பு நீண்ட வரிசையில் காத்து நின்று கோழி இறைச்சியை மகிழ்ச்சியுடன் வாங்கிச் சென்றனர்.
அன்றைய தினம் கார்த்திகை தீபவிழா என்றாலும், அசைவப் பிரியர்கள் அதை பொருட்படுத்தாமல் நீண்ட நேரம் காத்திருந்து கோழி இறைச்சியை வாங்கிச் சென்றனர். 5 பைசா நாணயத்திற்குக் கோழி இறைச்சி வழங்கப்பட்ட சம்பவம் ஊர்மக்களிடையே மட்டுமல்லாது, அனைத்து மீடியாக்களில் பேசுபொருளாக மாறியது.
10 பைசாவுக்கு ஒரு தோசை!
இதே போல, கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னையில் உள்ள பாட்டன்பூட்டன் பாரம்பரிய உணவகத்தில் தோசை மேளா நடைபெற்றது. அதில் 10 பைசா கொடுத்தால் ஒரு தோசை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதுபோல ஒவ்வொரு ஆண்டும், உணவு தினம் கொண்டாடப்படும்போது, சென்னையைச் சேர்ந்த பல உணவகங்கள் விதவிதமான அறிவிப்புகளை வெளியிடுவது வழக்கமாகி வருகிறது.
தடை செய்யப்பட்ட சிறிய மதிப்புள்ள நாணயங்களை வைத்து மார்க்கெட்டிங் செய்யும் பழக்கம் ஒருபுறம் இருக்க, 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி தடை செய்யப்பட்ட 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை வைத்திருந்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு அறிவித்திருந்தது சற்று முரணாக இருக்கிறதே என்கிற சந்தேகம் பலருக்கும் வருகிறது.
சிறிய மதிப்புள்ள நாணயமாக இருந்தாலும், அண்மையில் தடை செய்யப்பட்ட ரூபாய் தாள்களாக இருந்தாலும் ஒரே மாதிரியான சட்டம்தானே இருக்க வேண்டும்? வேறு வேறு சட்டம் எதற்கு என்கிற கேள்வியும் எழாமல் இல்லை. இது குறித்து தெரிந்துகொள்ள வங்கித் துறை அதிகாரிகளிடமும், ஆர்.பி.ஐ வட்டாரத்திலும் பேசினோம்.
சட்டப்படி நடவடிக்கை!
இது குறித்து அவர்கள், ``வங்கி ரூபாய் நோட்டுகள் மதிப்பு இழப்பு அவசர சட்டம்’ என்னும் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த புதிய சட்டத்தின்படி, 2017-ம் ஆண்டு மார்ச் -31-ம் தேதிக்குப் பிறகு அதிக எண்ணிக்கையில் யாராவது பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை வைத்திருந்தால், அது கிரிமினல் குற்றமாக கருதப்படும்.
`காயின் கலெக்டர்கள்', அதாவது பழைய நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகளைச் சேகரிப்பவர்களுக்கு மட்டுமே குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகளை மட்டுமே வைக்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளில், அதிகபட்சமாக 10 நோட்டுகள் வரை மட்டுமே ஒருவர் வைத்துக் கொள்ளலாம். அதிகப்படியான ரூபாய் நோட்டுகளை யாராவது வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களுக்கு 10,000 ரூபாய் அல்லது வைத்திருக்கும் தொகையைப் போல் ஐந்து மடங்கு தொகை அபராதமாக விதிக்கப்படும்" என்ற தகவல்களைத் தெரிவித்தார்கள்.
பழைய நாணயங்களை மக்கள் மறந்துவிட்டதாகவும் அதுகுறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும் என்றும் கடை உரிமையாளர்கள் இந்த மார்க்கெட் உத்திகளுக்கு காரணம் தெரிவித்தாலும், இதிலுள்ள சட்ட ரீதியான விஷயம் என்ன என்பதையும் கடை உரிமையாளர்கள் தெரிந்துவைத்திருப்பது அவசியமே!
source https://www.vikatan.com/business/money/is-it-legally-correct-to-collect-and-preserve-large-amount-of-demonetized-coins
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக