மாடித்தோட்டத்துல பூக்களோட முக்கியத்துவத்தைப் பத்தி போன பகுதியில பார்த்தோம். இந்தத் தடவை மாடித்தோட்டத்துல தக்காளி சாகுபடி செய்றதைப் பற்றி முழுமையா பார்க்கப் போறோம். சின்னச் சின்ன தொழில்நுட்பங்களைக் கடைப்பிடிச்சா தக்காளி சாகுபடி ரொம்ப ஈஸிங்க. தக்காளி சாகுபடி செய்றதைப் பற்றிச் சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி வேளாண் அறிவியல் மையத்தின் தலைவர் மற்றும் பேராசிரியர் செந்தூர்குமரன் சொன்ன தகவல்களைப் பார்ப்போம்.
``மாடித்தோட்டத்தில் ஒரு பையில் மூன்று, நான்கு செடிகளை வைக்கக் கூடாது. ஒரு செடி அல்லது இரண்டு செடிகள் மட்டுமே வைக்க வேண்டும். இது அனைத்துக் காய்கறிச் செடிகளுக்கும் பொருந்தும். தக்காளியில் நாட்டுத்தக்காளி, வீரிய ரக தக்காளி இரண்டு ரகங்களையும் மாடித்தோட்டத்தில் சாகுபடி செய்யலாம். விதைகளைக் கொண்டு நாமே நாற்று தயாரித்து, நடவு செய்வது சிறந்த முறை. நாற்றங்காலில் விதைப்பதற்கு முன்பாக விதைகளை விதை நேர்த்தி செய்ய வேண்டும். வீட்டில் சோறு வடித்து ஆறிய வடிகஞ்சியில் விதைகளை நனைத்து அவற்றோடு 10 கிராம் அசோஸ்பைரில்லம் (100 கிராம் விதைக்கு) சேர்த்துப் புரட்ட வேண்டும். நன்கு புரட்டிய பிறகு, விதைக்க வேண்டும். வடிகஞ்சியில் நனைத்தால்தான் அசோஸ்பைரில்லம் விதைகளோடு நன்றாக ஒட்டும்.
அசோஸ்பைரில்லம் கிடைக்காதவர்கள் அதற்குப் பதிலாகக் காகிதப் பூ இலைக் கரைசலைப் பயன்படுத்தலாம். காகிதப்பூ இலைகளிலிருந்து 25 மில்லி சாறு எடுத்து, அதை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்துகொள்ள வேண்டும். இக்கலவையில் விதையை ஆறு மணிநேரம் ஊற வைத்து விதைத்தால், நாற்று அழுகல் நோயிலிருந்து நாற்றுகளைக் காப்பாற்றலாம்.
வீட்டுத்தோட்டத்துக்குக் குழித்தட்டு முறையில் நாற்று உற்பத்தி செய்வதுதான் சிறந்த முறை. குழித்தட்டின் குழிகளைத் தென்னை நார்க்கழிவு கொண்டு நிரப்பிக்கொள்ள வேண்டும். அந்தத் தென்னை நார்க்கழிவுகளில் ஒரு கிலோவுக்கு 25 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி அல்லது சூடோமோனஸ் கலந்து கொள்ள வேண்டும். பிறகு, அந்தக் குழிகளில் விதைகளை நட்டு வளர்க்க வேண்டும். 25-ம் நாள் நாற்று தயாராகிவிடும்.
Also Read: மாடித்தோட்டத்துல காய்கறிகள் மட்டுமல்ல; பூக்களும் நிச்சயம் இருக்கணும்... ஏன்? - வீட்டுக்குள் விவசாயம்
செடிகளுக்கு வளர்ச்சி ஊக்கியாகப் பஞ்சகவ்யா + அமுதக்கரைசல் மற்றும் மீன் அமினோ அமிலம் + அரப்பு மோர் கரைசல் என்ற இரண்டு வகையான கரைசல்களைப் பயன்படுத்த வேண்டும். இந்த இரண்டு வகையான கரைசல்களையும் சுழற்சி முறையில் 15 நாள்கள் இடைவெளியில் தொடர்ந்து தெளித்து வர வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் தண்ணீருக்கு இரண்டரை மில்லி பஞ்சகவ்யா என்ற விகிதத்தில் ஊற்றிக் கலக்கிக்கொள்ள வேண்டும். மற்றொரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் தண்ணீருக்கு இரண்டரை மில்லி அமுதக்கரைசல் என்ற விகிதத்தில் ஊற்றிக் கலக்கிக்கொள்ள வேண்டும். பிறகு, அமுதக்கரைசல் கலவையை எடுத்துப் பஞ்சகவ்யா கலவையில் ஊற்றிக் கலக்கி வளர்ச்சி ஊக்கியாகப் பயன்படுத்தலாம். இந்தக் கரைசலை 10 லிட்டர் தண்ணீருக்கு 20 மில்லி கரைசல் என்ற விகிதத்தில் கலந்து தெளிக்க வேண்டும்.
அதேபோல ஒரு லிட்டர் தண்ணீருக்கு இரண்டரை மில்லி மீன் அமினோ அமிலம் என்ற விகிதத்தில் கலந்துகொள்ள வேண்டும். மற்றொரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் தண்ணீருக்கு இரண்டரை மில்லி அரப்பு மோர் கரைசல் என்ற விகிதத்தில் கலந்துகொள்ள வேண்டும். பிறகு, அரப்பு மோர் கரைசல் கலவையை மீன் அமினோ அமிலக் கரைசலுடன் கலந்துகொள்ள வேண்டும். இந்தக் கரைசலை 10 லிட்டர் தண்ணீருக்கு 20 மில்லி கரைசல் என்ற விகிதத்தில் கலந்து தெளிக்க வேண்டும்.
தக்காளிச் செடிகளில் 28-ம் நாள் முதல் பூப்பூக்கும். 45-ம் நாளில், முழுமையாகப் பூ எடுத்துவிடும். இரண்டு மாதங்களில் அறுவடைக்குத் தயாராகிவிடும். அடுத்த இரண்டு மூன்று மாதங்களுக்குக் காய்ப்பு இருக்கும்.
கலப்பின ரகங்களுக்கு அதிக பராமரிப்பு
கலப்பின ரகச் செடிகள், கொடிபோலப் படரக்கூடியவை. அதனால், இச்செடிகளுக்கு அருகே ஒரு மீட்டர் உயரத்துக்குக் கம்பிகளை ஊன்றி வைக்க வேண்டும். கொடிகளில் நூல் கட்டி கம்பிகளில் ஏற்றிவிட வேண்டும். இப்படிச் செய்தால் பழங்கள் தரையில் பட்டு அடிபடாமல் அறுவடை செய்யலாம்.
தண்ணீர் தேங்கக் கூடாது
தொட்டிகளில் தண்ணீர் தேங்கி நிற்கக் கூடாது. மண் ஈரமாகும் அளவுக்கு அளவாகத் தண்ணீர் தெளித்தால் போதுமானது. நடவுக்கு முன்பாகச் சிறிது வேப்பம் பிண்ணாக்கைத் தொட்டியில் தூவி கலந்து விட வேண்டும். நடவு செய்த 30-ம் நாள் கைப்பிடியளவு மண்புழு உரத்தையும், 45-ம் நாள் மீண்டும் ஒரு கைப்பிடியளவு மண்புழு உரத்தையும் இட வேண்டும்.
பூச்சி மேலாண்மை
தக்காளியில் பெரிய பிரச்னை காய்ப்புழுத்தாக்குதல். தக்காளிச் செடியில் பூப்பூத்துக் காய்கள் உருவாகும் சமயத்தில், அதாவது காய்கள், கடுகின் அளவில் இருக்கும் சமயத்திலேயே… தாய் அந்துப்பூச்சிகள் முட்டையிடத் தொடங்கிவிடும். இப்பூச்சிகள், இலைகளின் பின்புறம், இலைகளின் மேற்புறம் மற்றும் காய்களின் மேலே உள்ள `காளிக்ஸ்' பகுதி உள்ளிட்ட இடங்களில் அதிகளவு முட்டைகள் இடும். முட்டையிலிருந்து வெளிவரும் இளம் புழுக்கள் முதலில் இலைகளைச் சாப்பிடும். தொடர்ந்து காய்களைத் துளைத்து உள்ளே நுழைய ஆரம்பிக்கும். காய்களும் வளர்ந்துகொண்டே இருப்பதால், காயில் உள்ள துளைகள் அடைபட்டுவிடும். இந்தப்புழுக்கள் பிறந்த 15 நாள்கள் முதல் 20 நாள்கள்வரை தீவிரமாக உணவெடுக்கின்றன. அதன் பிறகு, அவை கூட்டுப்புழுப் பருவத்துக்குத் தயாராகிவிடும். அந்த இடைப்பட்ட காலத்தில் காய்க்குள் இருந்தே சாப்பிட்டுக் கொண்டிருக்கும் காய்ப்புழுக்கள் வளர்ந்து காயில் துளையிட்டு வெளிவரும்.
அந்தச் சமயத்தில்தான் நாம் காய்ப்புழுத் தாக்குதலை உணர முடியும். ஆனால், அந்தச் சமயத்தில் எந்த முறையைக் கையாண்டாலும் காய்களைக் காப்பாற்ற முடியாது. அதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை மூலமாகத்தான் காய்ப்புழுக்களைக் கட்டுப்படுத்த முடியும் என்பதை நினைவில் வைக்க வேண்டும். தக்காளி நடவு செய்த 35-ம் நாளில் கிட்டத்தட்டப் பாதி அளவுப் பூக்கள் எடுத்துவிடும். அந்தச் சமயத்தில், ஒரு லிட்டர் தண்ணீருக்கு 50 மில்லி இயற்கைப் பூச்சிவிரட்டி அல்லது ஒரு லிட்டர் தண்ணீருக்கு 30 மில்லி வேப்பெண்ணெய் என்ற விகிதத்தில் கலந்து செடிகள் முழுவதும் படுமாறு தெளிக்க வேண்டும். தக்காளி நடவு செய்த பைகளுக்கு அருகே சாமந்திப் பூக்கள் நடவு செய்த பையை வைக்க வேண்டும். இது கவர்ச்சி பயிராக இருந்து, தாய் அந்துப்பூச்சிகளைக் கவரும்.
காய்ப்புழுக்களை அழிக்கப் `பேசில்லஸ் துரின்ஜியான்சிஸ்’ (Bacillus Thuringiensis) என்ற பூஞ்சணத்தையும் பயன்படுத்தலாம். ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 கிராம் என்ற விகிதத்தில் கலந்து தெளிக்க வேண்டும். இப்பூஞ்சணம் காய்ப்புழு மேல் வளர்ந்து, புழுவைக் கொன்றுவிடும். தக்காளி பைகளில் பூண்டு, வெங்காயம் ஆகியவற்றை நடவு செய்தாலும் காய்ப்புழுக்கள் கட்டுப்படும்.
வெள்ளை ஈக்கள் தாக்கிய செடியில் இலைகள், வெளிர் பச்சை நிறத்தில் இருக்கும். அடிப்பகுதி கீழ்நோக்கி சாய்ந்து சுருண்டு அப்படியே பட்டுப்போய்விடும். இது தக்காளியில் `பிகோமோ வைரஸ்’ (Begomovirus) என்ற கிருமியைப் பரப்பும் பூச்சி. இப்பூச்சியால் உண்டாகும் சேதத்தைவிட, இப்பூச்சியால் பரவும் வைரஸால் ஏற்படும் சேதம்தான் அதிகம். இந்த வைரஸ் தாக்கினால் செடிகளில் இலைச்சுருள் நோய் பரவும். நோய் தாக்கிய ஒரு செடியில் அமரும் இப்பூச்சிகள், அடுத்தடுத்து வேறு செடிகளில் அமரும்போது வயலில் உள்ள செடிகள் அனைத்திலும் இந்த இலைச்சுருள் நோயைப் பரப்பும் வைரஸ்கள் பரவிவிடும். வைரஸுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால், வெள்ளை ஈக்களை அழித்தால் மட்டுமே இந்த நோயிலிருந்து தக்காளிச் செடிகளைக் காப்பாற்ற முடியும்.
இந்த ஈக்கள் இலைகளில்தான் முட்டையிடுகின்றன. முட்டை இடப்பட்ட இலைகளில்... தோசை மாவைத் தெளித்து விட்டதுபோல வெண்மை நிறத்தில் சில புள்ளிகள் தெரியும். இந்த அறிகுறி தென்பட்டவுடனேயே சுதாரித்து அவற்றை அழிக்க வேண்டும். ஏதாவது செடியில் இலைகள் சுருங்கிக் காணப்பட்டால் அந்தச்செடியை வேரோடு பிடுங்கி, வேறு இடத்துக்குக் கொண்டு போய் எரித்துவிட வேண்டும்.
மாவுப்பூச்சி
மாவுப்பூச்சியால் பெரிய பிரச்னை இல்லை என்றாலும் ஒரு செடியைத் தாக்கினால் மற்ற செடிகளுக்கும் பரவிவிடும். இவற்றைத் தடுக்க… 25 கிராம் மீன் எண்ணெய்யை காதி சோப் கரைசலுடன் கலந்து தெளிக்கலாம். தொடர்ந்து ஒரு லிட்டர் தண்ணீருக்கு 30 மில்லி வேப்பெண்ணெய் மருந்து என்ற விகிதத்தில் கலந்து தெளிக்க வேண்டும். மாவுப்பூச்சி அறிகுறி தெரிந்தவுடன் அழித்துவிட வேண்டும்.
இலைப்பேன்
இலையில் ஆங்காங்கே திட்டுத்திட்டாக இலைப்பேன்கள் காணப்படும். இவை தாக்கினால், பூக்கள் முதிர்ச்சி அடையும் முன்பே கருகிவிடும். இவை தக்காளியில் புள்ளி வாடல் நோயை உருவாக்கக்கூடிய வைரஸையும் பரப்புகின்றன. பாதிக்கப்பட்ட செடிகளில் இலைகள் சுருங்கிக் காணப்படும். அப்படிக் காணப்படும் செடிகளை வேரோடு பறித்து அழித்துவிட வேண்டும். பழைய தகர டப்பாக்களில் மஞ்சள் பெயின்ட் தடவி ஆமணக்கு எண்ணெய் தேய்த்து வயலில் ஆங்காங்கே கட்டி வைத்து வெள்ளை ஈக்களைக் கவர்ந்து அழிக்கலாம். ஒரு ஹெக்டேருக்கு 15 டப்பாக்கள் வரை வைக்கலாம். வாரம் ஒருமுறை டப்பாவைச் சுத்தப்படுத்தி மீண்டும் ஆமணக்கு எண்ணெய் தடவி வைக்க வேண்டும்.
அறுவடை
தக்காளியில் முக்கால் பாகம் பழுத்தவுடன்தான் அறுவடை செய்ய வேண்டும். காயாக அறுவடை செய்யக் கூடாது" என்றார்.
அடுத்து வரும் திங்கள் அன்று மிளகாய் சாகுபடி தொடர்பான தகவல்களைப் பார்க்கலாம். அதுவரை உங்கள் கருத்துகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்.
- வளரும்
source https://www.vikatan.com/news/agriculture/how-to-cultivate-tomato-in-terrace-garden-detailed-guidance-veetukkul-vivasayam-12
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக