`தாய்மொழி தமிழ்; தொடர்புமொழி ஆங்கிலம்' என இருமொழிக் கொள்கையைக் கடைப்பிடித்துவருகிறது தமிழ்நாடு. ஆனால், தற்போது அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் புதிய கல்விக் கொள்கை, `தாய்மொழி - ஆங்கிலம் - விருப்பமொழி' என்ற மும்மொழிக் கொள்கையை வலியுறுத்துகிறது. இதில், விருப்பமொழி என்பது மறைமுகமாக இந்தியைத் திணிக்கிறதென்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு!
தமிழக அரசோ, இவ்விஷயத்தில் தங்களது நிலைப்பாடு என்னவென்பதை உறுதியாகத் தெரிவிக்காமல், மௌனம் காத்துவந்தது. எனவே, `இருமொழிக் கொள்கை'யை உறுதிப்படுத்துகிற அறிவிப்பை தமிழக அரசு வெளியிட வேண்டும் எனத் தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தன. இந்நிலையில் இன்று அந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
`அண்ணா - கருணாநிதி இறுதி செய்ததும், எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா உறுதி செய்ததும் இருமொழிக் கொள்கைதான். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசும் அதைத் தாங்கிப் பிடிக்கத் தயங்கத் தேவையில்லை. தேசியக் கொடியை மதிப்போம். திராவிடக் கொடியும் பிடிப்போம்!' என கவிஞர் வைரமுத்துவும் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
மொழியுணர்வில், ஏனைய மாநிலங்களுக்கெல்லாம் முன்னோடியாகவும், கடந்தகால மத்திய அரசுகளின் `இந்தித் திணிப்பு'க்கு எதிராகத் தீவிர களப்போராட்டமும் கண்ட தமிழ்நாட்டில், மீண்டும் மொழிக்கொள்கை குறித்த பேச்சுகள் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளன. இந்நிலையில், `புதிய கல்விக்கொள்கை' வலியுறுத்துகிற மும்மொழி விவகாரம் குறித்துப் பேசுகிற அரசியல் செயல்பாட்டாளரும் மொழியுரிமைப் போராளியுமான ஆழி.செந்தில்நாதன்,
``மும்மொழிக் கொள்கைத் திட்டம் என்பதே ஓர் ஏமாற்றுவேலை. ஆனால், `கூடுதலாக ஒரு மொழியைக் கற்றுக்கொள்வதில் என்ன தவறு இருக்கிறது...' என்று நிறைய பேர் நினைக்கிறார்கள். நீங்கள் ஒரு மொழியை அல்ல... எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் கற்றுத் தேர்ந்துகொள்ளுங்கள். அதில் எந்தவித பிரச்னையும் இல்லை. ஆனால், புதிய கல்விக் கொள்கையில் `மும்மொழிக் கொள்கை' என்ற பெயரில், `இந்தி மொழி'யை கற்றுக்கொள்ளச் சொல்லி நம் பிள்ளைகளைக் கட்டாயப்படுத்துவதுதான் பிரச்னையே... இதனால், இது மெல்ல மெல்ல நம் தாய்மொழியான தமிழையே அழித்துவிடும். இப்படித்தான் மகாராஷ்டிரா, பஞ்சாப், ஒடிசா என பல மாநிலங்களிலும் நடந்திருக்கிறது. இப்போது இதை நாடுமுழுக்க செயல்படுத்துவதுதான் மத்திய பா.ஜ.க அரசின் திட்டம்.
பன்மைத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட இந்தியாவில் பல்வேறு மொழிகளும் பண்பாடுகளும் நிறைந்திருக்கின்றன. இந்நிலையில், உங்கள் தாய்மொழியோடு, ஆங்கில மொழியையும் கட்டாயமாகக் கற்றுக்கொள்ள வேண்டும் என்கிறார்கள். ஆங்கிலம் கற்றுக்கொள்வதில் எந்தப் பிழையும் இல்லை. அது உலகளாவிய பொருளாதாரம் சார்ந்த தொடர்பு மொழி!
என் தாய்த் தமிழ் மொழியோடு, தொடர்புமொழியாக நாங்கள் ஏற்கெனவே ஆங்கிலம் கற்றுத்தான் வருகிறோம். எனவே, பொதுமொழியாக ஆங்கிலத்தை நாங்கள் கற்றுவரும் சூழலில், கூடுதலாக இந்தி மொழியையும் ஏன் நாங்கள் கற்க வேண்டும்? இந்தியை ஆட்சி மொழி என்று நீங்கள் எப்படிச் சொல்கிறீர்கள்? தமிழ்நாட்டில், ஆட்சி மொழியாகத் தமிழ்தானே இருக்க வேண்டும். மத்திய அரசு நிறுவனங்களும் பொதுத்துறை நிறுவனங்களும்கூட தமிழ்நாட்டில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தைத்தானே தொடர்புமொழியாகக் கொண்டிருக்க வேண்டும்.
`தமிழ், ஆங்கிலம் தவிர 3-வது மொழியாக உங்கள் விருப்ப மொழியைத் தேர்வு செய்துகொள்ளலாம்' என்று தேன் தடவிய வார்த்தைகளில் சொல்லியிருக்கிறீர்கள். ஒரு பள்ளியில், விருப்பப் பாடமாக ஆளுக்கொரு மொழியைத் தேர்வு செய்தால், அத்தனை மொழிகளுக்கும் தனித்தனியே ஆசிரியர் நியமனம் செய்வீர்களா? ஒட்டுமொத்தமாக இந்தி மொழி படிக்க விரும்புகிற மாணவர்களின் எண்ணிக்கை அதிகம் என்று சொல்லி இந்தி மொழிக்கான ஆசிரியரை மட்டும்தானே நியமிப்பீர்கள்!
இப்படியே தொடரும்போது, அடுத்தகட்டமாக `இந்தியாவின் தொடர்புமொழி இந்தி, உலகளாவிய தொடர்புமொழி ஆங்கிலம். இவையிரண்டையும் கற்றாலே போதும். தமிழ், தெலுங்கு, கன்னடம் என்று ஏன் கூடுதலான மொழியையும் கற்றுக்கொண்டிருக்க வேண்டும் என்ற இடத்துக்குத்தானே வருவீர்கள். கடந்த காலங்களில் இப்படியான செயல்முறைகளை செய்ததால்தானே பஞ்சாப், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில், `இந்தி மொழி வரவால், எங்கள் தாய்மொழி அழிந்தே போய்விட்டது. இனி நாங்கள் தாய்மொழியை மீட்டெடுக்கப் போகிறோம்' என்று போராடிக்கொண்டிருக்கிறார்கள். இப்படியெல்லாம் வரலாறு திரும்புவதை முன்கூட்டியே கணித்துதான் தமிழ்நாட்டில், `இருமொழிக் கொள்கை'யை வகுத்துத் தந்தார் பேரறிஞர் அண்ணா.
`பெரும்பான்மை மக்கள் பேசும் இந்தி மொழியைக் கற்றுக்கொள்வது நல்லதுதானே... இதில் என்ன பாதகம் இருக்கப்போகிறது...' என்று சிலர் கேட்கிறார்கள். இப்போதே, மத்திய அரசுத்துறை நிறுவனங்களான எல்.ஐ.சி, ரயில்வே, வங்கி மற்றும் பொதுத்துறை நிறுவனங்களான பெல், என்.எல்.சி போன்றவற்றில் 1,000 பணியிடங்களில் 900-க்கும் மேற்பட்ட இடங்களை இந்தி மொழி பேசுவோரைக் கொண்டுதான் நிரப்பிவருகிறீர்கள். மாநில மொழி பேசுவோரைத் திட்டமிட்டு புறக்கணிக்கின்றனர். ஆக, மொழி என்பது இங்கே அதிகாரமாகத்தான் இருக்கிறது. நம் தாய் மொழியை இழப்பதென்பது, அதிகாரத்தை இழப்பதற்கு சமம்.
இந்தி மொழியைப் படித்தே ஆக வேண்டும் என்றால், அதற்கென தனியே நிறுவனங்களைத் தொடங்கி கற்றுக்கொடுங்கள். இதற்காகவே இந்தி பிரசார சபா இருக்கிறதே... அதன் மூலம் படித்துக்கொள்ளுங்கள். இன்னும்கூட, அவரவர் விருப்பம் முன்னேற்றத்தின் அடிப்படையில் உலகளாவிய வேற்று மொழிகளைக் கற்றுத் தேறுங்கள். எனவே, இங்கே இந்தி மொழியைக் கற்றுக்கொள்வதில் எந்தவித பிரச்னையும் கிடையாது. ஆனால், அதைக் கட்டாயமாக்கி திணிப்பதில் உள்ள அரசியலைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம்.
இந்தி மொழியைத் தூக்கிப் பிடிப்பவர்கள்தான், ஆங்கில மொழியை `அந்நிய மொழி' என்கிறார்கள். அது அந்நிய மொழி அல்ல... பொதுமொழி! ஆனால், இந்தியை நீங்கள் திணிக்க முற்படுவதே, `இந்தி பேசுவோர் - இந்தி பேசாதோர்' என்ற இரு பிரிவுகளை உருவாக்குவதற்கான அடிப்படைதானே..! ஏற்கெனவே, இங்கேயேகூட `சி.பி.எஸ்.இ பாடத் திட்டங்களில் இந்தி மொழி இருக்கிறதுதானே...' என்று சிலர் கேட்கிறார்கள். அது தப்புதான். அந்தத் தவற்றைச் சரிசெய்வதற்கு சட்ட ரீதியாகப் போராட வேண்டும். மற்றபடி நம் மாநில அரசுப் பள்ளிகளில் கற்பிக்கப்படும் தாய்மொழிக் கல்விதான் சரி!
`இந்தி படித்தால், வேலைவாய்ப்பு அதிகரிக்கும். உயர்ந்த இடத்துக்குப் போக முடியும். அதனால் நாடு முழுக்க மும்மொழியை அமல்படுத்துகிறோம்' என்கிறார்கள் ஆட்சியாளர்கள். `தமிழ், ஆங்கிலம், இந்தி' என்பது எங்களுக்கு மும்மொழி என்றால், இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களுக்கு..? அவர்கள் தங்கள் தாய்மொழியில் மட்டுமே படித்து முடித்து உயர்ந்த இடத்துக்கு வந்துவிட முடியும். ஆனால், இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டிராத நாட்டின் பெரும்பான்மையான மக்கள் மட்டும், 3 மொழிகளையும் படித்தால்தான் முன்னேற முடியும் என்றால், இது எப்படி சமத்துவம் ஆகும்?
இப்போது நாம் இந்திக்கு இடம் கொடுத்தால், வரும் காலகட்டத்தில், `தமிழ் மொழி எதற்கு...' என்ற கேள்வியில் வந்து முடியும்... நம் தாய்மொழியான தமிழ் வெளியேற்றப்பட்டுவிடும். இந்த உண்மையை கர்நாடகா, ஒடிசா, பஞ்சாப், மேற்கு வங்காளம் போன்ற பிற மாநிலங்கள் இப்போதுதான் உணர்ந்துகொண்டு, தங்கள் தாய்மொழியைக் காக்கப் போராடி வருகின்றன. ஆனால், நம் தமிழ்நாட்டில்தான் இந்த உண்மையை 1938-லேயே உணர்ந்துகொண்டு, விழிப்போடு போராடி விரட்டியடித்தோம்.
சுருக்கமாகச் சொன்னால், மும்மொழிக் கொள்கை என்ற இந்த விஷயத்தை, பேப்பரை மட்டுமே வைத்துப் பார்க்க முடியாது... கடந்தகால வரலாற்றை வைத்துத்தான் பார்க்க வேண்டும்!'' என்கிறார் தீர்க்கமாக.
ஆழி செந்தில்நாதன் முன்வைக்கக்கூடிய சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் விளக்கம் கேட்டு பா.ஜ.க மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகரிடம் பேசியபோது,
``மும்மொழிக்கு எதிராக வைக்கப்படுகிற எதிர் வாதங்கள் அனைத்துமே கற்காலத்துக் குற்றச்சாட்டுகள்! இன்றைய தலைமுறையினர் இவர்களது குற்றச்சாட்டுகளை எல்லாம் காதிலேயே வாங்கிக்கொள்ள மாட்டார்கள்; தூக்கி விசியெறிந்துவிடுவார்கள். காரணம்... தமிழ்நாட்டில், தமிழ் மொழியின் நிலைமை என்ன? அரசு பள்ளிக்கூடங்களைத் தவிர மற்றைய பள்ளிக்கூடங்களில், தமிழின் நிலை என்னவாக இருக்கிறது? தமிழ்நாட்டிலேயே தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் - தெரியாதவர்கள் என இரு தரப்புக்கிடையிலான வித்தியாசம் எவ்வளவு உயர்ந்திருக்கிறது?
இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடை தேடினாலே இங்கு ஆண்டுகொண்டிருந்த திராவிடக் கட்சிகள், தமிழ் மொழியின் மீது பாசம் காட்டுவது உதட்டளவில்தானே தவிர... உள்ளத்தளவில் அல்ல என்பது புரிந்துவிடும். எனவேதான், தாங்கள் செய்த தவற்றையெல்லாம் மறைப்பதற்காக பழைய குற்றச்சாட்டான `இந்தி திணிப்பு' என்ற கோஷத்தை புதிய ஜிகினா போட்டு சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
இந்தி மொழியைக் கற்றிருந்தால் மட்டுமே தமிழ்நாட்டை விட்டு வெளியே செல்ல முடியும். இத்தனை ஆண்டுக்கால வரலாற்றில், தாய்மொழிக்கு இத்தனை முக்கியத்துவம் கொடுத்த ஒரே ஆட்சி மோடியின் ஆட்சிதான். `இந்தி மொழி இங்கே வரக்கூடாது' என்று நீங்கள் உண்மையிலேயே விருப்பப்பட்டால், இந்தியைக் கற்க முடியாத அளவுக்கு அல்லவா தமிழ்நாட்டின் நிலைமையை வைத்திருக்க வேண்டும். ஆனால், இங்கே தமிழாசிரியர்களே இல்லாத நிலைதானே இன்றைக்கும் நீடித்துவருகிறது. ஆக தமிழ்நாட்டிலும் தமிழை நீங்கள் வளர்க்கவில்லை; வெளி மாநிலங்களில் தமிழைக் கொண்டுபோய் சேர்ப்பதற்கான வழிகளையும் செய்யவில்லை. ஆனால், `இந்தியைத் திணிக்கிறார்கள்' என்று மட்டும் பிரசாரம் செய்கிறீர்களே ஏன்?
இருமொழிக் கொள்கையின்படி, தமிழும் ஆங்கிலமும் மட்டும்தான் இங்கே கற்க முடியும் என்று சொல்லிக்கொள்கிற நீங்கள், மும்மொழிக் கொள்கையிலும் இந்தி வர முடியாதபடி வேறு ஒரு மொழிக்கு முன்னுரிமை கொடுத்துவிட வேண்டியதுதானே? அதற்கான தெம்பும், திராணியும், தைரியம், புத்திசாலித்தனம், அரசியல் சாணக்கியத்தனம் இருந்தால், இந்தி உள்ளே நுழைய முடியாதபடி செய்துதான் பாருங்களேன். அப்படி மற்றொரு மொழியை முன்னிலைப்படுத்துவதற்கு உங்களிடம் வக்கில்லை, வகையில்லை, தெம்பில்லை, திராணியில்லை என்ற உண்மையை மறைப்பதற்காக இந்தி மீது பழியைப் போட்டு எல்லோரையும் ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.
மகாராஷ்டிரா, ஒடிசா மாநிலங்களிலெல்லாம் தாய்மொழியை மீட்டெடுக்க இன்றைக்குப் போராடிக்கொண்டிருக்கிறார்கள் என்று சொல்வதையெல்லாம் ஏற்றுக்கொள்ளவே முடியாது. ஒடிசா பின் தங்கிய மாநிலம், மகாராஷ்டிரா கணக்கே வேறு... அங்கு இந்தி, மராத்தி, ஆங்கிலம் என அனைத்தும் இருக்கிறது. அவர்களுடைய சூழ்நிலையே வேறு, கலாசாரம் வேறு. `தமிழ்நாட்டில் நாங்கள் தமிழை வளமாக வைத்திருக்கிறோம். ஆனால், அந்த வளத்தை அடித்து நொறுக்கும் முயற்சிதான் இது' என்று எதிர்வாதம் வைக்காமல், ஏன் மற்ற மாநிலங்களை உதாரணம் காட்டிக்கொண்டிருக்கிறீர்கள்? காரணம்... தமிழ்நாட்டிலேயே தமிழை நீங்கள் ஐ.சி.யூ-வில்தானே வைத்திருக்கிறீர்கள்!
3-வது மொழி விருப்ப மொழி என்று புதிய கல்விக்கொள்கை தெளிவாகச் சொல்லிவிட்டது. ஆக, இந்தியை யாரும் இங்கே திணிக்கவில்லை. `இந்தி மொழியைத் தேர்ந்தெடுத்தால், வேலைவாய்ப்பு கிடைக்கும்' என விரும்பி மக்களே அம்மொழியைத் தேர்ந்தெடுப்பதென்பது அவர்களது உரிமை! அதை நிறைவேற்ற வேண்டியது மாநில அரசின் கடமை! மாறாக, மக்களின் விருப்பத்தை ஒரு மாநில அரசே தடுப்பது குற்றம்!
`இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் எளிதாக உயர் இடத்துக்கு சென்றுவிட முடியுமே...' என்று அவர்கள் கேட்பதில் என்ன நியாயம் இருக்க முடியும்? `இந்திதான் நாடு முழுக்க பேசப்படும் மொழியாக இருக்கிறது' என்பது இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களுக்கு கூடுதல் பலம்தான்... அதை நாம் மறுக்கவில்லை. தற்செயலாக நடந்துவிட்ட இந்த மாற்றத்தை நாம் எப்படி கேள்வி கேட்க முடியும்?
ஓர் உதாரணத்துக்கு கேட்கிறேன்... இந்தியைத் தாய்மொழியாகக் கொண்ட ஒருவர் தமிழ்நாட்டுக்குள் வந்தால், தமிழைக் கற்றுத்தானே ஆக வேண்டும். அதைவிடுத்து, `நான் இங்கே போட்டி போட வேண்டும் என்றால், ஏற்கெனவே தமிழ் மொழியைத் தெரிந்தவர்களுக்குத்தான் இங்கே அனுகூலமாக இருக்கிறது...' என்று அவர் சொல்வாரேயானால், அது எப்படி நியாயமாகும்? இந்தியாவில் பெரும்பான்மையான மக்கள் இந்தியைத் தவிர மற்ற மொழிகளில்தான் பேசிவருகிறார்கள் என்றெல்லாம் புள்ளிவிவரங்கள் சொல்வது... அரசியல்!'' என்கிறார் அவர் தரப்பாக.
source https://www.vikatan.com/government-and-politics/education/controversy-over-central-govts-3-language-policy-under-nep-2020
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக