காரில் போகும்போது அபி டென்ஷனாகவே இருக்கிறாள். குழந்தைகள் சாப்பிட்டார்களா, தூங்கினார்களா என்கிற கவலை ஒரு பக்கம். சித்தார்த் என்ன சொல்லப் போகிறானோ என்ற டென்ஷன் இன்னொரு பக்கம். எப்படி இயல்பாக இருக்க முடியும்?
“அபி, ஒரு வாரம் செய்யற வேலையை அஞ்சு மணி நேரத்துல முடிச்சிருக்கீங்க... கிரேட! வேலையைப் பத்தின பயம் இருக்கலாம். அது நம்மள முன்னேற்றும். ஆட்களைப் பத்தின பயம் இருக்க வேண்டியதில்ல. நாளைக்கு வீணா உங்களைப் பாராட்டுவா, பாருங்க” என்று அபியை இயல்பாக்குகிறான் கெளதம்.
வீட்டில் பேய் அறைந்ததுபோல இருளில் அமர்ந்திருக்கிறான் சித்தார்த். சம்பாதிப்பவன் எனகி்ற திமிரில் இத்தனை ஆண்டுகளும் அதிகாரம் செய்தே பழக்கப்பட்டவனால், மனைவி வேலைக்குப் போவதைத் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. தான் செய்ய வேண்டியதை அவள் செய்வதும் அவள் செய்ய வேண்டியதைத் தான் செய்வதும் அவனை நிம்மதியிழக்கச் செய்கிறது.
பல முறை காலிங் பெல் அடித்த பிறகே கதவு திறக்கப்படுகிறது. குழந்தைகள் உட்கார்ந்தபடியே தூங்கிக்கொண்டிருக்கிறார்கள். சாப்பிட்ட பொருள்கள் அப்படியே கிடக்கின்றன. எல்லாம் தனக்குத் தெரியும் என்று சொல்லும் சித்தார்த், குழந்தைகளை இப்படி விட்டதை என்னவென்று சொல்வது? குழந்தைகள் இப்படித் தூங்கினாலும் பரவாயில்லை, அபியைக் கஷ்டப்படுத்த வேண்டும் என்பதுதான் நோக்கமாக இருக்கிறது போல!
`இனிமேல் குழந்தைகளை டிராயிங் க்ளாஸ், டென்னிஸ் க்ளாஸுக்கு எல்லாம் அழைத்துச் செல்ல முடியாது. ஸ்கூலில் விடுவதையும் வீட்டுக்கு அழைத்து வருவதையும் மட்டும்தான் செய்ய முடியும். அதுவும் வேலை கிடைக்கும் வரைதான் செய்வேன். வேறு ஏற்பாடு செய்துகொள்’ என்கிறான் சித்தார்த்.
மறுநாள் ஆபிஸ் மீட்டிங்கில் புரொபோசல் ஓகே ஆகிவிட்டதாகவும் அபிதான் காரணம் என்றும் பாராட்டுகிறான் கெளதம். இதை வீணாவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. மீட்டிங் நேரத்தில் பலமுறை அபியின் அம்மா போன் செய்கிறார். அது பலரையும் எரிச்சல் படுத்துகிறது. போனை சைலன்ட்டுக்கு மாற்ற முடியும் என்பதுகூடவா அபிக்குத் தெரியாது?
அம்மாவைத் தொடர்பு கொள்கிறாள் அபி. “நீ என்ன பெரிய மனுஷி ஆகிட்டியோ? வேலைக்குப் போறியாமே? ஒரு வார்த்தை சொன்னியா? கெளசல்யா எங்களை எப்படிக் கேட்டா தெரியுமா? நீ எக்கேடு கெட்டு வேணாலும் போ. குழந்தைகளை இங்கே விட்டுடு. நாங்க பார்த்துக்கறோம்” என்று கோபத்துடன் கத்துகிறார் அம்மா.
”இங்க பாரும்மா, அவங்க என் பசங்க. எப்படிப் பார்த்துக்கணும்னு எனக்குத் தெரியும்” என்று இணைப்பைத் துண்டிக்கிறாள் அபி.
இனி?
இன்று இரவு 7 மணிக்குப் பார்க்கலாம்!
- எஸ்.சங்கீதா
source https://cinema.vikatan.com/web-series/vallamai-tharayo-digital-daily-series-review-for-episode-43
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக