Ad

வியாழன், 24 டிசம்பர், 2020

சான்டா க்ளாஸும் சில விநோதமான கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களும்! #XMas2020

இன்று கிறிஸ்துமஸ் திருநாள். கிறிஸ்துமஸ் என்றால் நமக்கு முதலில் நினைவுக்கு வருவது Santa Claus. சான்டா இல்லாமல் கிறிஸ்துமஸ் பூரணமடையாது. கிபி 280-ல் நிக்கோலஸ் என்ற ஒரு பாதிரியார், தற்போது துருக்கி என அழைக்கப்படும் Myra எனும் இடத்தில் வாழ்ந்தாராம். அவர் மிகவும் கருணயுள்ளவராகவும் தன்னிடம், உள்ள எல்லா பொருட்களையும் பிறருக்கு பகிர்ந்தளிப்பவராகவும் இருந்துள்ளார். இவர் இறந்த பின் அவரது ஆன்மாவை இரு தேவைதைகள் வந்து எடுத்து சென்றதாகவும் அதன் பின் அவரது வழியைப் பின்பற்றி காலம் காலமாக மற்றவர்களுக்கு பரிசுகள் அளித்து மகிழ்ந்து வருவதாகவும் நம்பப்படுகிறது. சான்டா பற்றி பல சுவாரஸ்யமான கதைகள் இருந்தாலும் பரவலாக நம்பப்படுவது இதுதான்.

சரி அப்படியாயின் சிறு வயதில் நம் வீட்டின் சிம்னி வழியாக இரவில் வந்து பரிசுப் பொருட்கள் வைத்து சென்ற சான்டா எங்கிருக்கிறார் என்கிற கேள்விக்கான பதில்தான் Lapland.

Santa Claus | Christmas

ஸ்வீடன், நார்வே, ரஷ்யா, மற்றும் பால்டிக் கடலினால் சூழப்பட்ட ஃபின்லாந்து நாட்டில் இருக்கும் ஓர் இடம்தான் இந்த Lapland. இன்று வரை சான்டாவின் அதிகாரப்பூர்வ வாசஸ்தலமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து பார்வையிடும் இடமாக இது இருந்து வருகிறது.

ஆரம்ப காலங்களில் சான்டா பச்சை, நீளம் எனப் பல நிறங்களில் ஆடை உடுத்தி வளம் வந்திருக்கிறார். அதன் பின்னர் கொககோலா நிறுவனம் தனது பிராண்டின் நிறமான சிகப்பு வெள்ளை நிறத்தில் அவருக்கு ஆடை அணிவித்து விளம்பரம் செய்ய, அது அனைவருக்கும் பிடித்துப்போக அதிலிருந்துதான் சான்டாவின் நிறம் மாறியது.

கிறிஸ்துமஸை மிக பிரமாண்டமாக கொண்டாடுவதில் ஐரோப்பிய நாடுகள் முதலிடம் வகிக்கின்றன. இயேசு கிறிஸ்துவின் வருகைக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர், ஐரோப்பியர்கள் குளிர்காலத்தின் இருண்ட நாட்களில், ஒளியையயும் பிறப்பையும் கொண்டாடினர். ஸ்கேண்டிநேவியர்கள் டிசம்பர் 21 முதல் ஜனவரி வரை கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள்.

நீண்ட குளிர்காலத்தின் பின் மீண்டும் சூரியன் ஒளிர்வதைக் கொண்டாடும் விதமாக கரிய மரத்துண்டுகளைக் கொண்டுவந்து எரிப்பார்கள். அது பூரணமாக எரிந்து முடிக்கும் வரை விருந்து வைத்து கொண்டாடுவார்கள். கவனமாக தேர்வு செய்யப்பட்ட ஒரு முழு மரம் பெயர்த்து, பெரிய விழாக்கோலமாக ஆரவாரத்துடன் வீட்டிற்குள் எடுத்து வரப்படும். மரத்தின் அடிப்பகுதி முதலில் தீக்குள் வைக்கப்பட்டு மிச்சம் இருக்கும் பகுதி அறைக்குள் நீண்டு கிடத்தப்பட்டிருக்கும். மிகுந்த கவனத்துடன் இந்த மரம் மெது மெதுவாக தீக்குள் செலுத்தப்பட்டு இரையாக்கப்படும். இது முழுவதுமாக எரிய கிட்டத்தட்ட 12 நாட்கள் ஆகலாம். எரியும் நெருப்பிலிருந்து வரும் ஒவ்வொரு தீப்பொறியும் அடுத்து வரும் ஆண்டில் பிறக்கவிருக்கும் ஒரு புதிய பன்றி அல்லது கன்றுக்குட்டியைக் குறிக்கும் என்று ஸ்கேண்டிநேவியர்கள் நம்பினார்கள்.

Santa Claus | Christmas

வெனிசூலா நாட்டின் தலைநகரான கராகஸில், ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் காலையில் நகரவாசிகள் ரோலர் ஸ்கேட்களில் தேவாலயங்களுக்குப் பெருமளவில் வருவார்கள். இதனால் நகரத்தின் பல வீதிகளில் காலை 8 மணி முதல் வாகனப் போக்குவரத்துக்கு மூடப்படும்.

டென்மார்க்கில் கிறிஸ்துமஸ் இரவு உணவு முடிந்ததும், சில பாரம்பர்ய கிறிஸ்துமஸ் பாடல்களுக்கு மரத்தைச் சுற்றி குடும்பமாக நடனமாடத் தொடங்குவார்கள். இரவு உணவின்போது நம் ஊர் பாயசம் போல Ris A L’Amalde எனப்படும் ஒரு விதமான Rice Pudding உணவைத் தயாரிக்கின்றனர். அதனுள் ஒரு பாதாம் பருப்பு வைக்கப்படுமாம். சாப்பிடும்போது யாருக்கு அந்த பாதாம் கிடைக்கிறதோ, அவருக்கு அந்த ஆண்டு அற்புதங்கள் நடக்கும் என நம்பப்படுகிறது.

நாம் கேள்விப்படாத விசித்திரமான பண்டிகை மரபுகளில் ஒன்று ஐஸ்லாந்திலிருந்து வருகிறது. அங்கு ஒரு மாபெரும் பூனை கிறிஸ்துமஸ் நேரத்தில் பனிமூடிய கிராமப்புறங்களில் சுற்றித் திரிவதாக நம்பப்படுகிறது.

அங்கு கடினமாக உழைத்த விவசாயிகளுக்குப் புதிய துணிகளையும், வேலை செய்யாது ஏமாற்றியவர்களுக்கு ராட்சத கிறிஸ்துமஸ் பூனையையயும் ஊக்கப்பரிசாகத் தருவார்களாம்.

நார்வே நாட்டுப்புறக் கதைகளின்படி, கிறிஸ்துமஸ் ஈவ் என்பது துர் ஆவிகள் மற்றும் கெட்ட மந்திரவாதிகள் வானத்தை நோக்கிச் செல்லும் நாள். கார்ட்டூன்களில் மந்திரவாதிகள் துடைப்பம் மற்றும் விளக்குமாறை தங்கள் போக்குவரத்து முறையாகப் பயன்படுத்துவதைப் பார்த்திப்போம். அதனால் இந்த கெட்ட மந்திரவாதிகள் கண்ணில் படாதவாறு கிறிஸ்துமஸ் இரவு அன்று குச்சிகளில் இணைக்கப்பட்ட எந்தவொரு துப்புரவுப் பொருட்களையும் நார்வே குடும்பங்களில் மறைத்து வைத்துவிடுவது பாரம்பர்யமாம்.

Santa Claus | Christmas

உக்ரைனில் மக்கள் சிலந்தி வலைகளால் தங்கள் கிறிஸ்துமஸ் மரங்களை அலங்கரிக்கின்றனராம். தமது குழந்தைகளுக்காக ஒரு மரத்தைக்கூட அலங்கரிக்க முடியாத ஓர் ஏழை விதவையின் கதையிலிருந்து இந்த பாரம்பர்யம் தோன்றியதாகச் சொல்லப்படுகிறது. சிலந்தி வலைகள் உக்ரேனிய கலாசாரத்தில் அதிர்ஷ்டமாகக் கருதப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முந்தைய சனிக்கிழமையன்று, பிலிப்பைன்ஸின் சான் பெர்ணான்டா நகரத்தில் ராட்சத விளக்கு விழாவான 'Ligligan Parul Sampernandu'-வை நடத்துகிறார்கள். பல கிராமங்கள் மிக அதிகமான காகித விளக்குகளை போட்டிபோட்டுக்கொண்டு உருவாக்குக்கின்றன. அவை ஆறு மீட்டர் (20 அடி) விட்டம் வரைப் பெரிதாகவும், கண்களைக் கவரும் வர்ணங்களாலும் பல வடிவங்களில் செய்யப்பட்டிருக்கும்.

கிறிஸ்துமஸ் மாலை அன்று, திருமணமாகாத செக் நாட்டு பெண்கள், தங்கள் முதுகை கதவை நோக்கி காட்டியவாறு திரும்பி நின்று காலணிகளில் ஒன்றை தோள்பட்டைக்கு மேல் தூக்கி எறிவார்களாம். கதவுப்பக்கம் கால்விரல் பகுதி விழுந்தால் அந்த வருடம் அவர்கள் மணவாழ்வில் இணைவார்கள் என்ற நம்பிக்கை அங்கேயிருக்கிறது.

Santa Claus | Christmas

இன்று கிறிஸ்துமஸ் சாதி, மத வேறுபாடுகள் இன்றி எல்லோராலும் கொண்டாடப்படும் பண்டிகையாக மாறிவிட்டது. கிறிஸ்துமஸில் ஆரம்பிக்கும் கொண்டாட்ட மனநிலை அப்படியே புது வருடம் வரை தொடர்கிறது. வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்ட கிறிஸ்துமஸ் மரங்கள், கேக், வைன், புத்தாடைகள், தேவாலய ஆராதனைகள், பகிர்ந்துகொள்ளப்படும் பரிசுப்பொருட்கள், நண்பர்களுடனான அரட்டை இவை எல்லாவற்றையும் தாண்டி, பரிசு மூட்டைகளோடு வரும் Santa Claus எப்போதுமே ஸ்பெஷல்தான்.

இந்த கிறிஸ்துமஸ் திருநாளில், ஒரு வருடமாக ஆட்டிப்படைக்கும் கொரோனாவிலிருந்து நிரந்தர விடுதலை தந்து மக்களை நிம்மதியாகவும், நோயின்றியும் வாழ்வதற்கன ஒரு சூழலை இயேசு கிறிஸ்து இவ்வுலகுக்கு பரிசாக அளிக்கட்டும்!

Merry Christmas!



source https://www.vikatan.com/lifestyle/international/santa-claus-and-the-christmas-celebrations-happening-all-around-the-world

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக