Ad

புதன், 19 ஆகஸ்ட், 2020

சுஷாந்த் வழக்கு: `உண்மையை நோக்கி முதல் படி!’- சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம்

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், கடந்த ஜூன் மாதம் மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள தன் வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். இவரின் மரணம் ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் உள்பட அனைவரையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பின்னர் சுஷாந்த் தற்கொலை செய்து கொள்ளவில்லை அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் எனப் பெரும் சர்ச்சை வெடித்தது. இதையடுத்து இவர் உயிரிழப்பு தொடர்பாக மும்பை போலீஸார் தொடர்ந்து விசாரணை செய்து வந்தனர்.

சுஷாந்த் - ரியா

சுஷாந்துக்கு நெருக்கமான நண்பர்கள், உறவினர்கள், பாலிவுட் பிரபலங்கள் என 50-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இதற்கிடையில் கடந்த ஜூலை 25-ம் தேதியன்று சுஷாந்தின் சொந்த மாநிலமான பீகாரில் உள்ள பாட்னா காவல்நிலையத்தில், `தன் மகனைத் தற்கொலை செய்யத் தள்ளியது, அவரது தோழி ரியா சக்ரபர்த்திதான்' என சுஷாந்தின் தந்தை கிருஷ்ணகுமார் சிங் புகார் அளித்தார்.

Also Read: சுஷாந்த்: `ரூ.15 கோடி; அதிகப்படியான மருந்து!’ - லீக்கான வீடியோவும் தந்தை புகாரும்

இதுதொடர்பான விசாரணைக்காக மும்பை வந்த பீகார் மாநில ஐ.பி.எஸ் அதிகாரி வினய் திவாரி, கொரோனா தடுப்பு நடவடிக்கை எனக் கூறி மும்பையில் தனிமைப்படுத்தப்பட்டார். இந்த நடவடிக்கைக்கு, பீகார் மாநில முதல்வர் நிதீஷ் குமார், கடும் கண்டனம் தெரிவித்ததோடு, இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் என்று பரிந்துரை செய்தார்.

இந்தநிலையில், தனக்கு எதிராகப் பீகாரில் பதியப்பட்டுள்ள வழக்கை மும்பைக்கு மாற்ற வேண்டுமென்று உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார் ரியா. இந்த வழக்கு கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் துஷார் மேத்தா, ``பீகார் அரசின் பரிந்துரையை ஏற்று இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டுவிட்டது" என்று கூறினார்.

சுஷாந்த் சிங்

Also Read: சுஷாந்த் தற்கொலை இரு மாநில அரசியல் பிரச்னையாக உருமாறியது எப்படி?! #Timeline

இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அமர்வு,``நடிகை ரியா சக்ரபர்த்தியின் மனு மீது மகாராஷ்டிர அரசு, பீகார் அரசு, சுஷாந்தின் தந்தை ஆகியோர் 3 நாள்களுக்குள் பதிலளிக்க வேண்டும். எந்த மாநில காவல்துறையின் விசாரணை வரம்புக்குள் இந்த வழக்கு விசாரணை வருகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. திறமை வாய்ந்த நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணம் தொடர்பான உண்மை வெளிப்பட வேண்டும். மும்பை போலீஸாரின் விசாரணை தொடர்பான நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும்" என்று கூறி இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்திருந்தது.

இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த இவ்வழக்கில் தீர்ப்பளித்து முடித்து வைத்துள்ளது உச்ச நீதிமன்றம். அந்த தீர்ப்பில், ``சுஷாந்த்சிங் மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும்" என்று உத்தரவு பிறப்பித்துள்ளது உச்ச நீதிமன்றம்.

மேலும், சுஷாந்த் தற்கொலை வழக்கை மும்பைக்கு மாற்றக்கோரி ரியா தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. வழக்கு தொடர்பாக மும்பை காவல்துறை இதுவரை சேகரித்த அனைத்து ஆதாரங்களையும் சிபிஐ-யிடம் ஒப்படைக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து சுஷாந்த் சிங்கின் சகோதரி சுவேதா சிங் கீர்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில்,

உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை வரவேற்று, #justiceforSushanthSinghRajput #CBITakesOver #1StepToSSRJustice என்ற மூன்று ஹேஷ்டேக்குகளை ட்விட்டரில் இந்திய அளவில் நெட்டிசன்கள் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள் .


source https://cinema.vikatan.com/bollywood/sushant-singh-rajput-case-transferred-to-cbi-by-supreme-court

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக