Ad

திங்கள், 3 ஆகஸ்ட், 2020

கரூர்: `25 வருடக் கோரிக்கை; பத்தே நிமிடத்தில் சாதித்த இளைஞர்கள்!' - மகிழ்ச்சியில் மக்கள்

25 வருடங்களாக நிறைவேற்றப்படாத குளித்தலையில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் கோரிக்கையை, போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் வைத்து, பேருந்து நிலையம் அமைக்கும் திட்டத்தை உடனடியாக தொடங்க அமைச்சரிடம் இருந்து பத்தே நிமிடத்தில் உத்தரவாதத்தைப் பெற்ற இளைஞர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

தற்போதைய பேருந்து நிலையம்

கரூர் மாவட்டத்தில் இருக்கிறது குளித்தலை நகராட்சி. திருச்சி டு கரூர் சாலையில் அமைந்திருக்கும் நகராட்சி என்பதால், முக்கியமான போக்குவரத்து மார்க்கமாக கருதப்படுகிறது. ஆனால், குளித்தலையில் இயங்கி வரும் பேருந்துநிலையம், நான்கு பேருந்துகள்கூட நிற்கமுடியாத அளவுக்குதான் உள்ளது.

Also Read: கரூர்: `117 வருட கட்டடத்தை இடிச்சுட்டாங்க!' - கமிஷனுக்காக செய்தாரா நகராட்சி கமிஷனர்?

அதுவும், அருகில் உள்ள பேராளம்மன் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் வாடகைக்கு இயங்கிவருகிறது. இந்த குறுகிய பேருந்து நிலையத்தால், மக்கள்படும் அல்லல் அதிகம். இதனால், `எங்கள் நகராட்சியில் புதிய பேருந்து நிலையம் அமைங்க' என்று குளித்தலை நகராட்சியில் வசிக்கும் மக்கள், கடந்த 25 வருடங்களாக கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

அமைச்சரை சந்தித்த இளைஞர்கள்

அதன்விளைவாக, கடந்த 1996- ம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சியில், குளித்தலை சுங்ககேட் பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார். ஆனால், அதன்பிறகு தி.மு.க ஆட்சி வர, அந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இந்த நிலையில், கரூரில் நடத்தப்பட்ட எம்.ஜி.ஆர் நூற்றாண்டுவிழா மேடையில் வைத்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, `விரைவில் குளித்தலையில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும்' என்று அறிவிப்பை வெளியிட்டார்.

Also Read: கரூர்: `ரூ. 1 கோடி கையாடல்; 6 பேர் தற்காலிக பணியிடை நீக்கம்!’ - குளித்தலை நகராட்சி அதிர்ச்சி

ஆனால், அதற்கான எந்த பூர்வாங்க வேலைகளையும் தொடங்மாமல், அமைதி காத்தார்கள். இந்த நிலையில், குளித்தலையில் இளைஞர்கள் இணைந்து செயல்படும், குளித்தலைப் பகுதி மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள், தொடர் கோரிக்கை, போராட்டங்கள் நடத்தி வந்தார்கள். அதன்விளைவாக, குளித்தலை பைபாஸ் அருகில் உள்ள கடம்பர் கோயிலுக்குச் சொந்தமான 4.7 ஏக்கர் நிலத்தில், புதிய பேருந்து நிலையம் அமைக்க முடிவானது. அறநிலையத்துறையிடம் இருந்து அதற்காக நிலம் கையப்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், சில அமைப்புகள், `அந்த இடத்தில் பேருந்து நிலையம் அமைக்கக் கூடாது.

அமைச்சரை சந்தித்த இளைஞர்கள்

அதனால், கோயிலின் புனிதம் கெடும்' என்று கூறி, எதிர்ப்பு தெரிவித்தன. இதனால், மறுபடியும் பேருந்துநிலையம் அமைக்கும் திட்ட வேலைகள் சுணக்கமாகின. இந்த நிலையில்தான், குளித்தலை இளைஞர்கள், பேருந்து நிலையம் அமையவிடாமல் தடுக்கும் அமைப்புகளுக்கு எதிராக, காட்டமாக போஸ்டர் அடித்து ஒட்டினார்கள். அதோடு, போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரைச் சந்தித்துப் பேசி, `பேருந்து நிலையம் விரைவில் அமைக்கப்படும்' என்ற உத்தரவாதத்தை அமைச்சரிடம் இருந்து பெற்றிருக்கிறார்கள்.

இதுகுறித்து, குளித்தலையைச் சேர்ந்த இளைஞரான சுந்தரிடம் பேசினோம்.

``குளித்தலை நகராட்சி மக்களின் 25 வருட கோரிக்கை இது. சின்னப்பசங்களை எல்லாம் விட்டு, `எங்கள் காலத்திலாவது பேருந்து நிலையம் அமைங்க'னு கோரிக்கை கடிதம் கொடுக்க வைத்தோம். ஒன்றும் நடக்கலை. 'கலைஞரோட முதல் தொகுதி. நீங்களாவது கனிவு காட்டுங்க'னு தி.மு.க ஆட்சியில் கோரிக்கை வைத்தோம். அவங்களும் செய்யலை. இந்தநிலையில்தான், நாங்க தொடர் போராட்டம் நடத்தினோம். போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், குளித்தலையில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதில் ஆர்வம் காட்டினார்.

சுந்தர்

ஆனால், சில அமைப்புகள், கடம்பர்கோயில் இடத்தில் பேருந்து நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தாங்க. இப்போது குளித்தலையில் இயங்கிவரும் பேருந்து நிலையயம், ஒண்ணேமுக்கால் ஏக்கர் பரப்பளவில்தான் உள்ளது. புதிதாக பேருந்து நிலையம் அமைக்க, குறைந்தது மூன்று ஏக்கர் நிலம் வேண்டுமாம். குளித்தலை நகரில் அவ்வளவு இடம் இல்லை. அதனால்தான், பைபாஸ் பகுதில் அமைக்க முயற்சிக்கிறார்கள்.

Also Read: `எல்லோரும் டூ-வீலருக்கு மாறிட்டாங்க; எங்களுக்குதான் நஷ்டம்!' - தனியார் பேருந்து உரிமையாளர்

ஆனால், அதை சிலர் தடுக்கப் பார்த்தார்கள். அதனால், அவர்களை எதிர்த்து போஸ்டர் ஒட்டினோம். கையோடு, போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அண்ணனை சந்தித்தோம். எங்கள் கோரிக்கைகளை கனிவோடு கேட்ட அவர், 'எந்த சக்திகள் தடுத்தாலும், குளித்தலையில் நீங்கள் சொல்லும் இடத்தில் புதிய பேருந்து நிலையம் அமைவது உறுதி. விரைவில் இடம் வாங்கும் நடைமுறைகள் முடிந்து, பேருந்து நிலையம் அமைக்கும் பணி தொடங்கப்படும். இளைஞர்கள் நீங்கள், நகர நன்மைக்காக இவ்வளவுதூரம் மெனக்கெடுவது, எனக்கு பெரும் மகிழ்வைத் தருது. இளைஞர்கள்னா, இப்படிதான் இருக்கணும்'னு சொல்லி, எங்களை திக்குமுக்காட வைத்துவிட்டார்.

இளைஞர்கள் ஒட்டிய போஸ்டர்

அதோடு, எம்.ஆர்.வி டிரஸ்ட் மூலம் கரூரில் மரக்கன்றுகள் நடுவதுபோல், குளித்தலைப் பகுதியிலும் மரக்கன்றுகள் நட்டு, குளித்தலையை பசுமையாக்க முயர்சிப்பதாகவும் உத்தரவாதம் கொடுத்திருக்கிறார். குளித்தலைப் பகுதி மக்களின் 25 வருட கோரிக்கையை அமைச்சர் 10 நிமிடத்தில் தீர்த்துவைத்தது, எங்களுக்கு பெரிய உற்சாகத்தைக் கொடுத்திருக்கு" என்றார் மகிழ்ச்சியாக!



source https://www.vikatan.com/news/tamilnadu/kulithalai-youth-meet-minister-mr-vijayabaskar-over-new-bus-stand

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக