தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியைச் சேர்ந்த துரைமுத்து என்பவர் மீது 10-க்கும் மேற்பட்ட கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவர் மணக்கரை வனப்பகுதியில் பதுங்கியிருந்த தகவல் கிடைத்த தனிப்படை போலீஸார் அவரைக் கைது செய்யச் சென்றனர்.
அப்போது, துரைமுத்து நாட்டு வெடிகுண்டை வீசியதில் காவலர் சுப்பிரமணியன் தலை சிதறி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த தாக்குதலின்போது குற்றவாளியான துரைமுத்து என்பவரும் பலத்த காயமடைந்து உயிரிழந்தார். இருவரின் உடலும் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வுக்கு செய்யப்பட்ட பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
காவலர் சுப்பிரமணியனின் உடலுக்கு தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் திரிபாதி நேரில் அஞ்சலி செலுத்தியதுடன், உயிரிழந்த காவலரின் மனைவி புவனேஸ்வரி மற்றும் குடும்பத்தினரிடம் வருத்தத்தைப் பகிர்ந்து கொண்டார்.
காவலர் மீது வெடிகுண்டை வீசிய கொலையாளி துரைமுத்துவின் உடல் உடற்கூறாய்வு செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது அவரது ஆதரவாளர்கள் நூற்றுக்கும் அதிகமானோர் பைக்குகளில் அவரது உடல் எடுத்துச் சென்ற வாகனத்தின் முன்பாக அணிவகுத்துச் சென்று காவல்துறையினருக்கு நெருக்கடி கொடுத்தார்கள்.
பின்னர் கொலையாளி துரைமுத்து உடல், சொந்த ஊரான மேலமங்கலகுறிச்சி பகுதியில் புதைக்கப்பட்டது. அப்போது காவல்துறையினரின் கெடுபிடியையும் மீறி ஏராளமான ஆதரவாளர்கள் இறுதிச் சடங்கில் பங்கேற்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்.
புதைக்கும் முன்பாக கொலையாளி துரைமுத்து உடலின் மீது ஐந்து அடி நீளமுள்ள வீச்சறிவாள் வைக்கப்பட்டது. அவரது ஆதரவாளர்கள் அவரது உடலை மூடிய கல்லறையின் மீது வீர சபதம் எடுத்துக் கொண்டார்கள். அப்போது, ‘நீ விட்டுச் சென்ற பணியை நிறைவேற்றுவோம்” என அவர்கள் சபதம் ஏற்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அந்தப் பகுதியில் இருந்த உளவுத்துறையினர் இந்த விவகாரங்களை கவனமாகக் கண்காணித்தார்கள்.
source https://www.vikatan.com/news/crime/supporters-of-murderer-kept-knife-in-coffin-along-with-his-body
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக