Ad

ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2020

"அஜித் சார் ரொம்பவே அப்செட்... அங்க ஷூட்டிங்கே நடத்தவேண்டாம்னு சொல்லிட்டார்!" - `அம்பானி' சங்கர்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பாடல்கள் மற்றும் காமெடி காட்சிகளின் மீது எப்போதுமே பெரிய ஈர்ப்பு இருக்கும். ஒரே காமெடி காட்சியை எத்தனை முறை டிவியில் ஒளிப்பரப்பினாலும், அதை விடாமல் பார்ப்பதற்கு பலர் இருக்கிறார்கள். அப்படி வடிவேலுவுடன் இணைந்து பல காமெடி காட்சிகளில் நடித்தவர், ‘அம்பானி’ சங்கர். அவரிடம் பேசினேன்.

நடிகராக வேண்டும் என்கிற ஆசை எப்போது வந்தது?

‘’நான் ஸ்கூல் படிக்கும் போதே நிறைய நாடகங்களில் நடிச்சிருக்கேன். அதுல நான் நடிச்சதுக்கு காரணம் எங்க ஸ்கூல் தமிழ் ஐயாதான். நான் ஆறாம் வகுப்பு படிக்கிறப்போ, என்னைப் பார்க்கிறவங்க ஒண்ணாவது, ரெண்டாவது படிக்கிற பையன்னு நினைப்பாங்க. அதுதான் எங்க தமிழ் ஐயாவுக்கு என்னை நாடகத்துல நடிக்க வைக்கணும்கிற எண்ணத்தை கொடுத்திருக்கு. என் வாய்ஸும் அப்போ வித்தியாசமான டோனில் இருந்ததுனால, அது எல்லாருக்கும் பிடிக்கும்னு நம்பி என்னை நாடகங்கள்ல நடிக்க வெச்சார். நான் ஸ்கூல் நாடகங்களில் நடிக்கிறதைப் பார்த்த என் அப்பாவுக்கு, என்னை சினிமாவில் நடிகனாக்கிப் பார்க்கணும்னு ஆசை வந்தது. நியூஸ் பேப்பர்ல சினிமாவில் நடிக்க நடிகர்கள் தேவைனு விளம்பரத்தைப் பார்த்துட்டு என்னை சென்னைக்கு அழைச்சிட்டு வந்தார். அப்படித்தான் பாக்யராஜ் சாரை சந்திச்சுப் பேசினேன். அவர் அப்போ படங்கள் எதுவும் பண்ணாதனால, அவரோட ’பாக்யா’ பத்திரிகையில் என்னை வேலைக்கு சேர்த்துக்கிட்டார். ’இங்கேயே வேலைப் பார்த்துக்கோ; தங்கிக்கோ. படங்களில் நடிக்க முயற்சி செய்; வாய்ப்பு வந்தால் நீ தாராளமா நடிக்கப்போ’னு சொன்னார். அப்படி பாக்யராஜ் சாரோட பத்திரிகை ஆபீஸில் வேலைப் பார்க்கும் போதுதான், லிங்குசாமி சாரை பார்த்தேன். அவர்கிட்ட என் ஆசையை சொன்னதும், ‘ ‘ஜீ’ படத்துல ஒரு ரோல் இருக்கு’னு சொல்லி என்னை அந்தப் படத்தில் நடிக்க வெச்சார்.’’

Also Read: ``மோகன் லால், விஜய்... இவங்க ரெண்டு பேர்கிட்டயும் ஒரு கேள்வி கேட்கணும்!'' - மஞ்சிமா மோகன்

‘ஜீ’ படத்தில் அஜித்துடன் நடித்த அனுபவம் எப்படி இருந்தது?

Ambani Shankar

’’ ‘ஜீ’ படத்தில் சைக்கிள் கடையில் வேலைப் பார்க்கிற பையனா நடிச்சிருப்பேன். முதலில் மணிவண்ணன் சாருக்கும் எனக்குமான காட்சிகளைத்தான் ஷூட் பண்ணாங்க. அப்பறம்தான், அஜித் சாரோடு நடிச்சேன். அவர் என்னை ஃபர்ஸ்ட் டைம் பார்த்தப்போ சின்னப் பையன்னு நினைச்சிட்டு, ‘க்யூட் பாய்’னு சொல்லி என்னை கொஞ்சினார். உடனே அங்க இருந்தவங்க, ‘சார் அவனுக்கு 17 வயசு. பார்க்கத்தான் சின்னப்பையனா இருக்கான்’னு சொன்னாங்க. அப்போதுல இருந்தே அஜித் சார் என்கிட்ட நல்லா பேச ஆரம்பிச்சிட்டார். ’ஜீ’ ஷூட்டிங்கை இப்போ நினைச்சாலும் ஒரு விஷயம்தான் என் மைண்ட்ல ஓடும். அந்தப் படத்தோட ஷூட்டிங் கும்பகோணத்துலதான் நடந்துச்சு. அந்த சமயத்தில்தான் கும்பகோணம் தீ விபத்து நடந்துச்சு. அதைக் கேள்விப்பட்ட அஜித் சார் உடனே அந்தப் ஸ்பாட்டுக்குப் போயிட்டார். அங்கப் போயிட்டு வந்ததும் ரொம்பவே சோகமா இருந்தார். ’இனிமேல் இங்க ஷூட்டிங் வேணாம் சார்’னு லிங்குசாமி சார்கிட்ட சொல்லிட்டார். அதுக்கப்பறம் கும்பகோணத்துல ஷூட் பண்ணலை. வேற, வேற ஊர்களில்தான் ஷூட் பண்ணினாங்க. அந்த சம்பவம் அஜித் சாரை ரொம்பவே பாதிச்சுடுச்சு.’’

‘வல்லவன்’ படத்தில் உங்களோட கேரக்டர் கவனிக்கப்பட்டுச்சு; அதில் நடித்ததைப் பற்றி சொல்லுங்க?

’’ ‘வல்லவன்’ படத்தில் நடிக்கிறதுக்காக முதலில் ’காதல்’ படத்தில் நடிச்ச அருண்கிட்டதான் கேட்டிருக்காங்க. அவர் அப்போ விஜய் சாரோட ’சிவகாசி’ படத்துல நடிச்சிட்டு இருந்ததுனால, அவரால ’வல்லவன்’ படத்துல நடிக்க முடியலை. அருணோட அண்ணன்தான், இதை என்கிட்ட சொல்லி சிம்பு சாரை போய் பார்க்கச் சொன்னார். நானும் சிம்பு சாரைப் போய் பார்த்தேன். அப்போ அவர், ‘நீ தல படத்துலயே நடிச்ச ஆள்; என் படத்துலேயும் நீ நடிக்கணும்’னு சொல்லி ’வல்லவன்’ படத்துல நடிக்க வெச்சார். அந்தப் படத்தோட ஷூட்டிங் மறக்கவே முடியாது. சிம்பு சார் படிச்ச ஸ்கூலில்தான் ஷூட்டிங் நடந்துச்சு. ஸ்கூல் நடக்கும் போதுதான் ஷூட்டிங்கும் நடந்துச்சு. பசங்க எல்லாரும் ஒரு பக்கம் படிச்சிட்டு இருப்பாங்க. நாங்க இன்னொரு பக்கம் நடிச்சிட்டு இருப்போம். லன்ச் டைம்ல அவங்களோடு உட்கார்ந்துதான் சாப்பிடுவோம். மறுபடியும் ஸ்கூலுக்கேப் போன மாதிரி ஒரு அனுபவத்தை அந்தப் படம் கொடுத்துச்சு. சிம்பு சார், சந்தானம் அண்ணே, ’காதல்’ சுகுமார் அண்ணே, கொட்டாச்சி அண்ணே, நான்னு இந்த கேங்கே, எதோ ஸ்கூலில் சேட்டைகள் பண்ணிட்டு இருக்கிற கேங் மாதிரியே இருந்தது. ’வல்லவன்’ படத்துல நடிச்ச மாதிரியே எனக்கு தோணாது; அந்த ஸ்கூலில் படிச்ச மாதிரிதான் தோணும்.’’

வடிவேலுவுடன் இணைந்து நடித்த அனுபவம்?

Vadivelu and Ambani Shankar

’’ ‘ஆறு’ படத்தில் நடிக்கும் போது சிங்கமுத்து அண்ணேதான் வடிவேலு அண்ணன்கிட்ட, ‘இவனும் மதுரைதான்’னு என்னை அறிமுகப்படுத்தினார். அப்போவே வடிவேலு அண்ணே, ‘அப்படியா... டேய் இவன் நம்பரை வாங்கி வெச்சுக்கோடா; சீன் இருந்தால் கூப்பிடலாம்’னு சொன்னார். அதே மாதிரி ’கருப்பசாமி குத்தகைதாரர்’ படத்துல வண்டி முன்னாடி விழுந்து காசை ஏமாத்துற சீனில் என்னை நடிக்க வைக்கிறதுக்காக கூப்பிட்டாங்க. அந்த சீன் நடிக்கும் போது பெரிய ரீச் கிடைக்கும்னு நான் நினைக்கவே இல்லை. ஏன்னா, சீக்கிரமே அந்த சீனோட ஷூட்டிங் முடிஞ்சிடுச்சு. ‘என்னடா டக்குனு முடிஞ்சிடுச்சு. ரொம்ப சின்ன சீன் போலேயே’னு கொஞ்சம் வருத்தமாவும் இருந்துச்சு. ஆனால், படம் ரிலீஸானதுக்கு அப்புறம் அந்தக் காமெடியை டிவியில் அடிக்கடி போட்டு, செம ஹிட்டாகிடுச்சு. அதுவும் அந்த பங்கு பிரிக்கிற சீன் இப்போவரைக்கும் மீம் டெம்ப்ளேட்டா வந்திட்டு இருக்கு. இந்தப் படத்துக்கு அப்பறம் தொடர்ந்து வடிவேலு அண்ணனோடு ’பிறகு’, ’இந்திரலோகத்தில் நா.அழகப்பன்’, ’குசேலன்’னு சில படங்களில் நடிச்சேன். அதுவும் எனக்கு ஒரு நல்ல ரீச்சை கொடுத்துச்சு. வடிவேலு அண்ணன்கிட்ட வொர்க் பண்ற அனுபவம் ரொம்ப சூப்பரா இருக்கும். கேஷூவலா உட்கார்ந்து பேசிட்டு இருக்கும் போதே, ஒரு சீனை டெவலப் பண்ணுவார். அந்த சீனில் நடிக்கிற எல்லாருக்கும் சமமா வசனங்களை பிரிச்சுக் கொடுப்பார். தன்னோடு நடிக்கிறவங்களும் பெரிய ஆளா ஆகணும்னு நினைப்பார். சீக்கிரம் வடிவேலு அண்ணன் மீண்டும் படங்களில் நடிக்க வரணும்.’’

உங்க பெயருக்கு அடைமொழியாக மாறின ‘அம்பாசமுத்திரம் அம்பானி’ படத்தில் நடித்ததைப் பற்றி சொல்லுங்க?

Ambani Shankar

’’காமெடி கேரக்டர்களில் மட்டுமே நடிச்சிட்டிருந்த எனக்கு ’அம்பாசமுத்திரம் அம்பானி’ படம்தான் எமோஷனலான கேரக்டரிலும் நடிக்க முடியும்னு காட்டுச்சு. அந்தப் படத்தில் படம் முழுக்க கருணாஸ் அண்ணன்கூட நடிச்சிருப்பேன். இந்தப் படத்தில் கமிட்டாகும் போது, என்கிட்ட முழு கதையை சொல்லலை; நானும் காமெடி கேரக்டர் மட்டும்தான்னு நினைச்சுக்கிட்டேன். ஒரு நாள் ஷூட்டிங் ஸ்பாட்டுக்குப் போனதுக்கு அப்பறம்தான், கருணாஸ் அண்ணனை அடிச்சிட்டு, அவர்கிட்ட இருந்து பணத்தை பிடிங்கிட்டுப் போற மாதிரி ஒரு சீன் இருக்குனு சொன்னாங்க. ‘என்னடா... நம்மளை வில்லன் ஆக்குறாங்க’னு நினைச்சேன். எனக்கு ஷாட்டில் கருணாஸ் அண்ணனை அடிக்கவே வரலை. கஷ்டப்பட்டுத்தான் அந்த சீனை நடிச்சேன். க்ளைமேக்ஸில் அவர்கிட்ட மன்னிப்பு கேட்டு, அழற மாதிரி எமோஷனல் சீனும் படத்துல இருந்துச்சு. இந்தப் படம் ரிலீஸானதுக்கு அப்புறம் எனக்கு நல்ல பெயர் கிடைச்சதுனால, இந்தப் படம் என் பெயரோடும் சேர்ந்து ‘அம்பானி’ சங்கர்னு எல்லாரும் கூப்பிட ஆரம்பிச்சிட்டாங்க.’’

நடிப்பைப் பொறுத்தவரைக்கும் உங்களுக்கு வயதுக்கு ஏற்ற தோற்றம் இல்லாததை எப்படி பார்க்கிறார்கள்?

’’நான் சினிமாவில் நடிக்க வந்த சமயத்தில் என் வயசு அதிகமா இருந்தாலும் நான் பார்க்கிறதுக்கு சின்ன பையன் மாதிரி இருந்தனால, எனக்கு நிறைய படங்கள் கிடைச்சது. சின்ன பையன் ரோல்களில் நடிக்கிறதுக்கு அப்போ நடிகர்களும் குறைவா இருந்தாங்க. அதுனால, சில நல்லப் படங்களும் கிடைச்சது. எனக்கு தாடி, மீசையெல்லாம் வளர ஆரம்பிச்சதுக்கு அப்பறம், என்னால சின்ன பையன் கேரக்டர்களிலும் நடிக்க முடியலை; ஹீரோவோட ஃப்ரெண்ட் கேரக்டர்களிலும் நடிக்க முடியலை. என்னை எந்த வயசு கேரக்டர்களில் சேர்க்கிறதுனு நிறைய இயக்குநர்களுக்கு குழப்பம் வந்துச்சு. என்னோட உயரம் குறைவா இருந்ததுனால, ஹீரோவோட ஃப்ரெண்ட் கேரக்டர்களில் நடிக்கும் போது ஃப்ரேம் வைக்கிறதுக்கு கஷ்டமா இருக்குனு சொல்லியிருக்காங்க. அதே சமயம், ஃப்ரெண்ட் கேரக்டர்களில் நடிக்கிறதுக்கு நிறைய நடிகர்கள் இருக்க போட்டிகளும் அதிகமாகிடுச்சு. அதுக்கப்புறம்தான், சில சிரமங்களை சந்திக்க ஆரம்பிச்சேன். இப்போ படங்கள் குறைவாகத்தான் கிடைக்குது. அதுனால, எனக்குள்ள இருக்கிற வேறு சில திறமைகளை வெளியே கொண்டுவர ஆரம்பிச்சிருக்கேன். பாக்யராஜ் சார்கிட்ட வொர்க் பண்ணும் போதே, ஸ்கிரிப்ட் ரைட்டிங் பற்றி சில விஷயங்கள் கத்துக்கிட்டேன். தம்பி ராமையா அண்ணன் இயக்கிய, ’மணியார் குடும்பம்’ படத்துல உதவி இயக்குநரா வொர்க் பண்ணேன். சில குறும்படங்கள் பண்ணேன்; சில ஸ்கிரிப்ட்டும் எழுதி வெச்சிருக்கேன். என்கிட்ட பெரிய முதலீடு இல்லாததுனால, 'Thirsty Crow'னு ஒரு யூடியூப் சேனல் ஆரம்பிச்சு, அதில் வீடியோக்கள் பண்ணிட்டு இருக்கேன்.

நானே எழுதி, இயக்கி, என் நண்பர்களோடு சேர்ந்து நடிச்சுனு மனசுக்குப் பிடிச்ச மாதிரி சில வேலைகளை பண்ணிட்டு இருக்கேன். மக்கள்கிட்டேயும் நல்ல வரவேற்பு கிடைச்சிருக்கு. நல்லது நடக்கும்னு நம்புறேன்.’’



source https://cinema.vikatan.com/tamil-cinema/actor-ambani-shankar-talks-about-his-career

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக