Ad

வெள்ளி, 14 ஆகஸ்ட், 2020

பெரம்பலூர்: `ஆற்றில் சிக்கிய இளைஞர்களை மீட்ட பெண்கள்!' - கல்பனா சாவ்லா விருது பெற்ற வீரமங்கைகள்

நீரில் மூழ்கி உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த இளைஞர்களை தங்களது உயிரைக்கூட பொருள்படுத்தாமல் காப்பாற்றிய வீர மங்கைகளுக்கு 'கல்பனா சாவ்லா' விருது வழங்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் கையால் இன்று விருதுகளைப் பெற்றிருக்கிறார்கள் இந்த வீர மங்கைகள்.

உயிரிழந்த இளைஞர்கள்

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகாவில் உள்ள கொட்டரை மருதையாற்றில் சிறுவாச்சூர் கிராமத்தைச் சேர்ந்த ரவி, ரஞ்சித், கார்த்திக், பவித்ரன் ஆகிய இளைஞர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். இதில், இரு இளைஞர்கள் விளையாட்டாக ஆற்றுப் பள்ளத்தில் இறங்கிக் குளித்துக்கொண்டிருந்த நிலையில், ஆழம் அதிகமான பகுதியில் சிக்கிக்கொண்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர். அதனைக் கண்ட நண்பர்களில் இருவர் அவர்களைக் காப்பாற்ற ஆற்றில் குதித்துள்ளனர்.

அவர்களும் அதே பள்ளத்தில் சிக்கிக்கொண்டு போராடினர். அப்போது, அங்கு துணி துவைத்துக்கொண்டிருந்த, ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்த முத்தம்மாள், செந்தமிழ்ச்செல்வி, ஆனந்தவல்லி ஆகிய மூன்று பெண்களும் இளைஞர்களின் நிலையைக் கண்டிருக்கிறார்கள்.

உயிருக்கு போராடிய இளைஞர்களை மீட்ட பெண்கள்

உடனடியாகச் செயல்பட்ட அவர்கள், ஆற்றில் இறங்கி தாங்கள் உடுத்தியிருந்த புடவையை அவர்களது உயிரைக் காப்பாற்றத் தூக்கி வீசி ஒருவரையொருவர் பிடித்துக்கொண்டு அந்த இளைஞர்களைக் காப்பாற்றப் போராடினர். அங்கு நடந்த வாழ்வா, சாவா போராட்டத்தின் இறுதியில் இரண்டு இளைஞர்களை உயிருடன் மீட்டனர். சிறுவாச்சூர் கிராமத்தைச் சேர்ந்த பயிற்சி மருத்துவர் ரஞ்சித், பவித்ரன் ஆகிய இளைஞர்கள் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர். தங்களது உயிரைக்கூட பொருள்படுத்தாமல் இளைஞர்களை காப்பாற்றிய மூன்று பெண்களின் வீர தீரச்செயலை ஆட்சியர் மற்றும் எஸ்.பி பாராட்டினர்.

உயிரிழ்ந்த மாணவன்

இந்நிலையில், சென்னையில் நடைபெறும் சுதந்திர தினவிழாவில் வீர செயல்புரிந்த செந்தமிழ்ச் செல்வி, முத்தம்மாள், ஆனந்தவல்லி ஆகியோருக்கு கல்பனா சாவ்லா விருது வழங்க மாவட்ட ஆட்சியரால் பரிந்துரைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கல்பனா சாவ்லா விருது பெறவுள்ள செந்தமிழ்ச் செல்வி, முத்தம்மாள், ஆனந்தவல்லி ஆகியோர் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் சாந்தா நேரில் வரவழைத்து அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்தி அனுப்பினார். இன்று இப்பெண்கள் கல்பனா சாவ்லா விருது பெற்றிருக்கிறார்கள். வாழ்த்துகள்!



source https://www.vikatan.com/news/tamilnadu/kalpana-chawla-award-for-perambalur-womens

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக