Ad

திங்கள், 3 ஆகஸ்ட், 2020

சென்னை: காவலரின் கழுத்தை அறுத்த மஞ்சா நூல்; பெண் காவலர் காயம்! இன்ஸ்பெக்டர் இடமாற்றம்

மாஞ்சா நூல் மூலம் காற்றாடிகளை பறக்க விட சென்னையில் தடை உள்ளது. ஆனாலும், தடையை மீறி பலர் மாஞ்சா நூல் மூலம் காற்றாடிகளை பறக்க விடுகின்றனர். தற்போது ஊரடங்கு என்பதால் வீட்டுக்குள் முடங்கியுள்ள சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை மாஞ்சா நூலைக் கொண்டு காற்றாடிகளை பறக்க விட்டுவருகின்றனர். அதை சென்னை போலீஸார் கண்டுக்கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. மாஞ்சா நூலால் மரணங்கள் நிகழந்தபிறகும் சட்டவிரோதமாக விற்பனை சென்னையில் பல இடங்களில் நடந்துவருகிறது. சமீபத்தில் சென்னை ஆவடி காவல் நிலையத்தில் சிக்கிய இளைஞர் ஒருவர், ஊரடங்கால் வேலையை இழந்ததால் ராஜஸ்தானிலிருந்து ஆன்லைன் மூலம் காற்றாடிகளை வாங்கி விற்றுவந்தார். அவரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

காற்றாடிகள்

சென்னை புறநகர் பகுதிகளில் மாஞ்சா நூலைப் பயன்படுத்தி காற்றாடிகளை பறக்க விடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இந்தச் சூழலில் சென்னை பாடி மேம்பாலத்தில் பைக்கில் சென்ற கணவன், மனைவி மாஞ்சா நூல் அறுத்து விபத்தில் சிக்கினர். அவர்கள் இருவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். மருத்துவமனையிலிருந்து வில்லிவாக்கம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக மாஞ்சா நூல் மூலம் காற்றாடிகளை பறக்க விட்டது, தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தினர். இந்தச் சூழலில் வில்லிவாக்கம் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் ரஜீஸ்பாபு இடமாற்றம் செய்து கூடுதல் கமிஷனர் அருண் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``சென்னை வேப்பேரி காவல் நிலையத்தில் போக்குவரத்து பிரிவில் காவலராக பணியாற்றுபவர் ஜெயகுமார் (42), இவருடைய மனைவி மகேஷ்வரி (38). இவர் சென்னை மத்திய குற்றப்பிரிவில் காவலராகப் பணிபுரிந்து வருகிறார். இவர்களின் வீடு கீழ்ப்பாக்கம் காவலர் குடியிருப்பில் உள்ளது. இவர்கள் இருவரும் நேற்று இரவு 10 மணி அளவில் சென்னை கொரட்டூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு பைக்கில் சென்றனர். பின்னர், இருவரும் பைக்கில் வீடு திரும்பினர். அப்போது பாடி மேம்பாலத்தின் மீது பைக்கில் வரும் போது மாஞ்சா நூல் காவலர் ஜெயகுமார் கழுத்தில் சிக்கியது.

மாஞ்சா நூல்

அதனால் ஜெயகுமார், கழுத்தைப்பிடித்த நிலைதடுமாறி கீழே விழுந்தார். அதனால், மகேஷ்வரியும் சாலையில் விழுந்தார். அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அப்போதுதான் ஜெயகுமாரின் கழுத்தில் மாஞ்சா நூல் அறுத்திருப்பதை மகேஷ்வரி பார்த்து அதிர்ச்சியடைந்தார், பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியோடு ஜெயகுமாரை மீட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது இருவரும் நலமாக உள்ளனர்.

சென்னை வில்லிவாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மாஞ்சா நூலைப் பயன்படுத்தி காற்றாடிகள் பறக்க விடுவதாகப் புகார்கள் வந்தும் இன்ஸ்பெக்டர் ரஜீஸ்பாபு நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்துதான் இன்ஸ்பெக்டர் காவல் கட்டுபாட்டு அறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவத்துக்குப்பிறகு வில்லிவாக்கம் பகுதியில் மாஞ்சா நூல் விற்பனை, காற்றாடிகளை போலீஸார் கண்காணித்துவருகின்றனர்" என்றனர்.

வில்லிவாக்கம் இன்ஸ்பெக்டர் ரஜீஸ்பாபு

Also Read: `நான்தான் கொரோனா..!'- வில்லிவாக்கம் இன்ஸ்பெக்டரின் `திகில்' விழிப்புணர்வு

கொரோனா தொற்று பரவல் தொடக்க காலக்கட்டத்தில் வில்லிவாக்கம் இன்ஸ்பெக்டர் ரஜீஸ்பாபு, கொரோனா வடிவிலான ஹெல்மெட்டை அணிந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அவரின் இந்த வித்தியாசமான விழிப்புணர்வுக்கு இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது, மாஞ்சா நூல் சர்ச்சையில் சிக்கி, அவர் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார். சென்னையில் மாஞ்சா நூலைப் பயன்படுத்தி காற்றாடிகளை பறக்க விடும் சம்பவங்கள் ஊரடங்கில் அதிகரித்துள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் மீதும் மாஞ்சா நூலை விற்பவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.



source https://www.vikatan.com/news/crime/chennai-police-couple-injured-in-manja-thread-villivakkam-inspector-transferred

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக