பா.ஜ.க-வின் மாநிலத் துணைத் தலைவர்களுள் ஒருவராக இருப்பவர் நயினார் நாகேந்திரன். மாநிலத் தலைவர் பொறுப்புக்கு நயினார் முட்டி மோதிய நிலையில், துணைத் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டதால், அவர் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. நயினாரின் மனம் அறிந்த திருநெல்வேலி தி.மு.க நிர்வாகிகள் சிலர், அவரைக் கட்சிக்குள் இழுத்துவர கடுமையாக முயற்சி செய்வதாகவும் சமீபத்தில் பரபரப்பானது. இந்தநிலையில், சில நாள்களுக்கு முன்னர் திருச்சியில் கே.என்.நேருவைச் சந்தித்து நயினார் நாகேந்திரன் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாகப் பரவும் தகவலால் அரசியல் வட்டாரத்தின் பல்ஸ் எகிறியிருக்கிறது.
இதுகுறித்து நம்மிடம் பேசிய தி.மு.க நிர்வாகிகள் சிலர், ``கடந்த வாரம் திருச்சி வந்திருந்த நயினார் நாகேந்திரன், தி.மு.க-வின் முதன்மைச் செயலாளர் கே.என்.நேருவையும் திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். தி.மு.க-வில் இணைவதற்கு தனக்குள்ள நிபந்தனைகளை நயினார் கூறவும், அதை கே.என்.நேரு பொறுமையாகக் கேட்டுக்கொண்டார். திருநெல்வேலி கிழக்கு மாவட்டச் செயலாளர் ஆவுடையப்பனை மாற்றிவிட்டு, அந்தப் பொறுப்பை நயினாருக்குத் தருவதாகப் பேசப்பட்டது. கிட்டத்தட்ட பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் அவர் தி.மு.க-வில் ஐக்கியமாவார்” என்றனர்.
Also Read: தமிழ் மக்களோடு நெருங்க ரூட் போடும் பா.ஜ.க... `வேறொரு' ரூட்டில் எல்.முருகன்!
நயினார் நாகேந்திரன் தரப்பில் பேசினோம். ``இப்போது வரை அவர் பா.ஜ.க-வில்தான் இருக்கிறார். சமீபத்தில் எல்.முருகன் அவரைச் சந்தித்தபோது கூட, தனக்கு எந்த மனமாச்சர்யமும் இல்லை என்பதைத் தெளிவுபடத் தெரிவித்தார்” என்பதோடு முடித்துக்கொண்டனர்.
திருநெல்வேலியைப் பொறுத்தவரையில் நாங்குநேரி தொகுதியில் தனது சமூகத்தினரின் அதிக வாக்குகள் இருப்பதால், அந்தத் தொகுதியை தனக்கு ஒதுக்குமாறு நயினார் நாகேந்திரன் கேட்டிருக்கிறாராம். இந்தத் தகவல் ஸ்டாலினிடம் கொண்டு சேர்க்கப்பட்டு, அவரும் சம்மதித்திருப்பதாகக் கூறப்படுகிறது. நாங்குநேரி, ராதாபுரம், அம்பாசமுத்திரம் தொகுதிகளை உள்ளடக்கிய மாவட்டத்துக்கு நயினார் நாகேந்திரனை மாவட்டச் செயலாளராக நியமிக்கவும் ஸ்டாலின் ஓகே சொல்லியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
source https://www.vikatan.com/news/politics/nainar-nagendren-meets-dmk-kn-nehru-in-trichy-says-sources
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக