சென்னை மந்தைவெளி பெரியபள்ளி தெருவைச் சேர்ந்தவர் தமீம் அன்சாரி (40). இவரின் மனைவி தஸ்னீம் (36). இந்தத் தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். தமீம்அன்சாரி, ஆயத்த ஆடை ஏற்றுமதி பிசினஸ் செய்து வருகிறார். அதனால் அவரின் வீட்டில் எப்போதும் லட்சக்கணக்கில் பணம் இருக்கும். இந்தநிலையில் கடந்த நவம்பர் 20-ம் தேதி தமீம் அன்சாரியின் மகனுக்கு பிறந்தநாள். அதைப் போல தமீம் அன்சாரியின் தங்கை மகனுக்கும் பிறந்த நாள். அதனால் இருவரின் பிறந்தநாளையும் சிறப்பாக கொண்டாட தமீம் அன்சாரி முடிவு செய்தார். அதன்படி அவரின் வீட்டிலேயே நவம்பர் 20-ம் தேதி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அதில் உறவினர்கள் கலந்து கொண்டனர்.
விழா முடிந்த பிறகு பணம் எடுக்க பீரோவை தமீம் அன்சாரி திறந்து பார்த்தார். அப்போது அதில் வைத்திருந்த 44 லட்சம் ரூபாய் மாயமாகியிருப்பதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். பணம் குறித்து மனைவி மற்றும் உறவினர்களிடம் விசாரித்தார். மேலும் வீட்டிலிருந்த சிசிடிவி கேமரா பதிவை தமீம்அன்சாரி ஆய்வு செய்தார். அப்போது சிசிடிவி கேமரா பழுதானதது தெரியவந்தது. அதனால் பணத்தை திருடியது யாரென்று தெரியவில்லை. இந்தச் சமயத்தில் தமீம்அன்சாரியின் மனைவி தஸ்னீம் மற்றும் அவரின் 4 வயது மகனும் பணத்தை உறவினர் ஒருவர் திருடிச் சென்றதாகக் குற்றம் சாட்டினர். அதனால் குற்றம் சாட்டப்பட்ட உறவினரிடம் குடும்பத்தினர் விசாரித்தனர். அப்போது அவர், தான் திருடவில்லை என சத்தியம் செய்தார்.
இதையடுத்து தமீம்அன்சாரி, பட்டினம்பாக்கம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அப்போது தன்னுடைய தங்கையின் கணவர் மீது சந்தேகம் இருப்பதாகக் கூறியிருக்கிறார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர்கள் நவாஸ், செல்வராணி ஆகியோர் தமீன்அன்சாரியின் தங்கைக் கணவரிடம் விசாரணை நடத்தினர். பணத்தை மாமா திருடியதைப் பார்த்ததாகக் கூறிய தமீம்அன்சாரியின் 4 வயது மகனிடமும் விசாரித்தனர். அப்போது அந்தச் சிறுவன், பிறந்தநாள் விழாவின்போது தனது மாமா கறுப்பு நிற பேக்கை எடுத்துக் கொண்டு சென்றதாகக் கூறினான்.
இதையடுத்து சிறுவனின் மாமாவிடம் போலீஸார் விசாரித்தபோது அவர் நான் திருடவே இல்லை என்று கூறினார். அவர் கூறுவது உண்மையென கண்டறிந்த போலீஸார், பணத்தை திருடிவிட்டு தமீம்அன்சாரியின் தங்கை கணவர் மீது பழிசுமத்துவது யாரென்று விசாரிக்க தொடங்கினார். அதற்காக மீண்டும் தமீம்அன்சாரியின் 4 வயது மகனிடம் விசாரித்தனர். அப்போது அவர், அம்மா தான் மாமா பணத்தை திருடியதாக யார் கேட்டாலும் சொல்ல சொன்னதாக மழலை மொழியில் தெரிவித்தார். அதையடுத்து தமீம்அன்சாரியின் மனைவி தஸ்னீமிடம் போலீஸார் விசாரித்தனர். அவரின் செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்தனர்.
அப்போது தஸ்னீம், புரசைவாக்கத்தைச் சேர்ந்த ரியாஸ் அகமது (38) என்பவரிடம் அடிக்கடி போனில் பேசிய தகவல் தெரியவந்தது. அதனால் ரியாஸ் அகமதுவிடம் போலீஸார் விசாரித்தனர். அப்போது அவரிடம் 44 லட்சம் ரூபாய் இருப்பதை போலீஸார் கண்டறிந்தனர். இதையடுத்து அவரைக் கைது செய்த போலீஸார் பணத்தை மீட்டனர். ரியாஸ் அகமது அளித்த தகவலின்படி தஸ்னீம்மையும் போலீஸார் கைது செய்தனர். மனைவியே குற்றவாளி என்ற தகவலையறிந்த தமீம்அன்சாரி அதிர்ச்சியடைந்தார். அதோடு மனைவி குறித்த தகவலைக் கேட்ட அவர் மனவேதனையடைந்தார். பின்னர் காவல் நிலையத்தில் தன் மனைவி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி போலீஸாரிடம் தமீம்அன்சாரி கூறிவிட்டு வீட்டுக்குச் சென்றுவிட்டார். அப்போது, தஸ்னீம், தன்னை மன்னித்துவிடும்படி கதறி அழுததாக போலீஸார் தெரிவித்தனர். ஆனால் எதையும் காதில் தமீம்அன்சாரி வாங்கிக்கொள்ளவில்லை. அதன்பிறகே தஸ்னீம், அவரின் முகநூல் நண்பர் ரியாஸ்அகமது ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் போலீஸார் அடைத்தனர்.
Also Read: புதுக்கோட்டை: டி.எஸ்.பி பெயரில் போலி முகநூல் கணக்கு! - பணம் பறிக்க முயன்ற கும்பலுக்கு வலைவீச்சு
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``தமீம்அன்சாரி பிசினஸ் விஷயமாக அடிக்கடி வெளியூர் சென்றுவிடுவார். அதனால் தனியாக இருந்த தஸ்னீம், முகநூலில் ஆக்டிவ்வாக இருந்திருக்கிறார். கடந்த மூன்றாண்டுக்கு முன், புரசைவாக்கத்தைச் சேர்ந்த ரியாஸ் அகமதுவுடன் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. நட்பாக பழகிய இருவரும், நேரிலும் சந்திருக்கின்றனர். அப்போது ரியாஸ் அகமதுவுக்கு தஸ்னீம் பணம் கொடுத்திருக்கிறார். இந்தச் சமயத்தில்தான் 44 லட்சம் ரூபாயை தமீம்அன்சாரி பீரோவில் வைப்பதை தஸ்னீம் பாத்திருக்கிறார். அந்தத் தகவலை ரியாஸ் அகமதுவுக்கு தஸ்னீம் போனில் தெரிவித்திருக்கிறார். உடனே இருவரும் சேர்ந்து அந்தப் பணத்தை திருட திட்டமிட்டிருக்கின்றனர். அதற்கு பிறந்த நாள் விழாவை பயன்படுத்தியிருக்கின்றனர்.
பிறந்தநாள் விழாவுக்கு உறவினர்கள் வருவதால் அவர்களில் யாராவது ஒருவர் பணத்தை திருடி விட்டதாகக் கூறி நம்ப வைத்துவிடலாம் என இருவரும் யோசித்திருக்கின்றனர். அதன்படி பணத்தைத் திருடிய தஸ்னீம், அதை ரியாஸ் அகமதுவிடம் கொடுத்திருக்கிறார். குழந்தைகள் சொல்லும் தகவலை நம்புவார்கள் என்பதால் தன்னுடைய மகனிடம், மாமா கறுப்பு நிற பையோடு வெளியில் சென்றதைப் பார்த்ததாக கூறும்படி சொல்லியிருக்கிறார்.
அம்மா கூறியதைப் போல அந்தச் சிறுவனும் வீட்டில் உள்ளவர்களிடம் கூறியிருக்கிறான். அதனால் அனைவரும் நம்பி, தமீம்அன்சாரியின் தங்கை கணவரிடம் விசாரித்திருக்கின்றனர். ஆனால் அந்தச் சிறுவன் சொல்லிக்கொடுத்ததைக் கூறும் கிளியைப் போல தஸ்னீம் கூறியதை அப்படியே கூறியதால் பணத்தை திருடியது தஸ்னீம் மற்றும் அவரின் முகநூல் நண்பர் ரியாஸ்அகமது என தெரிந்தது. தற்போது இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறோம்" என்றனர்.
முகநூல் நட்பால் சொந்த வீட்டில் பணத்தைத் திருடி தொழிலதிபரின் மனைவி, குழந்தைகளை தவிக்கவிட்டு சிறைக்கம்பிகளை எண்ணிக்கொண்டிருக்கிறார்.
source https://www.vikatan.com/news/crime/chennai-police-arrested-business-man-wife-and-her-facebook-friend
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக