Ad

ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2020

உ.பி : `தொழில்நுட்பக் கல்வி அமைச்சர் கொரோனாவுக்கு பலி!’ - முதல்வர் இரங்கல்

இந்தியாவில் கொரோனா வைரஸ் மிகவும் கடுமையாகப் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை 17.5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கொரோனா வைரஸால் பாதிப்படைந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 37,364 ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ஆந்திரா, டெல்லி, கர்நாடகா மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் கடுமையாகத் தொடர்ந்து பாதிப்படைந்து வருகின்றன. பல்வேறு மாநிலங்களிலும் முதல்வர்கள், அமைச்சர்கள், காவலர்கள், மருத்துவர்கள் உட்பட பலரும் இந்த வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இந்த நிலையில், தற்போது உத்தரப் பிரதேச அமைச்சர் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்துள்ள சம்பவம் பலரையும் அதிர்ச்சியிலும் கவலையிலும் ஆழ்த்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில் தொழில்நுட்பக் கல்வித்துறை அமைச்சராக இருந்து வந்தவர், கமல் ராணி வருன். 62 வயதான இவருக்கு சில நாள்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து ஜூலை 18-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஆக்ஸிஜன் மற்றும் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில், சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை 9.30 மணிக்கு சஞ்சய் காந்தி முதுகலை மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் உயிரிழந்துள்ளார்.

முதல்வர்

இதுதொடர்பாக முதல்வர் யோகி ஆதித்யநாத், ``அமைச்சர் கமல் ராணியின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். கொரோனா வைரஸால் அவர் பாதிப்படைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மிகவும் பிரபலமான தலைவராகவும் சமூக செயற்பாட்டாளராகவும் அறியப்பட்டு வந்தார். அமைச்சரவையில் இருக்கும்போது மிகவும் திறமையுடன் பணியாற்றினார்” என்று தெரிவித்துள்ளார். இதனால், ராமர் கோயில் கட்டுவது தொடர்பான விழா ஏற்பாடுகளை மேற்பார்வையிட அயோத்திக்குச் செல்லும் பயணத் திட்டத்தை அவர் ரத்து செய்ததாகக் கூறப்படுகிறது. அமைச்சரின் மறைவுக்கு பிற அமைச்சர்களும் தங்களது வருத்தத்தைப் பதிவு செய்து வருகின்றனர்.

உத்தரப் பிரதேசத்தில் கொரோனா வைரஸால் இதுவரை சுமார் 89,048 பேர் பாதிப்படைந்துள்ளனர். பாதிப்படைந்தவர்களில் சுமார் 1,677 பேர் உயிரிழந்துள்ளனர். அம்மாநிலத்தின் தலைநகரான லக்னோ மிகவும் கடுமையாகப் பாதிப்படைந்துள்ளது. தொடர்ந்து அம்மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் பாதிப்புகள் அதிகமாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Also Read: `அவரை நம்பி வரும் ஏழைகளுக்குதான் இழப்பு!' - கொரோனா பலிகொண்ட கோவை நரம்பியல் மருத்துவர்



source https://www.vikatan.com/government-and-politics/death/uttarpradesh-minister-died-of-corona-virus-infection

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக