Ad

புதன், 19 ஆகஸ்ட், 2020

சென்னை: `காதலிக்கு பட்டுப்புடவை; காட்டிக்கொடுத்த கத்திரிக்கோல்' - கவரிங் நகைகளை திருடிய இளைஞர்

சென்னை தாம்பரம் இரும்புலியூர், தமிழ்பூங்கா தெருவைச் சேர்ந்தவர் ஜீவானந்தம். இவர் ஜெராக்ஸ் கடை நடத்திவருகிறார். இவரின் மாமியார் வீடு ஈக்காட்டுதாங்கலில் உள்ளது. கடந்த 15-ம் தேதி ஜீவானந்தம், வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் மாமியார் வீட்டுக்குச் சென்றார். அங்கேயே தங்கிவிட்டார். இந்த நிலையில், வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை சம்பவம் நடந்தது. இதுகுறித்து ஜீவானந்தம் தாம்பரம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் உதவி கமிஷனர் அசோகன் தலைமையிலான போலீஸார் கொள்ளைச் சம்பவம் குறித்து விசாரித்தனர்.

கொள்ளை நடந்த வீடு

கொள்ளை நடந்த வீட்டில் கிடைத்த கைரேகைகள் அடிப்படையில் முதலில் விசாரித்தனர். அப்போது மதுரவாயலைச் சேர்ந்த செல்வா என்கிற வெள்ளை சிவா என்பவரின் கைரேகையுடன் ஒத்துப்போனது. இதையடுத்து தாம்பரம் போலீஸார் செல்வாவைத் தேடி மதுரவாயல் மேட்டுகுப்பத்தில் உள்ள அவரின் வீட்டுக்குச் சென்றனர். அங்கு செல்வா தூங்கிக் கொண்டிருந்தார். இரும்புலியூர் கொள்ளை தொடர்பாக செல்வாவிடம் போலீஸார் விசாரித்தனர். அப்போது அவர், உண்மையை ஒப்புக் கொண்டார்.

போலீஸ் விசாரணையின்போது செல்வா, `சார், கடந்த 15-ம் தேதிதான் (சுதந்திர தினம்) ஜெயலில் இருந்து வெளியில் வந்தேன். என்னுடைய காதலிக்கு பரிசு கொடுக்க ஆசைப்பட்டேன். அதனால் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட முடிவு செய்தேன். இதற்காக இரும்புலியூர் பகுதியில் நோட்டமிட்டேன். அப்போது ஒரு வீட்டில் பூட்டு போடப்பட்டிருந்தது. உடனே பூட்டை உடைத்து உள்ளே சென்றேன். அந்த வீட்டிலிருந்த பீரோக்களை திறந்தபோது லாக்கரில் நகை பாக்ஸ்கள் இருந்தன. அதைப்பார்த்தும் நான் மகிழ்ச்சியடைந்தேன். அனைத்து நகைகளையும் கொள்ளையடித்தேன்.

பீரோ

பின்னர், அதன் அருகில் இருந்த பீரோவை திறந்தேன். அதில் பட்டுபுடவைகள் இருந்தன. அதையும் எடுத்துக்கொண்டேன். பிறகு வெள்ளி பொருள்கள், 8,000 ரூபாய் பணம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றேன். நீண்ட நாள்களுக்குப்பிறகு காதலியைச் சந்தித்து அவளுக்கு பரிசாக பட்டுபுடவைகளை கொடுத்தேன். அதனால் அவள் மகிழ்ச்சியடைந்தாள். நகைகளை விற்கலாம் என முடிவு செய்தபோது அது கவரிங் நகைகள் எனத் தெரியவந்தது. அதனால் அதை தூக்கி எரிந்துவிட்டேன். என்னை மன்னித்து விட்டுவிடுங்கள்' என்று கண்ணீர்மல்க கூறியுள்ளார்.

இதையடுத்து போலீஸார், செல்வாவை கைது செய்து அவரிடமிருந்து பணம், வெள்ளி பொருள்கள், பட்டுபுடவைகளை பறிமுதல் செய்தனர். இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் கைரேகை நிபுணர்களும் போலீஸாரும் ஜீவானந்தம் வீட்டில் சோதனை செய்தபோது இன்ப அதிர்ச்சியாக இருட்டில் இருந்த ஒரு பீரோ செல்வாவின் கண்ணுக்குத் தெரியவில்லை. அதில் தங்க நகைகள் 18 சவரன் இருந்துள்ளது. இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் அந்த நகைகள் தப்பியதால் ஜீவானந்தம் குடும்பத்தினர் மகிழ்ச்சியடைந்தனர். போலீஸாரும் நிம்மதியடைந்தனர்.

கைதான செல்வா

Also Read: ``9 பவுன் திருடினோம், அதில் 8 பவுன் கவரிங் நகை சார்!"- போலீஸை சிரிக்க வைத்த கொள்ளையர்கள்

இந்தக் கொள்ளைச் சம்பவம் குறித்து தாம்பரம் போலீஸார் கூறுகையில், ``கொள்ளை நடந்த 24 மணி நேரத்தில் செல்வாவைக் கைது செய்துள்ளோம். செல்வா மீது 3 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதனால்தான் அவரின் கைரேகை மூலம் இந்தக் கொள்ளைச் சம்பவத்தை எளிதில் கண்டறிய முடிந்தது. ஜீவானந்தம் வீட்டில் செல்வா கொள்ளையடித்தபோது அவரின் கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன. அதில் வீட்டிலிருந்த கத்திரிக்கோலில் செல்வாவின் கைரேகை தெளிவாக பதிவாகியிருந்தது. அதனால்தான் செல்வாவை கைது செய்ய முடிந்தது. மேலும், ஜீவானந்தத்துக்கு பெண் குழந்தைகள் உள்ளனர். அதனால்தான் அவர் அதிகமாக கவரிங் நகைகளை வீட்டில் வாங்கி வைத்திருந்தார். ஜீவனந்தத்தின் மனைவிக்கு நகைகள் மீது அதிக ஆசை. அதனால்தான் அவரின் வீட்டில் 20 சவரனுக்கு மேல் கவரிங் நகைகள் இருந்துள்ளன. கவரிங் நகைகளால் தங்க நகைகள் தப்பியுள்ளன. ஆனால் 100 சவரன் கவரிங் நகைகள் என்று தவறான தகவல்கள் வெளியாகிவிட்டது" என்றனர்.



source https://www.vikatan.com/news/crime/chennai-police-arrested-youth-in-theft-case-with-the-help-of-finger-print-scanning

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக