Ad

சனி, 12 டிசம்பர், 2020

இஸ்ரேல்: இஸ்லாமிய நாடுகளுடனான பிரச்னைகள் எப்படித் தீர்ந்தன - அதில் ட்ரம்ப்பின் பங்கு என்ன?

1948-ம் ஆண்டு ஒரு தேசம் இரண்டு பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டன. அதில் ஒரு பிரதேசம் பிரிக்கப்பட்ட தினம் முதலே தனி நாடாக அங்கீகரிக்கப்பட்டது. மற்றொரு பிரதேசம் இன்று வரை, தனி நாடு என்கிற அங்கீகாரத்துக்காகப் போராடி வருகிறது. இதில் அங்கீகரிக்கப்பட்ட நாடு இஸ்ரேல். அங்கீகாரத்துக்காகப் போராடி வருவது பாலஸ்தீனம்.

இஸ்ரேல் கொடி
இஸ்ரேல். யூதர்கள் பெரும்பான்மையாக வாழும் ஒரு மத்திய கிழக்கு நாடு. இங்கு 70 சதவிகிதத்துக்கும் அதிகமான யூதர்கள் வாழ்ந்து வருகின்றனர். சுமார் 20 சதவிகித இஸ்லாமியர்களும், 5 சதவிகிதத்துக்கும் குறைவாகக் கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட மற்ற மதத்தவர்களும் வாழ்ந்து வருகின்றனர்.
பாலஸ்தீனம் கொடி
மற்றொரு பிரதேசமான பாலஸ்தீனம் இன்று வரையில் ஆக்கிரமிக்கப்பட்ட ஒரு பகுதியாகத்தான் குறிப்பிடப்பட்டு வருகிறது. 2012-ம் ஆண்டுதான் பாலஸ்தீனம் ஐ.நாவில் `அப்சர்வர் ஸ்டேட்' என்கிற அந்தஸ்தைப் பெற்றது. இங்கு 90 சதவிகிதத்துக்கும் அதிகமாக இஸ்லாமிய மக்களே வாழ்ந்து வருகின்றனர். மேற்குக் கரை, காஸா எனப் பாலஸ்தீனம் இரண்டு பகுதிகளாகப் பிரிந்துள்ளது. `தனிநாடு வேண்டும்' என்கிற கோரிக்கையை முன்வைத்து நீண்ட காலமாக போராடி வருகிறார்கள் பாலஸ்தீனர்கள்.

ஜெருசலேம் பிரச்னை!

1967-ம் ஆண்டு மத்திய கிழக்குப் போர் நடைபெற்றபோது கிழக்கு ஜெருசலேமை இஸ்ரேல் கைப்பற்றியது. ஒருங்கிணைந்த ஜெருசலேமே தங்கள் தலைநகரம் என்று அந்நாடு அறிவித்தது. இதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வரும் பாலஸ்தீனர்கள், வருங்காலத்தில் கிழக்கு ஜெருசலேம் எங்கள் தலைநகராக இருக்கும் என்று கூறி வருகின்றனர்.

பெரும்பாலான உலக நாடுகள் ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக ஏற்கவில்லை. இந்த நிலையில், 2017-ம் ஆண்டு, ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். இதைத் தொடர்ந்து இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையேயான மோதல் போக்கு மேலும் வலுப்பெறத் தொடங்கியது.

ஜெருசலேம்

Also Read: ``ஜெருசலேம் விவகாரத்தில் இந்தியா எடுத்தது தவறான முடிவு” - சுப்பிரமணியன் சுவாமி

இஸ்லாமிய நாடுகளுடன் என்ன பிரச்னை?

இஸ்ரேலில், கணிசமான அளவில் வாழ்ந்து வரும் அரேபியர்கள் உள்ளிட்ட சிறுபான்மை இன மக்கள் இரண்டாம் தர குடிமக்களாகவே நடத்தப்பட்டு வருகின்றனர். அரேபியர்கள் வாழ்கிற பகுதிகளில் இஸ்ரேல் சட்டவிரோதமாகக் குடியிருப்புகளை ஏற்படுத்தி வருகிறது. யூதர்களுக்கான தனி நாடாக இஸ்ரேலை மாற்றும் முயற்சியில் அங்குள்ள ஆட்சியாளர்கள் சில சட்டங்களையும் அமல்படுத்தி வந்தனர். பாலஸ்தீன நில அபகரிப்பு, இஸ்லாமிய மக்களை ஒடுக்குவது என்பது போன்ற நடவடிக்கைகளால் மத்திய கிழக்கில் உள்ள இஸ்லாமிய நாடுகள் அனைத்தும் இஸ்ரேலுக்கு எதிராகவே இருந்து வந்தன. இஸ்ரேலுக்கு அமெரிக்கா துணை போவதாகவும் இஸ்லாமிய நாடுகள் குற்றம்சாட்டி வந்தன. இதன் காரணமாக இஸ்லாமிய நாடுகள், போக்குவரத்து, ஏற்றுமதி, இறக்குமதி உள்ளிட்ட பொருளாதார உறவுகள் என எந்த உறவும் இஸ்ரேலுடன் வைத்துக் கொள்ளாமல் இருந்தன.

பிரச்னைக்குத் தீர்வு?

பல ஆண்டுகளாக நீடித்து வந்த இஸ்ரேல் - இஸ்லாமிய நாடுகள் பிரச்னையில், சில நாடுகளுடன் மட்டும் இந்த ஆண்டு சுமுகத் தீர்வுகள் எட்டப்பட்டன. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஐக்கிய அரபு நாடுகள் இஸ்ரேலுடன் அனைத்து உறவுகளையும் வைத்துக் கொள்ளச் சம்மதம் தெரிவித்திருப்பதாகச் செய்திகள் வெளியாயின. இதற்கு அமெரிக்காதான் முக்கியக் காரணம் என்ற செய்திகளும் வெளிவந்தன. இதையடுத்து அமெரிக்கா, இஸ்ரேல், ஐக்கிய அரபு நாடுகளிடையே மூன்று நாட்டு ஒப்பந்தம் கடந்த செப்டம்பர் மாதத்தில் போடப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் இரு நாடுகளுக்கிடையேயான பொருளாதார ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இரு நாடுகளுக்குமிடையே விமான போக்குவரத்தும் உருவாக்கப்பட்டுள்ளது. இதுவரை இருநாடுகளுக்கிடையே ப்ளாக் செய்யப்பட்டிருந்த தொலைபேசி தொடர்புகளும் சரி செய்யப்பட்டுள்ளன. இரு நாடுகளிலும் தூதரகம் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகின்றன.

ஐக்கிய அரபு நாடுகள்

இந்த மூன்று நாட்டு ஒப்பந்தத்தில் பாலஸ்தீனம் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாயின. `பாலஸ்தீனத்தில் ஆக்கிரமிப்புப் பணிகளை இஸ்ரேல், அமெரிக்காவின் ஒத்துழைப்போடு இனி செய்யாது' எனக் குறிப்பிடப்பட்டுள்ளதாகச் செய்திகளில் சொல்லப்பட்டிருந்தன. `அமெரிக்காவின் ஒத்துழைப்போடு செய்யமாட்டோம் என்றுதான் இஸ்ரேல் வாக்குறுதியளித்துள்ளது. ஒருவேளை தனியாகவே பாலஸ்தீனத்தில் ஆக்கிரமிப்புப் பணிகளை இஸ்ரேல் மேற்கொள்ள வாய்ப்புள்ளது' என்றும் அரசியல் வல்லுநர்கள் சிலர் விவாதங்களைக் கிளப்பினர்.

ஐக்கிய அரபு நாடுகளைத் தொடர்ந்து பஹ்ரைன், சூடான் ஆகிய இஸ்லாமிய நாடுகளும் அமெரிக்காவின் உதவியோடு இஸ்ரேலுடன் ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டு உறவுகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளன. இஸ்லாமிய நாடுகளுடன் இஸ்ரேல் ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்கு இடைத்தரகராகச் செயல்பட்டு வந்தவர் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ட்ரம்ப்

Also Read: தாய்லாந்து: ஜெர்மனி ஹோட்டலில் மன்னர் உல்லாசம்; பாங்காக் வீதிகளில் மக்கள் போராட்டம் - என்ன நடக்கிறது?

இந்த நல்லுறவு ஒப்பந்தங்களுக்கு இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் வரவேற்பு தெரிவித்தன. ஆனால், ஈரான், துருக்கி உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகள் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றன.

முன்னதாக 1980-ம் ஆண்டில் இஸ்லாமிய நாடான எகிப்தும், 1994-ல் மற்றொரு இஸ்லாமிய நாடான ஜோர்டானும் இஸ்ரேலுடன் முழு ராஜாங்க ஒப்பந்தம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

எதிர்ப்பு தெரிவிக்கும் ஈரான், பாலஸ்தீனம்!

பாலஸ்தீனத்துக்கு நேரடியாக ஆதரவளித்து வரும் ஈரான், இஸ்ரேலுடன் இஸ்லாமிய நாடுகள் உறவு வைத்துக் கொள்வதைக் கடுமையாக எதிர்த்து வருகிறது. ஐக்கிய அரபு நாடுகள், இஸ்ரேல் உடன் ராஜாங்க ரீதியான ஒப்பந்தங்களை வைத்துக் கொண்ட போதே சில கருத்துகளை வெளியிட்டிருந்தது ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகம்.

பாலஸ்தீனமும் `இது தூரோகச் செயல்' என்று கூறி கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகிறது. பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியான காஸாவில் இயங்கி வரும் ஹமாஸ் போராளிகள் அமைப்பும், `இஸ்லாமிய நாடுகள் இஸ்ரேலோடு கூட்டு வைத்துக் கொள்வது, தங்கள் மக்களின் முதுகிலேயே குத்தும் செயல்’ எனக் கருத்து வெளியிட்டுள்ளது.

இஸ்ரேல்-மொராக்கோ ஒப்பந்தம்!

இந்தநிலையில், கடந்த வியாழன் அன்று மற்றொரு இஸ்லாமிய நாடான மொராக்கோ, இஸ்ரேலுடன் ராஜாங்க ரீதியான முழு ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகின. `அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், மொராக்கோ மன்னர் 6-ம் முகம்மதிடம் தொலைபேசியின் மூலம் பேசி இந்த ஒப்பந்தத்தை முடித்து வைத்துள்ளார்' என்று வெள்ளை மாளிகை தகவல் வெளியிட்டுள்ளது.

இஸ்ரேல் - மொராக்கோ

இதையடுத்து ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் பின்வருமாறு பதிவிட்டிருந்தார்.

மொராக்கோ மன்னர் 6-ம் முகம்மது, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின்

``இந்த ஒப்பந்தம் அன்பு மிகுந்த அமைதிக்கான ஒப்பந்தமாக இருக்கும்'' என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூ கூறியுள்ளார்.

மொராக்கோ-மேற்கு சஹாரா!

மொராக்கோ -இஸ்ரேல் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, மேற்கு சஹாரா மீதான மொராக்கோவின் இறையாண்மையை அங்கீகரிக்க ஒப்புக் கொண்டுள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

மேற்கு சஹாரா பிரதேசத்தில் சுமார் 5 லட்சம் மக்கள் மட்டுமே வசித்து வருகிறார்கள். இந்தப் பிரதேசத்தின் நிலப்பரப்பில் பெரும்பாலான பகுதிகள் பாலைவனம்தான். நீண்ட காலமாக ஸ்பெய்னின் காலனி நாடாக இருந்து வந்தது மேற்கு சஹாரா. 1975-ம் ஆண்டு மொராக்கோவுடன் இணைக்கப்பட்டது. ஆனால், தனிநாடு அந்தஸ்து வேண்டுமென மேற்கு சஹாரா போராடி வருகிறது. போலிசாரியோ முன்னணி (Polisario Front) என்ற இயக்கம் தனி நாடு கோரிக்கையை முன்னிறுத்திப் போராடி வருகிறது. 16 ஆண்டுகால போராட்டத்துக்குப் பின்னர் கடந்த 1991-ம் ஆண்டு, சுதந்திரத்துக்கான வாக்கெடுப்பு நடத்த ஐ.நா பேச்சுவார்த்தையில் ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், பொது வாக்கெடுப்பு இன்று வரை நடத்தப்படவில்லை.

மேற்கு சஹாரா

இந்தநிலையில்தான் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மொராக்கோவுக்கு மேற்கு சஹாரா மீதான இறையாண்மையை அங்கீகரிக்கப் போவதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை அடுத்து போலிசாரியோ முன்னணியின் ஐ.நா தூதர் ஓமர், ``மேற்கு சஹாராவின் சட்ட ரீதியான தகுதி என்பது சர்வதேச சட்டங்கள் மூலமாகவும், ஐ.நா-வின் தீர்மானங்கள் மூலமாகவும்தான் தீர்மானிக்கப்படுகிறது. மேற்கு சஹாராவின் சில பகுதிகளைச் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் மொராக்கோ, அதனைத் தொடர்வதற்காக நாட்டின் ஆன்மாவையே விற்கத் தயாராக உள்ளது என்பதைத்தான் இந்த ஒப்பந்தம் காட்டுகிறது'' என்று கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஜனவரி 19-ம் தேதி வரையிலும்தான் ஆட்சியில் இருப்பார். ஜன. 20-ம் தேதியிலிருந்து ஜோ பைடன் அமெரிக்காவின் அதிபர் பொறுப்பை ஏற்கவிருப்பதால், மேற்கு சஹாரா குறித்த ஒப்பந்தத்தின் நிலைப்படு எப்படி வேண்டுமானாலும் மாறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

ட்ரம்ப் - ஜோ பைடன்

Also Read: ஜோ பைடன்: சோகம் நிறைந்த பர்சனல் பக்கங்கள்; சவால் நிறைந்த அரசியல் பக்கங்கள் - அதிபரானது எப்படி?

அரசியல் நோக்கர்கள் என்ன சொல்கிறார்கள்?

``இந்த 2020-ம் ஆண்டில், கொரோனா, ஊரடங்கு, எல்லைப் பதற்றம், பொருளாதாரச் சரிவு என உலக நாடுகள் அனைத்துமே ஏதோ ஒரு வகையில் அவதிப்பட்டுக் கொண்டுதான் இருந்தன. அப்படியிருக்கையில், இஸ்ரேலுக்கு எதிரி நாடுகளாக இருந்த மத்திய கிழக்கு நாடுகள், தற்போது அமைதிப் போக்கை கடைபிடித்து இஸ்ரேலுடன் நல்லுறவு ஒப்பந்தங்களைச் செய்திருப்பது மகிழ்ச்சியான விஷயம்தான். அதேநேரத்தில், பாலஸ்தீனம், மேற்கு சஹாரா போன்ற பிரதேசங்கள் தனி நாடு கோரிக்கையோடு பல ஆண்டுகளாகப் போராடி வருகின்றன. அந்தப் பகுதிகளையும் தனிநாடுகளாக அறிவித்தால் நன்றாக இருக்கும். இஸ்ரேல் உடனான இந்த ராஜாங்க ஒப்பந்தங்கள் மூலம் எந்த நாட்டுக்கும் தீமை ஏற்படாமல் இருந்தால், அதுதான் உண்மையில் அமைதிக்கான ஒப்பந்தமாக இருக்கும்'' என்கிறார்கள் உலக அரசியல் நோக்கர்கள்.



source https://www.vikatan.com/government-and-politics/international/muslim-countries-diplomatic-relations-deal-with-israel-role-of-us-president-trump

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக