Ad

வெள்ளி, 11 டிசம்பர், 2020

`10 ரூபாய்க்கு 4 இட்லி, சாம்பார்!’ - சேலத்தில் பிரபலமடைந்த மோடி இட்லி

குஷ்பு இட்லியைப் போல சேலத்தில் தற்போது மோடி இட்லி பிரபலமடையத் தொடங்கியிருக்கிறது. சேலம் மாநகராட்சியின் பல பகுதிகளில் இந்த மோடி இட்லி விற்கப்படுகிறது. 4 இட்லி, 250 மில்லி சாம்பாரோடு வெறும் 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

விளம்பரம்

இந்த மோடி இட்லியை தயாரித்து வழங்கும் நிறுவனரும், பா.ஜ.க பிரசாரப் பிரிவின் மாநில துணை தலைவருமான மஹேஷிடம் பேசினோம். ``எங்கப்பா பேராசிரியர் ஶ்ரீதர். ஏழை, எளிய மக்கள் மீது அன்பு கொண்டு அவர்களுக்காக தொண்டாற்றினார். அதனால், அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆரிடம் சிறந்த சமூக சேவகர் என்ற பட்டத்தைப் பெற்றார். அப்பாவின் சிந்தனை எனக்குள்ளும் சிறு வயதிலிருந்தே இருந்தது. ஏழை, எளிய மக்களுக்கு பல உதவிகள் செய்து வந்தேன். கொரோனா காலத்தில் அது மேலோங்கியது.

கொரோனா தொடங்கியதிலிருந்து இன்று வரை ஒரு நாளைக்கு 7,500 பேர் வீதம் 3 1/2 லட்சம் பேருக்கு உணவுகள் வழங்கியுள்ளேன். 3 கோடி மதிப்பில் துப்புரவுப் பணியாளர்கள், தெருவோர வியாபாரிகள், அடிதட்டு மக்கள் என ஆயிரக்கணக்கான பேருக்கு இரண்டு மாதங்களுக்குத் தேவையான உணவு, மளிகைப் பொருட்கள் வழங்கியதோடு பல உதவிகளையும் செய்துள்ளேன். என்னுடைய நிதி, என் குடும்ப நிதி மட்டுமல்லாமல் என் சமூக வலைத்தளத்தை மோடி, அமித்ஷா உட்பட 35,000 பேர் பின்பற்றுகிறார்கள். அவர்கள் அளித்துள்ள நிதியிலிருந்தும் இந்த உதவிகளைச் செய்கிறேன்.

கொரோனா வைரஸ் உயிரிழப்புகளை ஏற்படுத்தியதோடு பொருளாதாரத்தையே சிதைத்து விட்டது. இதனால் பலர் வேலை இழந்துள்ளனர். பலருக்கு பாதியாகச் சம்பளம் குறைக்கப்பட்டுள்ளது. அவர்களுடைய துன்பங்களில் நானும் பங்கு கொண்டு என்னால் அவர்களுக்கு சிறு உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த மோடி இட்லி அறிமுகம் செய்திருக்கிறேன்.

மஹேஷ்

உலகத் தரத்திலான இயந்திரங்களைக் கொண்டு அரசி அளவிடுவது, கழுவுவது, அரைப்பது, மாவைக் கலப்பது என அனைத்து பணிகளையும் இயந்திரங்கள் கொண்ட அதி நவீன பொது சமையலறையை உருவாக்கி இருக்கிறோம். அங்கிருந்து சேலம் மாநகராட்சியில் உள்ள சேலம் ராஜாராம் நகர், அவ்வை மார்க்கெட், சாமிநாதபுரம் மாரியம்மன் கோயில், செவ்வாய்ப்பேட்டையில் உள்ள சண்முகா பஸ் ஸ்டாப், மீனாட்சி அம்மன் கோயில், போலீஸ் குடியிருப்பு, நாவலர் நெடுஞ்சாலை நகர், வீனஸ் பில்டிங், சேலம் அரசு மருத்துவமனை, சேலம் ராஜகணபதி கோயில் அருகில் என முதற்கட்டமாக 10 இடத்தில் காலை ஒருவேளை மட்டும் இட்லி வழங்கப்படுகிறது.

Also Read: "தற்காலத் தேர்தலும் குடவோலை முறையும் ஒன்றா?"- மோடி சுட்டிய உத்திரமேரூர் கல்வெட்டுகள் சொல்வது என்ன?

அடுத்த வாரத்தில் 30 இடங்களுக்கு விரிவாக்கம் செய்ய இருக்கிறோம். ஜனவரி மாதத்திலிருந்து காலை, மாலை இரண்டு வேளையும் விற்பனை செய்யப்படும். இந்த மோடி இட்லி பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது'' என்றார்.

சேவை

மோடி இட்லி வாங்குவதற்கு வரிசையில் காத்திருந்த செல்வம், ``உண்மையிலேயே 10 ரூபாய்க்கு இப்படி இட்லியும், சாம்பாரும் எங்கேயும் கிடைக்காது. இட்லியும், சாம்பாரும் சுவையாகவும், தரமாகவும் இருக்கு. இனி காலையில் வீட்டில் சாப்பாடு செய்ய வேண்டியதில்லை. இங்கேயே வாங்கி சாப்பிடலாம். காலையில் சமைப்பதற்கு தேவையான அரிசி, காய்கறி செலவு மீதியாகும். இந்த இட்லியை வழங்குபவர் நல்லா இருக்கணும்'' என்றார்.



source https://www.vikatan.com/news/tamilnadu/salem-people-welcome-modi-idly-concept

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக