Ad

புதன், 19 ஆகஸ்ட், 2020

திருவாரூர்: கோயில் கல்வெட்டிலும், மக்கள் மனதிலும்.. கமலா ஹாரிஸ்! - துளசேந்திரபுரம் விசிட்

’மலையிலிருந்துதான் நதி உற்பத்தியாகிறது. ஆனால் நதியிடம் அது எதையும் எதிர்பார்ப்பதில்லை. நதியின் அழகையும் நீண்டதூர வெற்றிப் பயணத்தையும் பார்த்து மலை பூரித்துப்போகிறது” - ரவிந்திரநாத் தாகூரின் வரிகளை அப்படியே பிரதிபலிக்கிறது, பைங்காநாடு துளசேந்திரபுரம். தன் மண்ணில் வாழ்ந்த தலைமுறையினரின் தொடர்ச்சி ஒன்று, உலகின் கவனம் ஈர்க்கிறது என்ற பெருமித பிரவாகத்தில் திளைத்துக் கொண்டிருக்கிறது இக்கிராமம். அமெரிக்காவின் துணை அதிபர் வேட்பாளராக போட்டியிடும் அளவுக்கு உயர்ந்திக்கிறாரே தங்கள் ஊரில் வாழ்ந்த கோபாலனின் பேத்தி என வியப்பிலும் மகிழ்ச்சியிலும் திளைக்கிறார்கள் இம்மக்கள்.

கோயில் கலெட்டு- நன்கிடையாளர்கள் பட்டியலில் கமலா ஹாரிஸ்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியிலிருந்து சுமார் பத்து கிலோமீட்டர் பயணம்... ஊரின் எல்லையில் நம்மை உற்சாகமாக வரவேற்கின்றன, பைங்காநாடு துளசேந்திரபுரத்தின் பெயர்ப்பலகையும், அமெரிக்க துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸின் வாழ்த்து பேனரும்... தங்களது ஊரை பூர்வீகமாக கொண்ட பெண்மணி, அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார் என்றால் இங்குள்ள மக்களின் உணர்வுகள் என்னவாக இருக்கும் ?

``ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்துல இருந்து நிறைய அரசியல் தலைவர்கள், திரைப்படக்கலைஞர்கள் உருவாகி, இந்தியா அளவுல கோலோச்சியிருக்காங்க. அதுக்கே நாங்க பெருமைப்பட்டுக்குவோம். அதுவும் இப்ப எங்க ஊரை பூர்வீகமாக கொண்ட ஒருவர், உலகமே திரும்பி பார்க்ககூடிய ஒரு முக்கிய பதவிக்கு போட்டியிடக்கூடிய அளவுக்கு வளர்ந்திருக்காங்கனு நினைக்குறப்ப, எங்களோட சந்தோஷத்துக்கு அளவே இல்லை.” நெகிழ்ச்சி நிறைந்த வார்த்தைகளை உதிர்க்கும் இம்மக்கள், கமலா ஹாரிஸ் வெற்றிப் பெற கோயில்களில் சிறப்பு பிரார்த்தனைகள் செய்து வருகிறார்கள்.

கமலா ஹாரிஸ் குலத்தெய்வ கோயில்

வயல்வெளி, கடைத்தெரு என ஆங்காங்கே ஊர்மக்கள் வைத்துள்ள வாழ்த்து பேனர்களில் புன்னகைக்கிறார் கமலா ஹாரிஸ். இதுவரை கமலா ஹாரிஸை இவர்கள் நேரில் பார்த்ததில்லை. கண்ணுக்குப் புலப்படாத ஊர் பந்தம், பல ஆயிரம் கிலோமீட்டர் கடல் கடந்து, கண்டம் விட்டு கண்டம், இம்மக்களையும் அந்த பெண்மணியை நேசத்தோடு இணைக்கிறது. அமெரிக்க அதிபர் மற்றும் துணை அதிபருக்கான தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. ஜனநாயக கட்சியின் சார்பில் துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹ.ரிஸ் போட்டியிடுகிறார்.

இவரது தாய்வழி தாத்தா கோபாலன், இக்கிராமத்தைச் சேர்ந்தவர் என்ற தகவல் வெளியானதில் இருந்தே இப்பகுதி மக்கள் மிகுந்த பெருமித உணர்விலும் நெகிழ்ச்சியிலும் ஆழ்ந்துள்ளார்கள். 90 ஆண்டுகளுக்கு முன்பு இங்குள்ள அக்ரஹார தெருவில் வாழ்ந்திருக்கிறது, கோபாலனின் குடும்பம். ஆங்கிலேயே ஆட்சியில் சிவில் சர்வீஸ் அதிகாரியாக பணியாற்றிய கோபாலன் சென்னைக்கு குடிபெயர்ந்திருக்கிறார். இவரது மூத்த மகள் சியாமளா, மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்றிருக்கிறார். ஜமைக்கா நாட்டைச் சேர்ந்த டொனால்டு ஜெ ஹாரிஸை திருமணம் செய்திருக்கிறார். இவர்களது மகள்தான் கமலா ஹாரிஸ். அரசியல், பொருளாதாரம், சட்டம் என பலதுறைகளில் பட்டம் பெற்ற கமலா ஹாரிஸ், கலிபோர்னியா தலைமை வழக்கறிஞர், செனட் உறுப்பினர் என படிபடியாக உயர்ந்து, தற்போது அமெரிக்க துணை அதிபர் வேட்பாளராக உச்சத்தை தொட்டுள்ளார்.

கம்லா ஹாரிஸின் தாத்தா வாழ்ந்த வீடு இங்குதான் இருந்தது .

’’ரொம்ப சந்தோஷமா இருக்கு. ஏகப்பட்ட விசாரிப்புகள். அமெரிக்க துணை அதிபர் தேர்தல்ல நிக்கிற கமலா ஹாரிஸ் ஊங்க ஊராமேனு நிறைய பேர் கேட்டுக்கிட்டே இருக்காங்க. எங்க ஊர் மக்கள் எல்லாருக்குமே இது பெருமையா இருக்கு. பைங்காநாடு துளசேந்திரபுரம்ங்கற எங்களோட ஊர் பேரு, உலகம் முழுக்க பிரபலமாயிடுச்சி.’’ பெருமிதத்தில் நெகிழ்ந்துப் போகிறார் இவ்வூர்க்காரரான மலர்வேந்தன்.

இத்தனைக்கும், கமலா ஹாரிஸின் உறவினர்கள் கூட எவரும் இங்கு வசிக்கவில்லை. தாத்தா கோபாலன் வாழ்ந்த வீடு, பல பேர் கைமாறி காலிமனையாக கிடக்கிறது. ஆனாலும் கூட இவரது குடும்பத்தினருக்கும், இம்மண்ணுக்குமான உறவு தொடர்ந்து கொண்டேதான் இருந்திருக்கிறது. இங்குள்ள இவர்களது குலத் தெய்வ கோயிலான ஸ்ரீதர்மசாஸ்தா ஸ்ரீசேவகப்பெருமாள் கோயில் கல்வெட்டில் நன்கொடையாளர்கள் பட்டியலில் கமலா ஹாரிஸின் பெயரும் இடம்பெற்றுள்ளது.

2014-ம் ஆண்டு இக்கோயிலுக்கு 5 ஆயிரம் ரூபாய் நன்கொடை கொடுத்துள்ளார் கமலா ஹாரிஸ். ’’நாங்க யாருமே கமலா ஹாரிஸையோ, அவரோட குடும்பத்தினரையோ நேர்ல பார்த்ததில்லை. ஆனாலும் எங்களுக்கு ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வு. அமெரிக்க துணை அதிபர் தேர்தல்ல அவர் ஜெயிச்சிடணும்னு ஊர் மக்கள் எல்லாருமே கடவுளை வேண்டிக்கிட்டு கிடக்குறோம்” எதிர்பார்ப்பற்ற எதிர்பார்ப்புகள் பைங்காநாடு துளசேந்திரம் முழுவதும் வியாபித்திருக்கிறது.



source https://www.vikatan.com/news/tamilnadu/a-visit-to-the-place-in-thiruvarur-where-kamala-haris-grand-father-lived

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக