Ad

வெள்ளி, 11 டிசம்பர், 2020

டபுள் எவிக்ஷன்?! `அன்பு' கேங்கில் இரண்டு விக்கெட்கள் விழுமா? பிக்பாஸ் – நாள் 68

சிங்கத்தை அதன் குகையிலேயே சென்று சந்திப்பதைப் போல, சிறை வாசலுக்குச் சென்று தூங்கிக் கொண்டிருந்த அனிதாவை எழுப்பி, "பேசலாமா?" என்றார் ரியோ. "நானும் பேசுவேன்" என்றார் அனிதா. (பின்னே அதானே கான்வர்சேஷன்?!) எனவே "டெஃபனட்லி... டெஃபனட்லி" என்பது போல் ரியோவின் முகம் ஆடியது.

அனிதாவின் கோபமும் வருத்தமும் ரியோவிற்குள் குற்றவுணர்ச்சியை ஏற்படுத்தியிருக்க வேண்டும். எனவே விளக்கம் அளித்துவிட்டு வருவதின் மூலம் அதை தணித்துக் கொள்ளலாம் என்று அவர் நினைத்திருக்கக்கூடும். குரூப்பிஸத்திற்குள் மாட்டிக் கொண்டாலும் ரியோ அடிப்படையில் மனசாட்சி உறுத்தும் நபர். டாஸ்க்கில் எவரையாவது புண்படுத்தி விட்டால் உடனே பதறி ‘சாரி’ கேட்பதை ‘ரோபோ டாஸ்க்’கிலும் பார்த்திருக்கலாம்.

ஆனால் விளக்கம் சொல்லப்போன ரியோ சொன்ன காரணங்கள் மிகச் சுமாராக இருந்தன. "நிஷா செஞ்சது பிடிக்கலை. அனிதா செஞ்சது Boring-ஆ இருந்தது" என்று விநோதமான காரணத்தைச் சொன்னார். பூ என்றாலும் புஷ்பம் என்றாலும் ஒன்றுதானே? கூடுதலாக ஒரு காரணத்தையும் சொன்னார் ரியோ. "நான் நிஷாவுக்கு வேற ஒரு அயிட்டம் வெச்சிருக்கேன். அடுத்த வாரம் அவங்களை நாமினேட் பண்ணுவேன்" என்றார் ரியோ. (நம்பிட்டோம்!) “அதெல்லாம் எனக்குத் தேவையில்லாத விஷயம்" என்று அந்தக் காரணத்தை இடது கையால் ஒதுக்கினார் அனிதா.

பிக்பாஸ் – நாள் 68

“இவன் ஏன் தேவையில்லாம அங்க போய் வாக்குவாதம் பண்ணிக்கிட்டு இருக்கான்?” என்று உள்ளே அர்ச்சனா சலித்துக் கொள்ள, "அதெல்லாம் ரமேஷ் அங்க இருக்கார்” என்றார் நிஷா. என்னவொரு நம்பிக்கை!

“இங்க இவ்வளவு அமளி துமளி நடந்துக்கிட்டு இருக்கு. எதைப் பத்தியும் கவலைப்படாம மிக்சர் தின்னுக்கிட்டு இருக்கானே... யார்ரா இவன்?” என்று கவுண்டமணி சொல்லும் வசனத்திற்கு மிகப் பொருத்தமானவர் ரமேஷ். அனிதாவும் ரியோவும் ஆவேசமாக சண்டையிட்டுக் கொண்ட சத்தத்தின் இடையேயும் கீழேயுள்ள பெட்டில் ‘சொகுசாக’ தூங்கிக் கொண்டிருந்தது ‘ராஜா வீட்டுக் கன்னுக்குட்டி’.

பாலாஜியும் ரம்யாவும் அனிதா தரப்பின் நியாயங்களை எடுத்துச் சொன்னார்கள். "நான் பத்து நிமிஷம் அழுததால கேம் கெட்டுப் போச்சுன்னு சொல்லாதீங்க" என்றபடி பின்னாலேயே வந்தார் அர்ச்சனா. அந்த பத்து நிமிஷம் கூட அவர் ரோபோவாகத்தான் இருந்தாராம். ரியோ போலவே அர்ச்சனாவும் சம்பந்தமில்லாத காரணங்களை அடுக்க, அனிதாவின் பதில் வாக்குவாதத்தை எதிர்கொள்ள முடியாமல் உள்ளே போனார்.

வீட்டிற்கு உள்ளே வந்த ரியோ, "உன்னாலதான் நான் கட்டுப்பட்டிருக்கேன்... உன்னை ‘best performer’ சொன்னதால என்னைக் கார்னர் பண்றாங்க" என்று பழியைத் தூக்கி நிஷாவின் மீது போடுவதின் மூலம் நிஷாவை குற்றவுணர்ச்சிக்கு ஆளாக்குகிறார். அனிதா தொடர்பாக முறையற்ற காரணத்தை ரியோ சொல்லாமல் இருந்திருந்தால் இத்தனை பிரச்னை வந்திருக்காது. இதற்கும் நிஷாவிற்கும் தொடர்பேயில்லை.

பிக்பாஸ் – நாள் 68

‘வெள்ளச்சாமி மறுபடியும் பாட ஆரம்பிச்சிட்டான்’ என்கிற கதையாக ‘இந்த வாரம் யார் வெளியேறுவார்?’ என்கிற ஆருடத்தை ஆஜீத் மறுபடியும் சொல்ல ஆரம்பித்து விட்டார் போலிருக்கிறது. "ரியோவின் நண்பர் அல்லது பாலாஜிக்கு நெருக்கமாக இருக்கிற நபர்... இரண்டில் ஒருவர்" என்பது ஆஜீத்தின் ஜோசியம். ‘கூண்டோடு கைலாசம்’ என்று கமல் சொன்னது போல் இந்த வாரம் இரண்டு பேர் வெளியேற்றப்படலாம் என்றொரு தகவல் உலவுகிறது.

ஓய்வறை நேரம் முடிந்து அனிதாவையும் ரமேஷையும் வெளியே அனுப்பினார்கள். தூங்கியெழுந்து புத்துணர்ச்சியுடன் வெளியே வந்த ரமேஷ், மறுபடியும் தூங்குவதற்காக வீட்டிற்குள் சென்றார்.

அதன் பிறகு ஆரம்பித்தது அந்த ரணகளமான கொடூர காமெடி. ‘ஓடி வருது ரயிலு... நான் வேர்க்கடலை சாப்பிடற மயிலு...’ என்று ஷிவானி சொல்ல, ‘நீ பத்தாங்கிளாஸூ ஃபெயிலு... அனிதா போனாங்க ஜெயிலு...’ என்று பதிலுக்கு நிஷா சொல்ல ‘அடுக்கு மொழி நகைச்சுவை மூலம்’ இருவரும் நம்மை சாகடித்தார்கள். ‘ஷிவானி வாய் திறந்து பேசவில்லை’ என்பதை இதுவரை ஒரு புகாராக சொல்லிக் கொண்டிருந்தோம். இதைப் பார்த்த பிறகு அவர் அமைதியாக இருந்தாலே போதும் என்று தோன்றி விட்டது.

விஜய் டிவியின் ‘கலக்கப் போவது யாரு’ நிகழ்ச்சியில் ராமர் என்றொரு காமெடியன் இருக்கிறார். அவர் பொதுவாக ஆர்ப்பாட்டமாக நகைச்சுவை செய்ய மாட்டார். எதையாவது விமர்சித்து லேசாக ஒரு வரியை அவர் சொன்னாலே பார்ப்பவர்களுக்கு சிரிப்பு பொங்கிக் கொண்டு வரும். இந்த அடுக்கு மொழி நகைச்சுவையை அவர் கிண்டல் செய்யும் விதமே தனி.

"வேற ஒண்ணுமில்ல. கிண்டின்னு வந்துச்சுல்ல. அதுக்கப்புறம் வண்டின்னு சொல்லுவாங்க... அவ்வளவுதான்... ஃப்ரீயா விடுங்க" என்று சொல்லி இது போல் ஜோக் சொன்னவர்களை காலி செய்து விடுவார். நிஷாவும் ஷிவானியும் ‘பழைய ஜோக்’ தங்கதுரையை விடவும் அதிகமாக நம்மை சோதனை செய்தார்கள்.

“அங்க பாரு ஷிவானி... அத ஏன் பார்க்கறே ச்சீ.. வா.. நீ”

“அதோ போறாங்க நிஷா. அவங்க காமெடி ஆயிடுச்சு பளசா”..

(எங்க கிட்டயும் சீப்பு இருக்கு... நாங்களும் சீவுவோம்).

“மக்களே. இதுக்கெல்லாம் நான் பொறுப்பில்ல... வாக்களிக்கும் போது யோசிச்சு வாக்களியுங்க. நீங்களாவது ஒரு மணி நேரம்தான் பார்க்கறீங்க. நாங்க இருபத்துநான்கு மணி நேரமும் இது மாதிரி கொடுமையைச் சகிச்சுக்கிறோம்" என்று கவுண்டமணி சாய்ஸில் கேமரா முன் கதறி தீர்த்தார் ரியோ. இந்த மொக்கை காமெடி மூலமாக நிஷாவும் அனிதாவும் ராசியானது ஒரு நல்ல விஷயம்.

பிக்பாஸ் – நாள் 68

சோம் கவுண்டவுன் சொன்னவுடன் அதற்கேற்ப வீட்டின் விளக்குகள் அணைந்தன. (கொடியசைந்ததும் காற்று வந்ததா.. காற்று வந்ததும் கொடியசைந்ததா?).

நாள் 68 விடிந்தது. வினுச்சக்கரவர்த்தி குரலில் ராப் பாடல் ஒன்று ஒலிக்க, பாடலின் இறுதியில் ‘ஆதித்யா அருணாச்சலம்’ என்ற வாய்ஸ் வந்தவுடன் ‘யார்ரா இது?’ என்று திகைத்துப் பார்த்தார் ஷிவானி.

"பேர் வெச்சது கூட ரியோவிற்கு பிரச்னையில்ல. அவரோட நண்பர்களையெல்லாம் நாம ரோபோ டீம்ல சேர்த்துட்டம்ல. அவிங்க அசிங்கப்பட்டதுதான் ரியோவிற்குப் பிரச்னை" என்று பாலாஜியிடம் சொல்லிக் கொண்டிருந்தார் அனிதா.

"நிஷா ஏன் டல்லா இருக்காங்க?" என்று சோம் விசாரிக்க "சனிக்கிழமையானாலே அவளுக்கு இப்படி குளிர்சுரம் வந்துடும்" என்றார் அர்ச்சனா. ஓ. இதுதான் Saturday Night fever-ஆ?

"நேத்திக்கு நடந்த பிரச்னையால நைட்டு தூங்கலை" என்று ரியோவிடம் சொல்லிக் கொண்டிருந்தார் நிஷா. "நீ நல்லா பண்ணியிருந்தா கூட நான் இதுவரைக்கும் உன்னை கேப்டன்சிக்கு நாமினேட் பண்ணதேயில்ல... நேத்து மட்டும்தான் பண்ணினேன். பிரச்னையாயிடுச்சு. நீ ஒரு நல்ல பிளேயர்தான்" என்று நிஷாவிற்கு சமாதானம் சொல்லிக் கொண்டிருந்தார் ரியோ.

ஓர் அணியாக மனிதர்கள் நட்பாகவோ குழுவாகவோ இருப்பதில் தவறில்லை. ஆனால் அந்தக் குழு மனப்பான்மையினால் விளையாட்டில் பாரபட்சமும் சக போட்டியாளருக்கு அநீதியும் நிகழ்ந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் முக்கியம். ரியோ இப்படியெல்லாம் கவலைப்படாமல் தன் ஆட்டத்தை ஆடலாம். ‘குருப்பிஸம்’ என்கிற விஷயம் அங்கே இருப்பதை அவருடைய உள்ளுணர்வு அறிந்திருப்பதால்தான் இத்தனை ஜாக்கிரதையாக இருக்கிறார்.

பிக்பாஸ் – நாள் 68
‘Triples’ என்கிற வெப்சீரிஸின் டிரெய்லர் காட்டப்பட்டது. அதையொட்டியே ஒரு டாஸ்க்கையும் அறிவித்தார் பிக்பாஸ். மூன்று பேர் கொண்ட அணிகள் உருவாகி, பிக்பாஸ் அனுபவத்தை ஒரு கதையாக சொல்ல வேண்டுமாம். உண்மையில் இந்த ‘கதை அனுபவம்’ மகா சோதனை நேரமாக அமைந்தது. அத்தனை அறுவை.

ஆனால் இந்த டாஸ்க்கின் மூலம் ஒரு ரகசியம் உறுதியானது. அர்ச்சனா க்ரூப் தங்களுக்கு ‘வேல் பிரதர்ஸ்’ என்கிற பெயரைச் சூட்டியிருந்தார்கள். ஆக சுச்சி சொன்னது உண்மைதான். அவர் மனப்பிராந்தியில் சொல்லவில்லை. வெளியேறிய ‘வேல்முருகனின்’ நினைவாக இந்தப் பெயராம். எனில் இதை விடவும் அபத்தம் ஏதும் இருக்க முடியாது. ஆசாமி இருக்கும் போது ‘வாயை மூடு வேலு’ என்று அவரை விதம் விதமாக ஒதுக்கி வைத்து விட்டு அவர் சென்ற பிறகு அவர் பெயரில் குரூப் ஆரம்பிப்பது தலைவர்களின் சிலைக்கு வருடா வருடம் சம்பிரதாயத்திற்கு மாலை போடுவது மாதிரியான அபத்தம்.

இந்த டாஸ்க்கில் ஆரி, அனிதா, பாலாஜி க்ரூப் மிகவும் அறுவையாக இழுத்துச் சென்றதால், ரம்யாவிற்கு போரடித்தது. எனவே இந்த டீமை கிண்டல் செய்து கமெண்ட்களை ரகசியமாக மைக்கில் சொல்லிக் கொண்டிருக்க பிறகு அதைப் பாராட்டி ரம்யாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார் பிக்பாஸ். மேலும் ‘இரவு சமைக்க வேண்டாம். நாங்களே சோறு போடுகிறோம்’ என்று கூடுதல் ஆனந்தத்தையும் போட்டியாளர்களுக்குத் தந்தார்.

நிஷாவின் அடுக்கு மொழி நகைச்சுவை ரம்யாவிற்கும் பரவி விட்டது போல. ‘ஆரி... அவர் ஒரு மாரி..." என்று பாட்டாக பாடிக் கொண்டிருந்தார். கூடவே அர்ச்சனாவும் இணைந்து கொண்டார். சோறு வடிக்கும் வேலை இல்லாததால் இந்தக் கொண்டாட்டம் போலிருக்கிறது. ஆரி காதில் விழுந்தால் பூரியாக பொங்கி விடுவார்.

பிக்பாஸ் – நாள் 68

நிஷாவின் ‘சனிக்கிழமை ஜூரம்’ ஷிவானிக்கும் பரவி விட்டது போல. ‘நம்பிக்கை குறைவா இருக்கு’ என்று கண்கலங்க அர்ச்சனாவிடம் புலம்பிக் கொண்டிருந்தார். ‘தட்டில் சோறு போடுங்க’ என்றால் அதற்குப் பதிலாக அன்பைப் பரிமாறும் அர்ச்சனா உடனே ஷிவானியை தனியாக அழைத்துச் சென்று ஆறுதல் கூறத் துவங்கினார். வருடம் பூராவும் ஜாலியாக சுற்றி விட்டு தேர்விற்கு முதல்நாள் குளிர்சுரத்தில் நடுங்கும் மாணவனைப் போல இருக்கிறது ஷிவானியின் கதை.

ஏரியாவில் எந்தப் பொருள் காணாமல் போனாலும் அந்த ஏரியாவில் உள்ள அக்யூஸ்ட்டுகளைத்தான் முதலில் தேடுவார்கள். அதுபோல ஷிவானி அழ ஆரம்பித்தவுடனே ஒட்டு மொத்த வீடும் பாலாஜியைத் திரும்பிப் பார்த்தது. ‘என்னாச்சு’ என்று விசாரித்தார் அனிதா. ஷிவானி இருந்த அறைக்குள் எட்டிப் பார்த்த பாலாஜி ‘அப்பாடா... காரணம் நான் இல்லையா?’ என்று கேட்டு நிம்மதியானார்.

அடுத்த வார தலைவருக்கான போட்டி தொடங்கியது. நிஷா, ரம்யா, பாலாஜி ஆகியோர் களத்தில் இருந்தார்கள். இவர்களின் புகைப்படம் அடங்கிய க்யூப்கள் தனித்தனியாக பிரிந்திருக்கும். அவற்றை யார் முதலில் ஒன்று சேர்த்து உருவத்தை அமைக்கிறார்களோ, அவரே வெற்றி பெற்றவர்.

நிஷா பயங்கரமாக சொதப்பிக் கொண்டிருக்க அர்ச்சனா டீம் கவலையுடன் பார்த்துக் கொண்டிருந்தது. ரம்யாவும் பாலாஜியும் திறமையாக அடுக்கிக் கொண்டிருந்தார்கள். ஒரு கட்டத்தில் பாலாஜி தன் உருவத்தை முடித்து விடவே ‘வாழ்த்துகள் கேப்டன்’ என்று வீடே கொண்டாடியது. அனிதாவிற்கு இதில் அதிக ஆனந்தம். நிஷா வென்றிருந்தால் அவர் மிகவும் காண்டாகியிருப்பார்.

பாலாஜியின் பெயர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு அவர் சபைக்கு வந்தவுடன் ஒரு ‘ட்விஸ்ட்’ நடந்தது. தான் அமைத்த உருவத்தில் ஒரு பிழை இருப்பதாகவும் எனவே இந்த வெற்றிக்கு தான் தகுதியில்லை என்றும் உருவத்தை சரியாக அமைத்த ரம்யாவே தகுதியானவர் என்றும் பாலாஜி தெரிவிக்க சபை அதிர்ச்சியிலும் குழப்பத்திலும் ஆழ்ந்தது.

ரியோவும் சோமுவும் வெளியில் ஓடிச் சென்று பார்த்தார்கள். ஆம். அது உண்மை. ஒரு க்யூப் இடம் மாறி அமைந்திருந்தது. உண்மையில் வீட்டின் கேப்டனான அனிதா இதை சரியாக கவனித்திருக்க வேண்டும்.

பிக்பாஸ் – நாள் 68
பிக்பாஸ் – நாள் 68

பாலாஜியின் இந்த நேர்மை பாராட்டத்தக்கது. பிக்பாஸூம் இதைப் பாராட்டியதோடு மட்டுமல்லாமல் ‘மூன்றாவது அம்பயர் கண்ணாடி அணியாமல் வந்து விட்டதால் இந்த தவறு நிகழ்ந்தது’ என்று நகைச்சுவை முலாம் பூசி பிக்பாஸ் டீமின் தவற்றையும் வெளிப்படையாக ஒப்புக் கொண்டார். ஆனால் பிக்பாஸின் அறிவிப்பை தவறாக கேட்ட இதர போட்டியாளர்கள் ‘பாலாஜி கண்ணாடி அணியவில்லை’ என்று சொல்லி கேலி பேச, தன் அறிவிப்பை மீண்டும் செய்த பிக்பாஸ் ‘அவங்களை நம்பாதீங்க... உங்களை கோத்து விடறாங்க’ என்று பாலாஜியை சமாதானம் செய்தார்.

பிக்பாஸூம் தங்களைப் போலவே லோக்கல் மொழியில் பேசுவதைக் கண்டு போட்டியாளர்கள் உற்சாகமானார்கள். ‘மச்சி... ஒரு குவார்ட்டர் சொல்லேன்’ என்கிற ரேஞ்சிற்கு போகாமல் இருநதால் சரி.

பாலாஜியின் நேர்மையை அனைவரும் பாராட்ட ‘நீதான் ரியல் வின்னர்’ என்று அவருக்கு ஐஸ் வைத்தார் அனிதா. ஆக இந்த ட்விஸ்ட்டின் மூலம் ரம்யாதான் அடுத்த வார தலைவர் என்பது உறுதியானது. இது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது. அம்மணிக்கு சிரிப்பும் பெருமையும் தாங்கவில்லை.

கடந்த முறையும் கேப்டன் பதவி பறிபோய், இந்த முறையும் அதில் ட்விஸ்ட் நடந்ததால் ‘ஒவ்வொரு முறையும் ஏதாவது கோளாறு நடக்குதே’ என்று ஜாலியாக முனகினார் பாலாஜி. ராஜதந்திரத்துடன் செயல்படுவதாக நினைத்துக் கொண்டு சாமை பாலாஜி தலைவர் ஆக்கும் போதே நான் எழுதியிருந்தேன். பாலாஜியாக விரும்பும் போது அவருக்கு கேப்டன் பதவி அமைய முடியாத சூழல் ஏற்படலாம் என்று. அது இப்போது உண்மையாயிற்று.

சென்ற வார கேப்டன்சி குளறுபடியில் ‘குறும்படத்தின்’ மூலம் தன் போங்காட்டம் வெளிப்பட்டதால் பாலாஜி உஷாராகி விட்டாரோ என்னமோ! ‘இந்தச் செவரு இப்ப பாலாஜியை காவு வாங்கிடுச்சு’ என்று ரம்யாவை கிண்டல் செய்தார் சோம்.

அணி பிரிக்கும் வேலையை, ஒரு தலைவராக ரம்யா கறாராக கையாண்டிருக்க வேண்டும். இவரும் அனிதாவைப் போலவே அவரவர்களின் விருப்பத்திற்கு விட்டுவிட சிறிய குழப்பம் நடந்தது. சமையல் அணிக்கு அர்ச்சனாவை மீண்டும் அமர்த்தியதில் அவரின் க்ரூப் அங்கே செல்ல அதிகம் ஆர்வம் காட்டியது.

பிக்பாஸ் – நாள் 68

குறிப்பாக அந்தக் க்ரூப்பின் புதிய உறுப்பினரான கேபி, அச்சுக்காவின் பக்கத்திலேயே ஒட்டிக் கொள்ள முயன்றார். கடந்த வாரமும் கேபி சமையல் டீமில்தான் இருந்தார். ஆனால் அவரின் பங்களிப்பு அதில் குறைவாக இருந்தது என்பதை பலரும் சுட்டிக் காட்டினார்கள். என்றாலும் அதே அணியில் மீண்டும் கேபியை இணைப்பது முறையற்றது.

ஆரி சமையல் அணிக்குச் செல்ல விரும்பி கையைத் தூக்கினாலும் ‘நீங்க ரெண்டு வாரம் இருந்துட்டீங்க’ என்று சொல்லி அவரைத் தடுத்து விட்டார் அர்ச்சனா. கேபியும் சமையல் அணியில் தொடர்ச்சியாக இருந்தவர்தான். எனில் அவருக்கு மட்டும் தனி நியாயம் ஏன்? அதிசயமாக பாலாஜியும் சமையல் அணிக்கு கைதூக்க அவரை இணைத்துக் கொண்டார்கள்.

“கிச்சன் டீமில் கேபியை முன்னிறுத்தி அவரைக் காப்பாற்ற முயற்சி செய்கிறார்கள்" என்று கிச்சன் கேபினெட் பாலிட்டிக்ஸை பிறகு விரிவாக பாலாஜியிடம் சொல்லிக் கொண்டிருந்தார் ஆரி. "அர்ச்சனா முன்னாடி சென்றவுடன் ஆட்டுக்குட்டிகள் போல் பின்னால் சென்று விட்டார்கள். கேபியும் பிடிவாதமா அங்கதான் நிக்குது" என்பது அவருடைய புகார். இதற்கு நடுவில் அனிதா எதையோ சொல்ல வர அதை தடுத்து நிறுத்தினார் ஆரி. நல்ல வேளையாக அனிதாவிற்குக் கோபம் வரவில்லை. ரியோவிடம் தன் மனக்குமுறல்களையெல்லாம் கொட்டி விட்ட பிறகு அம்மணி இன்று முழுக்க உற்சாகமாக இருக்கிறார்.

கேப்டன்சி டாஸ்க்கில் நிஷா பயங்கரமாக சொதப்பியதைப் பற்றி ரியோவும் அர்ச்சனாவும் கவலையுடன் பேசிக் கொண்டிருந்தார்கள். இந்த வாரம் தாண்டி, அடுத்த வாரம் நிஷா தலைவராகவும் ஆகிவிட்டால் ஒரு வாரத்திற்கு பிரச்னையிருக்காது என்று நினைத்தார்கள் போல. ‘இந்த வாரம் நிஷா போய் விடுவாரோ’ என்கிற கவலையும் அவர்களை ஆட்டிக் கொண்டிருந்தது. ரமேஷின் சிஷ்யையான நிஷா, இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் பக்கத்தில் நன்கு தூங்கிக் கொண்டிருந்தார்.

ஆரியின் உரையாடல் பாலாஜியின் மனதில் சஞ்சலத்தை ஏற்படுத்தி விட்டது போல. சமையல் அணிக்காக உற்சாகத்துடன் முதலில் கையைத் தூக்கியவர், இப்போதோ "கிச்சன் டீம்ல இருந்து வெளியே வந்துடலாம்னு பார்க்கறேன்" என்று அனிதாவிடம் அனத்திக் கொண்டிருந்தார். “ஆமாம்டா... நீ அங்க இருக்க வேண்டிய ஆளே இல்ல... டம்பிள்ஸ் பிடிக்க வேண்டிய கை, கரண்டியை பிடிக்கலாமா?” என்று அனிதாவும் பின்பாட்டு பாடினார். பாலாஜி அர்ச்சனா டீமிடம் இணையத் துவங்குவது குறித்த கவலை அனிதாவிற்குள் வந்திருக்கலாம்.

பிக்பாஸ் – நாள் 68

வாக்குறுதி அளித்த படி இரவு உணவை சிக்கன், பரோட்டா என்று அசத்தி அனுப்பியிருந்தார் பிக்பாஸ். ‘சாமி... சோறு போடுது’ என்று பறக்காவெட்டிகள் போல அலைபாய்ந்து ஓடினார்கள் போட்டியாளர்கள்.

அனிதாவிற்கு நிகழ்ந்த அநீதி, பச்சையாக வெளிப்படும் குழுமனப்பான்மை உள்ளிட்டு பல விவகாரங்களை கமல் அழுத்தமாக விசாரிக்க வேண்டிய தருணம் இது. அர்ச்சனா குழுவில் இருந்து ஒருவர் வெளியேறினால் ஆட்டம் சற்று சூடுபிடிக்கும்.

இந்த வாரம் ‘டபுள் எவிக்ஷன்’ நடக்கலாம் என்றும் ஒரு தகவல் உலவுகிறது. எனில் அர்ச்சனா மற்றும் பாலா குழுவிலிருந்து தலா ஒருவர் வெளியேற்றப்பட்டால் அது இதர போட்டியாளர்களுக்கு ஓர் எச்சரிக்கை மணியாக இருக்கும். ஆனால், அன்பு கேங்கில் இருந்து இருவர் வெளியேற்றப்படுவதாகத் தகவல். அந்த இரண்டாவது நபர் அன்பு கேங்கில் உள்ளே, வெளியே என வந்துபோகும் ராஜாவாம். என்ன நடக்கிறதென்று பார்ப்போம்.


source https://cinema.vikatan.com/bigg-boss-tamil/new-captain-ramya-bigg-boss-tamil-season-4-day-68-highlights

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக