Ad

புதன், 2 டிசம்பர், 2020

தூத்துக்குடி: 2 கோரிக்கைகளை முன்வைத்த வேதாந்தா நிறுவனம்! - நிராகரித்த உச்ச நீதிமன்றம்

ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி கடந்த 2018-ல் தூத்துக்குடி மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். அதன் 100வது நாளில் (மே-22) மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்துவதற்காக பேரணியாகச் சென்றனர். அப்போது ஏற்பட்ட திடீர் கலவரத்தில் போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதில், 2 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து (28-ம் தேதி) அரசாணை வெளியிடப்பட்டு ஆலை சீல் வைத்து மூடப்பட்டது. ஆலையை சீல் வைத்து மூடிய தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மனுத்தாக்கல் செய்தது வேதாந்தா நிறுவனம்.

ஸ்டெர்லைட் ஆலை

ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழுவை ஆய்வு செய்ய நியமித்தது தீர்ப்பாயம். அக்குழு சமர்பித்த ஆய்வறிக்கையின்படி, ‘சில விதிமுறைகளுடன் மீண்டும் ஆலையை திறக்கலாம்’ என தீர்ப்பளிக்கப்பட்டது. இதை எதிர்த்து தமிழக அரசு, உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. ‘ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை விதித்ததுடன், இவ்வழக்கை விசாரிக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திற்கு எந்த அனுமதியும் இல்லை’ எனக்கூறி சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு ஆலைத்தரப்பிற்கு அறிவுறுத்தியது உச்சநீதிமன்றம்.

தமிழக அரசின் இந்த உத்தரவை எதிர்த்து மீண்டும் ஆலைத்தரப்பு தொடர்ந்த வழக்கில், கடந்த ஆகஸ்ட் 18-ம் தேதி, ’ஸ்டெர்லைட் ஆலை திறப்பதற்கு அனுமதி இல்லை, தமிழக அரசின் உத்தரவு செல்லும், அந்த உத்தரவே தொடரும்’ என சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதியரசர்கள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் தீர்ப்பு அளித்தனர். அத்தீர்ப்பு, 815 பக்கங்களைக் கொண்டது. இத்தீர்ப்பு, தூத்துக்குடி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இத்தீர்ப்பினை வரவேற்று போராளிகள், துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், வழக்கறிஞர்கள், கட்சியினர் ஆகியோர் வெடி வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். இந்த தீர்ப்பை எதிர்த்து டெல்லி உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்தது.

டெல்லி உச்சநீதிமன்றம்

முன்னதாக, மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பிலும், தமிழக அரசு சார்பிலும், ம.தி.மு.க சார்பிலும் இவ்வழக்கில் கேவியேட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் வழக்கறிஞர் யோகேஷ் கண்ணா, இவ்வழக்கு தொடர்பான 3 ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஆவணங்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில், ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையால் ஏற்பட்ட காற்று மாசு, சுற்றுச்சூழல் பாதிப்பு, மக்களுக்கு ஏற்பட்ட நோய்கள் தொடர்பான அனைத்து பாதிப்புகள் குறித்தும், இந்த ஆலையின் விதிமீறல்கள் குறித்தும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுத்துகொள்ளக் கூடாது எனவும், இம்மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு மனுத்தாக்கல் செய்துள்ளது. இதற்கிடையில், நீதிபதி நாரிமன் தலைமையிலான அமர்வு, நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணையில், “அரசின் கொள்கை முடிவின் அடிப்படையில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. மாசு விதிகளை மீறி செயல்பட்டதால், ஆலையை திறக்க அனுமதிக்கக்கூடாது.

ஸ்டெர்லைட் ஆலை

உயர்நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் வகையில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்” எனக் கூறப்பட்டது. அப்போது, ஸ்டெர்லைட் ஆலைத் தரப்பில், “மூடப்பட்ட ஆலையை பராமரிக்க அனுமதி அளிக்க வேண்டும். ஆலையைத் தொடர்ந்து ஒரு மாதத்திற்கு இயக்க சோதனைக்காக அனுமதி அளிக்க வேண்டும். அதில் சுற்றுச்சுழல் பிரச்னை ஏதுமிருந்தல் நீதிமன்றம் கண்காணிக்கலாம்” என இரண்டு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன. ஆனால், இந்த இரண்டு கோரிக்கைகளையும் நீதிபதிகள் குழு நிராகரித்தது. ”இவ்வழக்கின் இறுதி விசாரணை எப்போது நடத்தப்படும் என்பதை தெரிவிக்கப்பட வேண்டும்” என வேதாந்த தரப்பில் கேட்கபட்டதற்கு, “வழக்கின் விசாரணை குறித்த தேதிகள் வழக்கமான பட்டியலின்படி வெளியாகும்” என நீதிபதிகள் தரப்பில் பதில் அளிக்கப்பட்டது.



source https://www.vikatan.com/government-and-politics/judiciary/vedantas-2-claims-rejected-by-supreme-court-on-sterlite-issue

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக