புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்று காரணமாக இதுவரை 612 பேர் உயிரிழந்திருக்கின்றனர். கடந்த சில நாள்களாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக கொரோனா தொற்று மற்றும் இறப்பின் எண்ணிக்கை குறைந்துவிட்டதாக தெரிவித்திருக்கிறது சுகாதாரத்துறை. புதுச்சேரி மாவட்ட ஆட்சியராக இருக்கும் அருண், சுகாதாரத்துறையின் செயலர் பொறுப்பையும் கூடுதலாக வகித்துவருகிறார். சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அவர், விடுப்பில் சென்று வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் உடனடியாக ஜிப்மர் மருத்துவமனையில் கொரோனா பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதன் அடிப்படையில் தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியிருக்கிறார். இந்நிலையில் நேற்று மாலை முதல்வர் நாராயணசாமி, சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் மற்றும் தலைமைச் செயலர் அஸ்வானி குமார் ஆகியோர் அவரை நலம் விசாரிப்பதற்காக ஜிப்மர் மருத்துவமனைக்குச் சென்றனர். அப்போது ஆட்சியர் அருண் அனுமதிக்கப்பட்டிருந்த சூப்பர் ஸ்பெஷாலிட்டி இணைப்பு - 2 கட்டிடத்தின் லிஃப்டில் ஏறினார்கள். ஆனால், சிறிது நேரத்தில் அந்த லிஃப்ட் பழுதாகி நின்றிருக்கிறது.
பொதுவாக மின்சாரம் தடை காரணமாக லிஃட் நின்றுவிட்டால் அது தானாகவே அடுத்த தளத்திற்கு செல்லுமாறு வடிவமைக்கப்பட்டிருக்கும். ஆனால் லிஃப்ட் நகராமல் அதே இடத்தில் நின்றுவிட்டதால் முதல்வர், அமைச்சர், செயலர், பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் பதறிப் போனார்கள். மருத்துவமனை வளாகம் முழுவதும் பரபரப்பும், பதற்றமும் தொற்றிக்கொண்டது. அதன்பிறகு மருத்துவமனை ஊழியர்களும், லிஃப்ட் ஆபரேட்டர்களும் சுமார் 20 நிமிடங்கள் தொடர்ச்சியாக போராடி அவர்களை பாதுகாப்பாக மீட்டனர்.
Also Read: சாதனை படைத்த புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை! வாழ்த்து தெரிவித்த மத்திய அமைச்சர்
அதன்பிறகு ஜிப்மர் மருத்துவமனை இயக்குநரை அழைத்த முதல்வர் நாராயணசாமி, பொதுமக்களும், நோயாளிகளும் பயன்படுத்தும் லிஃப்ட் விவகாரத்தில் பொறுப்பில்லாமல் இருக்கலாமா என்று டோஸ் விட்டிருக்கிறார்.
source https://www.vikatan.com/news/politics/puducherry-chief-minister-minister-locked-in-lift-at-jipmer
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக