Ad

ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2020

கரூர்: `சாலைகள்தோறும் சோலை!' - ஊராட்சி மன்றத் தலைவரின் அசத்தல் திட்டம்

தனது ஊராட்சியில் உள்ள சாலைகள் அனைத்தையும் சோலைகளாக மாற்றும் முயற்சியாக, ஊராட்சியில் உள்ள ஒவ்வொரு சாலை ஓரங்களிலும் மரங்கள் நட்டு பராமரிக்கும் முயற்சியில் இறங்கியிருக்கும் ஊராட்சிமன்றத் தலைவரின் முயற்சிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

மரக்கன்று நடும்போது கந்தசாமி

கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியத்தில் இருக்கிறது வரவணை ஊராட்சி. இந்த ஊராட்சி மன்றத் தலைவராக, சுயேச்சையாக போட்டியிட்டு வென்ற கந்தசாமி என்பவர் பதவி வகித்து வருகிறார். வரவணை ஊராட்சி என்பது, 15 சிற்றூர்களை உள்ளடக்கியது.

Also Read: கரூர்: `ஆடிப்பட்டம் தேடி விதை!’ - மாணவர்களை இயற்கை விவசாயி ஆக்கிய ஆசிரியர்

இந்த ஊராட்சியில் உள்ள அனைத்து ஊர்களிலும், 31 ஒன்றியச் சாலைகளும், 19 ஊராட்சி சாலைகளும் உள்ளன. கந்தசாமி வரவணை ஊராட்சிமன்றத் தலைவராக பதவியேற்றபிறகு, வரவணை ஊராட்சியை முன்மாதிரி ஊராட்சியாக மாற்றும்பொருட்டு, பல்வேறு முயற்சிகளை செய்துவருகிறார். ஊரை பசுமையாக்கும் நோக்கில், அரசுபுறம்போக்கு இடம் அனைத்திலும் மரக்கன்றுகளை நட்டு, தனியாக ஆள்கள் நியமித்து, அவற்றைப் பராமரித்து வருகிறார்.

மரக்கன்று நடும்போது கந்தசாமி

மிகவும் வறண்ட ஊராட்சியான இந்த ஊராட்சியில் அனைத்து சாலைகளின் இருபுறமும் மரங்களன்றி, ஏதோ பாலைவனத்துக்குப் போகும் சாலைகள் போல் காட்சியளித்தன. அதனால், அத்தனை சாலைகளின் இரண்டு பக்கங்களிலும், பத்தடிக்கு ஒரு மரக்கன்றை நட்டு பராமரிக்கும், 'சாலைகள்தோறும் சோலை' என்ற புதுமுயற்சியை முன்னெடுத்திருக்கிறார்.

மரக்கன்றுகள் நடும் பணியில் இருந்த கந்தசாமியிடம் பேசினோம்.

``வரவணை ஊராட்சியில் உள்ள அனைத்து சாலைகளிலும் இந்தத் திட்டத்தை செயல்படுத்த இருக்கிறோம். நேற்று வ.வேப்பங்குடியில் இந்தத் திட்டத்தை செயல்படுத்தினோம். இரண்டாவது ஊராக இன்று பாலப்பட்டியில் மரம் நடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, அனைத்து ஊர்களில் உள்ள சாலைகளிலும், முதற்கட்டமாக 500 மரக்கன்றுகள் நட்டு, பராமரிக்க இருக்கிறோம். ஏன் சாலையோரங்களில் மரங்கள் நட வேண்டும் என்றால், நாம் சுற்றுச்சூழலை அப்படிக் கெடுத்து வைத்திருக்கிறோம். இரண்டு நூற்றாண்டுக்கு முன்புவரை, மக்கள் பெரும்பாலும் நடந்தே சென்றனர். வணிகர்கள், அரசு சேவகர்களே கூட போக்குவரத்து சாதனங்களாக மாட்டு வண்டி, குதிரை வண்டி என்று பயன்படுத்தினர்.

கந்தசாமி

சாலை ஓரங்களில் மரங்கள் இருக்கும்போது, நிழலில் பயணிக்கும் நல்வாய்ப்பு இருந்தது. அசோகர் காலத்தில் அவர் சாலைகள்தோறும் மரங்கள் நட்டார் என்று வரலாற்றில் படிக்கிறோம். ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் நவீன சாலைகள் அமைக்கப்பட்டபோதுகூட, சாலையோரங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டன. ஆனால், அதன்பிறகு சாலையோரம் மரம் நடும் போக்கு முற்றிலும் அருகிபோய்விட்டது. இன்று எங்கும் இருமங்கிலும் மரங்களற்ற அனல் பறக்கும் சாலைகள்தாம் உள்ளன. நவீன போக்குவரத்து சாதனங்கள் வளர்ச்சிக்கு பின்னர், குளிர்சாதன வசதியுடன் சாலைகளில் வாகனகளில் செல்லும் நிலைக்கு வந்திருக்கிறோம். ஆனால், இன்று நம் பயணம் எப்படி இருக்கிறது என்று ஒவ்வொருவரும் கண்டிப்பாக உணர்ந்திருப்பர்.

Also Read: 700 வெளிநாட்டுப் பழ மரங்கள்... கேரள விஞ்ஞானியின் வித்தியாச விவசாயம்!

கிராமப் பொருளாதார முன்னேற்றம் என்பது கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர் கூட, சாலையோர மரங்கள் மூலம் கிடைத்தது. புளியமரங்கள், மாமரங்கள் மூலம் கிராம பொருளாதார முன்னேற்றத்திற்கும், மக்களின் வாழ்வாதாரத்திற்கும், வேலைவாய்ப்புக்கும் வழி இருந்தது. இன்று பெரும்பாலும் பல ஊர்களில் உள்ள சாலைகள் எல்லாம் மரங்கள் இல்லாமல்தான் உள்ளன. அதற்கு என்னோட ஊராட்சியும் விதிவிலக்கல்ல. அதனால், கிராமத்தின் சூழலை மேம்படுத்தவும், கிராம மக்கள் பொருளாதாரத்துக்கு வழிவகுக்கவும், சாலைகள்தோறும் இருமங்கிலும் பாதாம், அத்தி, புளியமரம், மா என்று மக்களுக்கு பயன்தரும் மரக்கன்றுகளையும், சூழலுக்கு உகந்த தூங்குமூஞ்சி, அரளி, மகிழ்மரம், ஆலமரம், வேம்பு, இலுப்பை, பூவரசு, புங்கன் என்று நாட்டுமரக்கன்றுகளையும் நட்டு வருகிறோம். இந்தத் திட்டத்தை முழுக்க முழுக்க அமெரிக்காவில் பணியாற்றிவரும், என் மகன் நரேந்திரன் கந்தசாமியின் செலவில் செய்கிறோம். வேறு யாரிடமும் இதற்காக நான் நன்கொடை வாங்கலை.

மரக்கன்று நடும்போது கந்தசாமி

இன்று நடப்படும் மரங்கள் பல ஆண்டுகள் கழித்து தான் பலனளிக்கும் என்றாலும், இம்முயற்சியினை தொடர்ந்து எடுத்து சென்று வருங்கால தலைமுறை இயற்கையோடு இயைந்த வாழ்வினை வாழவும், பசுமை கிராமமாக வரவணை ஊராட்சியை மாற்றவும், இந்த முன்னெடுப்பை முனைப்போடு செய்துவருகிறேன். ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது கிராமத்தில் இருந்துதான் ஆரம்பிக்கிறது. நாடு என்ற கட்டமைப்புக்கு அடிப்படை கிராமம் தான். அதனால்தான், மகாத்மா காந்திகூட, 'கிராமங்கள்தான் இந்தியாவின் முதுகெலும்பு' என்று கூறினார். அதனால்தான், எனது ஊராட்சியை பசுமையான ஊராட்சியாக மாற்றி, முன்மாதிரி ஊராட்சியாக அடையாளப்படுத்த முயற்சி எடுத்திருக்கிறேன்" என்றார் மகிழ்ச்சியாக!



source https://www.vikatan.com/news/environment/karur-village-presidents-initiative-gets-applaud-from-various-sections

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக