Ad

திங்கள், 3 ஆகஸ்ட், 2020

கோவை: இலங்கை தாதா அங்கொட லொக்கா மரணம்; சிக்கவைத்த போலி ஆதார்! காதலி, பெண் வழக்கறிஞர் கைது

இலங்கை நிழல் உலக தாதாவாக இருந்தவர் அங்கொட லொக்கா என்கிற மதுமா சந்தன லசந்தா பெரேரா. கொலை, கொள்ளை, ரியல் எஸ்டேட் மாஃபியா, போதைப் பொருள் கடத்தல் என்று அனைத்துவிதமான குற்றச் செயல்களுக்கும் மூளையாகச் செயல்பட்டவர். 2017-ம் ஆண்டு இலங்கையின் மற்றொரு முக்கிய தாதாவான அருண் தாமித் உள்ளிட்ட குற்றவாளிகளை ஏற்றிக் கொண்டு போலீஸ் வாகனம் சென்றுகொண்டிருந்தது. திடீரென்று அந்த வாகனத்தின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டு, மேலும் சிலர் காயமடைந்தனர்.

அங்கொட லொக்கா

Also Read: நாகை கஞ்சா டு இலங்கை தங்கக் கட்டி! -தொடர் சம்பவங்களால் மிரளும் கடலோரக் காவல்படை

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியும் அங்கொட லொக்காதான். அந்தச் சம்பவத்துக்குப் பிறகு இலங்கை போலீஸ் அவரை தீவிரமாகத் தேடினர். ஆனால், அங்கொட லொக்கா இந்தியாவில் தலைமறைவாகிவிட்டார்.

தொடர்ந்து சென்னை, பெங்களூரு, கோவை, மதுரை என்று பல இடங்களுக்கு அவர் சென்றதாகக் கூறப்படுகிறது. மேலும், தமிழக போலீஸாரால் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வெளியானதாகவும் சொல்லப்படுகிறது. இதனிடையே, அங்கொட லொக்கா தமிழகத்தில் கொல்லப்பட்டதாக கடந்த மாதம் தகவல்கள் வெளியாகின. ஆனால், இந்தத் தகவலை மறுத்த இலங்கை போலீஸார், தங்களுக்கு அதிகாரபூர்வமாக எந்தத் தகவலும் வெளியாகவில்லை என்று கூறியிருந்தனர்.

இலங்கை

இந்நிலையில், கோவை மாநகர போலீஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், `அங்கொட லொக்கா உயிரிழந்துள்ள தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் சிவகாமி சுந்தரி. இவர் தன்னுடைய உறவினர் பிரதீப்சிங் (35) என்பவர் கோவை சேரன்மாநகர் பகுதியில் மாரடைப்பால் இறந்துவிட்டார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரளித்திருந்தார். அதுதொடர்பாக, பிரதீப் சிங்கின் ஆதார் அட்டையை ஆவணமாகக் கொடுத்துள்ளார். போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்தபோது, சிவகாமி சுந்தரி கொடுத்தது போலியான ஆதார் கார்டு என்று தெரியவந்தது.

கோவை

தொடர்ந்து விசாரித்ததில், பிரதீப் சிங்கின் உண்மையான பெயர் அங்கொட லொக்கா என்பதும் தெரிய வந்தது. அவர் இலங்கையில் பல்வேறு வழக்குகளில் தேடப்படும் குற்றவாளி என்றும் தெரியவந்தது. அங்கொடவுடன் இலங்கை கொழும்பைச் சேர்ந்த அமானி தான்ஜி (27) என்ற பெண்ணும் வசித்து வந்துள்ளார்.

இதனிடையே, சிவகாமி சுந்தரியும், திருப்பூரில் வசித்து வரும் தியானேஷ்வரன் ஆகியோரும் இணைந்து அங்கொட லொக்கா மற்றும் அமானி தான்ஜி ஆகியோருக்கு நாட்டின் குடியுரிமையை மறைத்து போலியாக ஆவணங்கள் மூலம் போலி ஆதார் கார்டு எடுத்து உதவியுள்ளனர். இதையடுத்து, சிவகாமி சுந்தரி, அமானி தான்ஜி மற்றும் தியானேஷ்வரன் ஆகிய மூன்று பேரை பீளமேடு போலீஸார் கைது செய்தனர்” என்று கூறப்பட்டுள்ளது.

கைது

அங்கொட லொக்காவுக்கு, கோவையில் பிரேத பரிசோதனை முடிந்தவுடன் மதுரைக்கு எடுத்து சென்று அவரின் உடலை தகனம் செய்ததும் தெரியவந்துள்ளது.

அங்கொட லொக்காவின் கூட்டாளிகள் சிலர் கடந்த மாதம் இலங்கை போலீஸால் கைது செய்யப்பட்டனர். அப்போது அவர்கள் இலங்கையைச் சேர்ந்த அழகுக் கலை பெண் ஒருவர், இந்தியாவில் அங்கொட லொக்காவை கொன்றுவிட்டதாகக் கூறியுள்ளனர். மேலும், போதைப் பொருள் கடத்துவதற்காக அங்கொட லொக்கா வைத்திருந்த கழுகு ஒன்றையும் இலங்கை போலீஸார் பறிமுதல் செய்திருந்தனர்.

அங்கொட லொக்கா

இந்நிலையில், கோவையில் கைது செய்யப்பட்ட அமானி தான்ஜி என்ற பெண், அங்கொட லொக்காவின் காதலி என்று தெரியவந்துள்ளது. மேலும், அந்தப் பெண் கர்ப்பமாக இருந்ததும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், கடந்த வாரம் அமானி தான்ஜிக்கு கடந்த வாரம் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மன அழுத்தம் காரணமாக அவரது கரு கலைந்துவிட்டதாகவும், அவருக்கு தொடர்ந்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் போலீஸார் கூறியுள்ளனர். இதனிடையே, கைது செய்யப்பட்டுள்ள மதுரை சிவகாமி சுந்தரி வழக்கறிஞர் என்பதும் தெரியவந்துள்ளது.

சிவகாமி சுந்தரி

இந்த வழக்கில், அங்கொட லொக்காவின் கூட்டாளிகள் சிலருக்கும் தொடர்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையைச் சேர்ந்த தாதா கும்பலுக்கும், தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் பழக்கம் ஏற்பட்டது எப்படி? அங்கொட லொக்கா கொலை செய்யப்பட்டாரா? போன்றவை குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.



source https://www.vikatan.com/news/crime/coimbatore-police-arrest-3-aides-of-deceased-srilankan-dada-angoda-lokka

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக