கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற யு.பி.எஸ்.சி சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. அதில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் கணேஷ்குமார் பாஸ்கர் தேசிய அளவில் 7-வது இடத்தையும், தமிழக அளவில் முதலிடத்தையும் பிடித்திருக்கிறார். அவரையடுத்து தமிழக அளவில் இரண்டு மற்றும் மூன்றாவது இடங்களையும் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவிகள் ஐஸ்வர்யா மற்றும் பிரியங்கா ஆகியோர் பெற்றிருக்கின்றனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த மருங்கூர் கிராமத்தைச் சேர்ந்த முந்திரி விவசாயி ராமநாதன் மகள் ஐஸ்வர்யா தமிழக அளவில் இரண்டாவது இடத்தையும், அகில இந்திய அளவில் 47-வது இடத்தையும் பெற்றுள்ளார்.
பண்ருட்டியை அடுத்த புதுப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த சம்பத் என்பவரின் மகள் கிருஷ்ணபிரியா என்ற மாணவியும் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றிருக்கிறார். அகில இந்திய அளவில் இவர் 514-வது இடத்தை பிடித்திருக்கிறார். பண்ருட்டியை அடுத்த கண்டரகோட்டை கிராமத்தைச் சேர்ந்த சிவபிரகாசம் என்பவரது மகள் பிரியங்கா தமிழக அளவில் மூன்றாவது இடத்தையும், அகில இந்திய அளவில் 68-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
Also Read: `ஏழாவது இடத்த நான் எதிர்பார்க்கல!’ - ஐ.ஏ.எஸ் தேர்வில் சாதித்த கணேஷ்குமார்
கடலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் படிப்பை முடித்துவிட்டு, 2017-ம் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கட்டுமானத் துறையில் பொறியியல் படிப்பை முடித்தார். அதையடுத்து ஒரு வருடம் சிவில் சர்வீஸ் தேர்வுக்காகப் பயிற்சி செய்து 2018-ம் ஆண்டு யு.பி.எஸ்.சி தேர்வில் இந்திய அளவில் 630-வது இடத்தை பெற்று ஐ.ஆர்.எஸ் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டார். தற்போது தெலுங்கானா மாநிலம் செகந்தராபாத்தில் அதற்கான பயிற்சியில் இருக்கும் இவர், மீண்டும் இரண்டாவது முறையாக சிவில் சர்வீஸ் தேர்வெழுதி அகில தமிழக அளவில் இரண்டாவது இடத்தைப் பெற்றிருக்கிறார்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய ஐஸ்வர்யா, ``2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியில் எங்கள் கடலூர் மாவட்டம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. கடலூர் மாவட்டத்தில் அப்போது ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இருந்த ககன்தீப் சிங் பேடி பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை மிகவும் திறமையாகவும், துடிப்புடனும் செய்து அனைத்து மாவட்டங்களுக்கும் முன்னோடியாக இருந்தார். அதனால், அவரைப்போல ஐ.ஏ.எஸ் அதிகாரியாக வர வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் வேரூன்றியது. என் முயற்சிகள் அனைத்துக்கும் துணையாகவும் வழிகாட்டியாகவும் இருந்தது என் அம்மா இளவரசிதான். அம்மாவுக்கு சிறு வயதிலேயே திருமணமாகிவிட்டதால், அதன்பிறகுதான் கல்லூரிப் படிப்பையே முடித்தார்.
நான் கல்லூரியில் முதல் ஆண்டு படித்துக்கொண்டிருந்தபோது, அவர், `டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 ஏ' தேர்வெழுதி வெற்றி பெற்றார். தற்போது, தமிழக அரசின் கல்வித் துறையில் அவர் பணியாற்றி வருகிறார். அவர்தான் என்னுடைய ரோல் மாடல். அவரைப் பார்த்துதான், நான் அனைத்து தேர்வுகளையும் எழுதத் தொடங்கினேன். அவருடைய வழிகாட்டுதல்தான் என் வெற்றிக்குக் காரணம். என்னுடைய வயதிலிருக்கும் என் தோழிகள் அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. அப்படி இருந்தும் என் அப்பா என்னைக் கட்டாயப்படுத்தாமல் படிப்பதற்கு தேவையான அனைத்தையும் செய்தார்” என்று நெகிழ்கிறார்.
தமிழக அளவில் மூன்றாவது இடத்தை பெற்ற பிரியங்கா பள்ளிப்படிப்பை கடலூர் தனியார் பள்ளியில் முடித்துவிட்டு, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பயோ-மருத்துவ பிரிவில் பொறியியல் படித்தார்.
Also Read: கரூர்: `விவசாயிகளுக்குப் பாதுகாவலனா இருப்பேன்!' - ஐ.ஏ.எஸ் தேர்வில் சாதித்த அபிநயா
அதன்பிறகு சிவில் சர்வீஸ் தேர்விற்குப் பயிற்சி செய்து 2018-ம் ஆண்டு தேர்வெழுதி தோல்வியடைந்தார். அதையடுத்து மீண்டும் 2019-ம் ஆண்டு தேர்வெழுதி, அகில இந்திய அளவில் 68-வது இடத்தையும், தமிழக அளவில் மூன்றாவது இடத்தையும் பிடித்திருக்கிறார்.
Also Read: மதுரை: `பெற்றோர் அளித்த ஊக்கம்!’ - சிவில் சர்வீஸ் தேர்வில் சாதித்த பார்வை மாற்றுத்திறன் மாணவி
நம்மிடம் பேசிய பிரியங்கா, ``விளிம்புநிலை மக்களின் நன்மைக்காகவும் வளர்ச்சிக்காகவும் எனது சேவை இருக்கும். பெண்கள் மற்றும் விவசாயிகளின் பாதுகாப்பிற்காகவும், வளர்ச்சிக்காகவும் உழைப்பேன்” என்கிறார் உறுதியுடன்.
source https://www.vikatan.com/news/tamilnadu/cuddalore-3-students-crack-civil-service-exams
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக