Ad

வெள்ளி, 14 ஆகஸ்ட், 2020

கடலூர்: `மளிகை குடோனில் குட்கா மூட்டைகள்!’ - ஸ்கெட்ச் போட்டு வளைத்த காவல்துறை

தமிழகத்தில் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய விதிகளின் கீழ் 2013-ம் ஆண்டு குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களுக்கு தடை விதித்து சட்டப்பேரவையில் அறிவித்தார் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா. அதன்பிறகு ஒவ்வொரு ஆண்டும் அந்தத் தடை உத்தரவை நீட்டித்து வருகிறது தமிழக அரசு. ஆனாலும், தமிழகம் முழுவதும் குட்காக்கள் பதுக்கி வைத்திருக்கும் கும்பல், அதனை அதிக விலைக்கு விற்பனை செய்துவருகின்றன.

எடை போடப்படும் குட்காபெட்டிகள், மூட்டைகள்

குறிப்பாக, கொரோனா ஊரடங்கின்போது மதுக்கடைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டபோது, இளைஞர்களைக் குறிவைத்து இயங்கியது குட்கா கும்பல். கடலூர், கே.என்.பேட்டை திருப்பதி நகரில் ஒரு வீட்டில் பெட்டி பெட்டியாக குட்கா உள்ளிட்ட புகையிலை பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது.

அதனடிப்படையில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ம.ஸ்ரீஅபிநவ் அவர்களின் வலியுறுத்தலின் அடிப்படையில், துணை கண்காணிப்பாளர் க.சாந்தி தலைமையிலான காவல்துறையினர், குறிப்பிட்ட அந்த வீட்டை ஆய்வு செய்தனர். வீட்டின் கதவுகள் பூட்டப்பட்டிருந்ததால் அதை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றபோது, அங்கு பெட்டிகளிலும், சாக்கு மூட்டைகளிலும் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள் குவிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

குட்கா பெட்டிகள் வைக்கப்பட்டிருந்த குடோன்

அதையடுத்து அங்கு நேரில் விரைந்து ஆய்வு மேற்கொண்டார் காவல் கண்காணிப்பாளர் ம.ஸ்ரீஅபிநவ். அங்கிருந்த 7 வகையான புகையிலைப் பொருள்களை கையகப்படுத்திய காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டார். 8 டன் எடையுள்ள அந்தப் புகையிலைப் பொருள்கள் ரூ.1.25 கோடி மதிப்புடையவை என்று கணக்கிட்டிருக்கிறது உணவு பாதுகாப்புத்துறை.

கடந்த சில நாள்களுக்கு முன்பு இதே பகுதியில்தான் சுமார் 30 கிலோ கஞ்சா பிடிக்கப்பட்டது. கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ்விடம் பேசினோம். “தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களை விற்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. குற்றவாளிகளைப் பிடிப்பதற்கான பணிகளைத் தீவிரப்படுத்தியிருக்கிறோம். விரைவில் கைது செய்வோம்” என்றார்.

அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் புகையிலைப் பொருள்கள்

இதுகுறித்து நம்மிடம் பேசிய கடலூர் மாவட்ட துணை கண்காணிப்பாளர் சாந்தி, “குட்கா விற்பனை நடைபெறக் கூடாது என்று நாங்கள் மிகவும் கவனமாக இருக்கிறோம். திருப்பாதிரிபுலியூரில் இருக்கும் ’மகாலட்சுமி மளிகை ஸ்டோர்’ கடையில் குட்கா விற்பனை செய்யப்படுவதாக வரும் தகவலின் அடிப்படையில் நானே பலமுறை அங்கு ஆய்வு செய்திருக்கிறேன். ஆனால், அப்போது எதுவும் குட்கா கிடைக்கவில்லை. காவல்துறையைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்களிடமும் நான் குட்கா தொடர்பான தகவல்களை தெரிவிக்கும்படி கூறியிருந்தேன்.

அப்படித்தான் கே.என்.பேட்டையில் இருக்கும் ஒருவீட்டில் பெட்டிகள், மூட்டைகள் இறக்கி வைக்கப்பட்டிருப்பதாக எனக்கு தகவல் வந்தது. உடனே அந்த வீட்டின் அருகே சென்றபோது குட்கா மற்றும் புகையிலைப் பொருள்களின் வாசனை வந்தது. பூட்டப்பட்டிருந்த வீட்டை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றுதான் அவற்றை கைப்பற்றினோம்.

கடலூர் காவல் துணை கண்காணிப்பாளர் சாந்தி

அந்த வீட்டை வாடகைக்கு எடுத்திருப்பவர் மளிகைக்கடை வைத்திருப்பதால், அனைவரும் அந்த வீட்டை மளிகைக்கடையின் குடோன் என்றே நினைத்திருக்கிறார்கள். உணவு பாதுகாப்புத்துறையினர் குட்கா பாக்கெட்டுகளில் குறிப்பிடப்பட்டிருக்கும் விலையின் அடிப்படையில்தான் மதிப்பை கணக்கிட்டிருக்கிறார்கள்.

ஆனால், கள்ளச்சந்தையில் அவை அதிக விலையில்தான் விற்கப்படுகின்றன. அந்த கணக்கின்படி பார்த்தால் அதன் மதிப்பு இன்னும் அதிகமாக இருக்கும். தலைமறைவாக இருக்கும் குற்றவாளியைத் தேடிக் கொண்டிருக்கிறோம்” என்றார்.

Also Read: `2 டன், 200 பெட்டிகள்; பிஸ்கட் குடோனில் குட்கா பதுக்கல்!’ - வேலூரில் சிக்கிய அ.தி.மு.க பிரமுகர்

காவல்துறையின் முதல்கட்ட விசாரணையில், திருப்பாதிரிபுலியூரில் மளிகைக்கடை நடத்தி வரும் பண்ருட்டி கணிசப்பாக்கத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரின் மகன் பாரதிதான் இந்த வீட்டை வாடகைக்கு எடுத்திருப்பது தெரிய வந்திருக்கிறது. தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ததாக இவர் மீது ஏற்கெனவே 3 வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில், தற்போது தலைமறைவாகியிருக்கிறார்.



source https://www.vikatan.com/news/crime/in-cuddalore-district-police-cordoned-off-125-crores-worth-of-banned-gutka-were-stored-in-a-house

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக