Ad

புதன், 19 ஆகஸ்ட், 2020

மதுரை: `கிழக்கே தாமரையின் இலக்கு!’- அ.தி.மு.கவை உரசும் பா.ஜ.க தேர்தல் விளம்பரங்கள்

மதுரையை சேர்ந்த அமைச்சர்கள் வெளிப்படுத்தும் கருத்துகள் முதலமைச்சர் எடப்பாடிக்கு குடைச்சலை கொடுத்துக்கொண்டிருக்கும் நிலையில், அவர்களுக்கு கூட்டணிக் கட்சியினர் குடைச்சலைக் கொடுக்கத் தொடங்கியிருப்பது மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

பாஜக தேர்தல் விளம்பரம்

இன்னும் சட்டமன்றத் தேர்தலுக்கு தேதி அறிவிக்காத நிலையில் மதுரையில் தேர்தலை எதிர்நோக்கி சின்னங்களை வரைந்து வேலை செய்து வருகிறார்கள் பா.ஜ.க.வினர். மதுரை மாவட்டத்திலுள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிட அ.தி.மு.க நிர்வாகிகள் திட்டமிட்டு வரும் நிலையில், குறிப்பிட்ட தொகுதிகள் எங்களுக்குத்தான் என்று தெரிவிப்பது போல பா.ஜ.க.வினரின் நடவடிக்கைகள் உள்ளன.

மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் எங்கு பார்த்தாலும் `மதுரை கிழக்கே தாமரையின் இலக்கு’ என்ற கோஷத்துடன் தேர்தல் விளம்பரத்தைச் செய்துள்ளனர். மதுரை தெற்குத் தொகுதி, மத்தியத் தொகுதி, திருப்பரங்குன்றம், சோழவந்தான், மேலூர் தொகுதிகளிலும் இதேபோல் தாமரையை முன்னிறுத்தி விளம்பரம் செய்யத் திட்டமிட்டு வருகிறார்கள்.

சங்ககர் பாண்டி

`வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.வுக்கு மதுரையில் இடம் ஒதுக்குவதே சந்தேகம், இந்த நிலையில் அவர்களே தொகுதிகளை முடிவு செய்து விளம்பரம் செய்வதை என்ன சொல்வது? அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க செல்வாக்குடன் இருக்கும்போது கூட்டணி கட்சிகளுக்குத் தொகுதிகளை விட்டுக் கொடுக்க மாட்டோம்' என்று அ.தி.மு.க நிர்வாகிகள் கூறி வருகிறர்கள்.

கிழக்குத் தொகுதியில் தேர்தல் விளம்பரப் பணியில் தீவிரமாக இருக்கும் பா.ஜ.க இளைஞரணி மாநில துணைச்செயலாளர் சங்கர் பாண்டியிடம் கேட்டோம். ``தமிழகம் முழுவதும் மக்களிடம் பா.ஜ.க-வைக் கொண்டு செல்ல வேண்டும் என்பது எங்கள் இலக்கு. அதற்கான வேலைகளைத் தொடங்கியுள்ளோம். தி.மு.க வசம் இருக்கும் கிழக்கு சட்டமன்றத் தொகுதியை பா.ஜ.க கைப்பற்றத் திட்டமிட்டுள்ளோம். அதற்காகத்தான், `கிழக்கு தாமரையின் இலக்கு' என்ற கோஷத்துடன் வேலையைத் தொடங்கியுள்ளோம். அ.தி.மு.க கூட்டணியில் இடம் ஒதுக்குவது பற்றி பின்னால் பார்த்துக்கலாம். எங்களுக்கு செல்வாக்குள்ள தொகுதிகளில் நாங்கள் வேலைகளைத் தொடங்கியுள்ளோம்'' என்றார்.

பாஜக விளம்பரம்

Also Read: மதுரை: `விஜயகாந்த் பிறந்தநாள் பேனரை அகற்றிய அ.தி.மு.க-வினர்?’ - கொதிக்கும் தே.மு.தி.க

இத்தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் பி.மூர்த்திக்குக்கும், பா.ஜ.க-வினருக்கும் கடுமையான மோதல் நடந்து கொண்டிருப்பதால், அவருக்கு எதிராகவே இந்த விளம்பரங்களை பா.ஜ.க-வினர் செய்வதாகச் சொல்லப்படுகிறது. இருப்பினும், இந்த விளம்பரங்களால் அ.தி.மு.க-வினர் அப்செட்டில் இருக்கிறார்கள். சமீபத்தில் பேனர் வைப்பதில் மதுரை மாநகர அ.தி.மு.க-வினருக்கும், தே.மு.தி.க-வினருக்கும் மோதல் ஏற்பட்டு கூட்டணிக்குள் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், பா.ஜ.க-வினரின் தேர்தல் விளம்பரங்கள் அ.தி.மு.க-வினரை உரசிப் பார்ப்பதுபோல் இருக்கிறது என்று பேசிக்கொள்கிறார்கள்.



source https://www.vikatan.com/news/politics/madurai-admk-upset-over-bjp-cadres-election-campaign

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக