தெற்கு ஆசியாவின் மிகப்பெரிய மண் அணை, தமிழகத்தின் இரண்டாவது பெரிய அணை என்ற பெருமைக்குரியது `பவானிசாகர் அணை’. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் இருந்து 17 கி.மீ தொலைவில் இந்த அணை இருக்கிறது. 8.78 கி.மீ கரை நீளமும், 30 சதுர மைல்கள் நீர்த்தேக்கப் பரப்பும், 105 உயரமும் என ஓங்கி உயர்ந்து நிற்கிறது பவானிசாகர் அணை. மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் இருந்து உற்பத்தியாகிவரும் பவானி ஆற்றின் நீரும், நீலகிரியில் உற்பத்தியாகிவரும் மோயாற்றினுடைய நீரும்தான் இந்த அணைக்கான நீராதாரம். இந்த அணையில் 32.8 டி.எம்.சி தண்ணீரைத் தேக்கி வைக்க முடியும்.
இந்த அணையின் மூலமாக ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 2.07 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும், ஈரோடு மாவட்டத்தின் முக்கியக் குடிநீர் ஆதாரமாகவும் இந்த அணை விளங்குகிறது. பவானிசாகர் அணையின் முக்கியப் பாசனப்பகுதியாக கீழ்பவானி வாய்க்கால் பாசனம் இருக்கிறது.
இந்தக் கீழ்பவானி பிரதானக் வாய்க்காலின் நீளம் 200 கி.மீ. இதிலிருந்து 800 கி.மீ நீளத்திற்கு கிளை வாய்க்கால்களும், 1,900 கி.மீ நீளத்திற்கு பகிர்மான வாய்க்கால்களும் வெட்டப்பட்டிருக்கின்றன. இதிலெல்லாம் பவானிசாகர் அணையிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் பாய்ந்து நெல், கரும்பு, வாழை, கடலை, எள் போன்றவை செழித்து வளர்கின்றன.
Also Read: ‘காவிரி தீர்ப்புக்கு மாறாக பவானிசாகர் நீர் திறப்பு’ - கொந்தளிக்கும் கீழ்பவானி விவசாயிகள்!
1948-ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த அணைக் கட்டுமானப் பணி, 1955- ஆண்டு ஆகஸ்ட் 19-ம் தேதி நிறைவு பெற்று திறக்கப்பட்டது. சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள் பலரும் அணைக் கட்டுமானப் பணிகளில் தாமாகவே முன்வந்து ஈடுபட்டிருக்கின்றனர். ரூ.10.50 கோடி மதிப்பீட்டில் அணை கட்டப்பட்டுள்ளதாக, அணையிலுள்ள கல்வெட்டுகள் தகவல் தெரிவிக்கின்றன. கம்பீரமாய் உயர்ந்து நிற்கும் இந்த பவானிசாகர் அணை கட்டப்பட்டு 65 ஆண்டுகள் முடிந்து 66 ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. அணை வரலாற்றில் 26 முறை பவானிசாகர் அணை 100-அடியைத் தொட்டிருக்கிறது.
source https://www.vikatan.com/news/tamilnadu/erode-bhavanisagar-dam-completed-65-years
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக