Ad

ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2020

சாத்தான்குளம்: `இருவரது காயங்கள் படபடக்க வைத்தது!’- 40வது நினைவுநாளில் கலங்கிய வியாபாரிகள்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் போலீஸாரின் தாக்குதலால் தந்தை, மகன் சிறையில் உயிரிழந்த சம்பவம் தேசிய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தாமாகவே முன்வந்து இவ்வழக்கை விசாரணைக்காக எடுத்தது. நீதிமன்றத்தின் அனுமதியுடன் இவ்வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றியது தமிழக அரசு. சி.பி.ஐ,, விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் வரை சி.பி.சி.ஐ.டி விசாரணையை துவக்கியது.

மெழுகுவர்த்தி அஞ்சலி

சி.பி.சி.ஐ.டி ஐ.ஜி., சங்கர் தலைமையிலான போலீஸார் விசாரணையைத் துவக்கினர். ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை உள்ளிட்ட 10 போலீஸார் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து சி.பி.ஐ ஏ.டி.எஸ்.பி விஜய்குமார் சுக்லா தலைமையிலான அதிகாரிகள் குழு விசாரணையை நடத்தி வருகிறது.

இந்த சூழலில் அதிகாரிகள், போலீஸார் சிலருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் விசாரணையில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், குழுவிலுள்ள பிற அதிகாரிகள் விசாரணையை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரின் 40வது நினைவுதினம் கடைபிடிக்கப்பட்டது. சாத்தான்குளம் பஜாரில் உள்ள ஜெயராஜின் செல்போன் கடையின் முன்பு, இருவரின் உருவப்படம் வைக்கப்பட்டு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.

அஞ்சலி

இந்நிகழ்வில் ஜெயராஜின் குடும்பத்தினர், வியாபாரிகள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இருவரின் உருவப்படத்திற்கு மலர் தூவி, கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி இரண்டு நிமிட மவுன அஞ்சலி செலுத்தினர்.

Also Read: சாத்தான்குளம்: கொரோனா தொற்றால் முடங்கிய விசாரணை! - குழப்பத்தில் சி.பி.ஐ

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய வியாபாரிகள், ``போலீஸாரின் கொடூரத் தாக்குதலினால் தந்தை, மகன் அடுத்தடுத்து உயிரிழந்தனர். சமூக ஊடகங்களில் பென்னிக்ஸின் உடலின் பகுதியில் உள்ள காயங்களை நீதிபதி பாரதிதாசன் ஆய்வு செய்வது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது. அதில், ஜெயராஜின் உடலிலுள்ள காயங்களைப் பார்த்தபோது, மனது படபடக்கிறது. இச்சம்பவத்திற்குப் பிறகு அதே சர்ச்சைக்குரிய போலீஸாரால் தாக்குதலுக்கு உள்ளானவர்களும் புகார் அளித்து வருகிறார்கள். இப்படிக் கொடூரமாகத் தாக்கிய போலீஸார் அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மெழுகுவர்த்தி அஞ்சலி

சி.பி.சி.ஐ.டி போலீஸார் இவ்வழக்கை விசாரிக்கத் துவங்கிய இரண்டு நாள்களிலேயே 5 போலீஸார் கைது செய்யபட்டவுடன் எங்களுக்கு நம்பிக்கை வந்தது. தற்போது, சி.பி.ஐ அதிகாரிகளின் விசாரணையும் வேகம் எடுத்துள்ளது. இதனால், கைது செய்யப்பட்ட போலீஸாருக்கு தண்டனை கிடைக்கும் எனவும், உயிரிழந்த இருவரின் குடும்பத்திற்கு நீதி கிடைக்கும் என்பதையும் நாங்கள் நம்புகிறோம். இதுபோன்று இனியொரு சம்பவம் நிகழக்கூடாது” என்றனர்.



source https://www.vikatan.com/news/crime/sathakulam-police-brutality-traders-hopes-two-will-get-justice

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக