Ad

புதன், 19 ஆகஸ்ட், 2020

ரபாடா டு ரவி சாஸ்திரி... தோனியின் மிடாஸ் டச் மாறியது எப்போது?! #Dhoni

Dhoni

"இந்தியாவின் வெற்றிகரமான கேப்டனாக, மிகச்சிறந்த ஃபினிஷராக, ஸ்ட்ரைக்கிங் பேட்ஸ்மேனாக இருந்த தோனிக்கு இப்போதெல்லாம் என்னதான் ஆச்சு?" என்கிற ஹர்ஷா போக்ளேக்களின் கேள்விகள் 2015 உலகக்கோப்பைக்குப் பிறகுதான் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்தன. க்ரீஸூக்கு வந்ததுமே வேகவேகமாக சிங்கிள், டபுள்கள் ஓடி... ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்துகொண்டேயிருந்து, ப்ரஷர் ஏறும்போது சிக்ஸர், பவுண்டரிகள் அடித்து ரன்ரேட்டை கட்டுக்குள் வைப்பதுதான் தோனியின் ஸ்டைல். இந்த பேட்டிங் ஸ்டைலில் மாற்றம் ஏற்படத்தொடங்கியபோதுதான் தோனியின் மிடாஸ் டச் மிஸ் ஆக ஆரம்பித்தது.

ரபாடா கொடுத்த அதிர்ச்சி

தோனியின் ஃபினிஷர் இமேஜை முதலில் கேள்விக்குள்ளாக்கியவர் ககிஸோ ரபாடா. 2015 அக்டோபரில் தென்னாப்பிரிக்காவுடன் கான்பூரில் ஒருநாள் போட்டியில் விளையாடியது இந்தியா. ஏபி டிவில்லியர்ஸ் சென்சுரி அடிக்க, தென்னாப்பிரிக்கா 303 ரன்கள் அடித்தது. இந்தியாவின் ஓப்பனர் ரோஹித் ஷர்மா 150 ரன்கள் அடிக்க இந்தியா வெற்றியை நெருங்கிக்கொண்டிருந்தது. 47-வது ஓவரின் முதல் பந்தில் ரோஹித் அவுட் ஆகும்போது இந்தியா 23 பந்துகளில் 35 ரன்கள் அடிக்கவேண்டும். இன்னொரு பக்கம் ரெய்னா, பின்னி என அடுத்தடுத்த வீரர்கள் அவுட் ஆனாலும், கேப்டன் தோனி களத்தில் இருக்கிறார் என்கிற நம்பிக்கையில் இந்திய ரசிகர்கள் வெற்றிக்காக காத்திருந்தார்கள்.

Dhoni, Rabada

வழக்கம்போல ஆட்டத்தை கடைசி ஓவர் வரை கொண்டுபோனார் தோனி. கடைசி ஓவரை 20 வயது பெளலரான ரபாடாவிடம் கொடுத்தார் ஏபி டி வில்லியர்ஸ். வெற்றிக்கு 11 ரன்கள் அடிக்கவேண்டும். தோனி ஸ்ட்ரைக்கில் இருக்கிறார். நிச்சயம் இந்தியா வெற்றிபெற்றுவிடும் என எல்லோரும் நினைக்க தடுமாறினார் தோனி. 3 பந்துகளில் 7 ரன்கள் அடிக்கவேண்டும் என்ற நிலை வந்தது. அப்போதும் தோனிதான் ஸ்ட்ரைக்கர். பொதுவாக இம்மாதிரியான சூழலில் சிக்ஸரோடு எதிரணியின் கதையை முடிப்பது தோனியின் வழக்கம். ஆனால், டாப் எட்ஜாகி ரபடாவிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார் தோனி. அன்றுதான் முதல்முறையாக தோனியின் ஃபினிஷிங்கில் பிசிறு தட்ட ஆரம்பித்தது.

இந்த சம்பவத்தில் இருந்தே தோனியின் ஸ்ட்ரைக் ரேட் என்பது குறைய ஆரம்பித்தது. 2016-ல் ரொம்பவே தடுமாறினார். 13 போட்டிகளில் 10 இன்னிங்ஸில் பேட் பிடித்தவரால் பெரிய ஸ்கோர்களை அடிக்க முடியவில்லை. ஸ்ட்ரைக் ரேட்டும் சரிவை சந்தித்தது. 2017-ல் தோனியின் பேட்டிங் திறமைகளையே கேள்விக்குள்ளாக்கும் இன்னும் ஒரு மோசமான சம்பவம் நடந்தது.

குறைந்த ஸ்ட்ரைக்கிங் பவர்!

வெஸ்ட் இண்டீஸின் ஆன்டிகுவாவில் நடைபெற்ற அந்த ஒருநாள் போட்டி தோனியின் கரியரில் ஒரு கறுப்புநாள். ஜூலை 2, 2017. 50 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் அடித்தது வெறும் 189 ரன்கள்தான். ஈஸியான டார்கெட் என சேஸைத்தொடங்கிய இந்தியாவுக்கு முதலில் அதிர்ச்சி கொடுத்தவர்கள் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள். தவான், கோலி, தினேஷ் கார்த்திக் என அடுத்தடுத்த பேட்ஸ்மேன்கள் சிங்கிள் டிஜிட்டல் அவுட்டாக 13-வது ஓவரிலேயே களத்துக்கு வந்துவிட்டார் தோனி. ஆனால், ரஹானேவுடன் ஆடிக்கொண்டிருப்பது தோனியா என சந்தேகம் வரும் அளவுக்கு அவ்வளவு மெதுவான ஆட்டம். தேவேந்திர பிஷு எனும் மிக மிக சுமாரன லெக் ஸ்பின்னரின் பெளலிங்கில் எல்லாம் மெய்டன் ஓவர் கொடுத்தார் தோனி. பிஷுவுக்கே தான் பந்துவீசிக்கொண்டிருப்பது ஹெலிகாப்டர் ஷாட்களைப் பறக்கவிடும் தோனிக்குத்தானா என சந்தேகம் வந்திருக்கும்.

Dhoni

13-வது ஓவரில் களத்துக்கு வந்தவர் 47-வது ஓவரில் 108 பந்துகளில் 50 ரன்கள் அடித்தார். அப்போதும்கூட அடுத்தடுத்த ஓவர்களில் சிக்ஸர்களும், பவுண்டரிகளும் அடித்து இந்தியாவை வெற்றிபெறவைத்துவிடுவார் என ரசிகர்கள் எல்லோரும் நம்பினர். 23 பந்துகளில் 23 ரன்கள்தான் அடிக்கவேண்டும். ஆனால், வெஸ்ட் இண்டீஸின் இன்னொரு சுமார் பெளலரான கெஸ்ரக் வில்லியம்ஸ் பந்துவீச்சில் அவுட் ஆனார் தோனி. 114 பந்துகளில் 54 ரன்கள். இதில் 70 பந்துகளில் தோனி ரன் எதுவும் அடிக்கவேயில்லை. 2000-களுக்குப்பிறகு இந்திய பேட்ஸ்மேன் ஒருவர் அதிகப் பந்துகளை சந்தித்து மிகப்பொறுமையாக அடித்த அரைசதம் இதுதான். 2005-ல் அப்போது தோனி போலவே ஃபார்ம் இல்லாமல் திணறிக்கொண்டிருந்த முன்னாள் கேப்டன் கங்குலிதான் 105 பந்துகளில் 50 ரன்கள் அடித்து முன்னர் சாதித்திருந்தவர். கங்குலியின் சாதனையை ஆன்டிகுவாவில் முறியடித்தார் தோனி. வெற்றிபெற்றிருக்கவேண்டிய மேட்சில் இந்தியா தோற்றது.

இந்தப் போட்டியோடு அந்த ஸ்ட்ரைக் ரேட் பிரச்னை தீரவில்லை. அடுத்தடுத்த தொடர்களிலும் இது தொடர்ந்த்aதுதான் தோனியின் மீதான வெறுப்பை சிலரிடம் அதிகரிக்கச் செய்தது.

டாட்பால் ப்ரஷர்!

Dhoni
2018-ம் ஆண்டு மட்டும் 20 ஒருநாள் போட்டிகளில் விளையாடினார் தோனி. அதில் 13 இன்னிங்ஸ்களில் பேட்டிங் ஆடினார். ஆனால், அடித்தது 275 ரன்கள்தான். டாப் ஸ்கோரே 42 ரன்கள்தான்.

உலகக்கோப்பை தொடங்குவதற்கு முன்பு ஆஸ்திரேலியாவுடன் ஐந்து ஒருநாள் போட்டிகளில் விளையாடியது இந்திய அணி. அதில் முதல் மூன்று ஒருநாள் போட்டிகளில் தோனி விளையாடினார். முதல் இரண்டு போட்டிகளை இந்தியா வென்றிருந்தது. மூன்றாவது போட்டி தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் நடந்தது. இந்தியா, இந்தப் போட்டியோடு 3-0 எனத்தொடரைக் கைப்பற்றியிருக்கவேண்டும். ஆனால், தோனியின் பாசிட்டிவிட்டி இல்லாத ஆட்டம் இந்தியாவை அன்று தோல்வியைத் தழுவ வைத்தது. அதுவும் கோலி சதம் அடித்தும் தோல்வியில் முடிந்தது.

Also Read: தோனி இந்திய அணிக்குள் எப்படி வந்தார், அவரைக் கொண்டுவந்தது யார்?! #Dhoni

முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 313 ரன்கள் அடித்தது. சேஸிங்கில் இந்தியாவின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தவான், ரோஹித், ராயுடு என மூவருமே குறைந்த ரன்களுக்கு அவுட் ஆக, ஆட்டத்தின் 7–வது ஓவரிலேயே க்ரீஸூக்கு வந்துவிட்டார் தோனி. ஒருபக்கம் பயங்கர பாசிட்டிவாக கோலி ஆட, இன்னொரு பக்கம் டாட் பால்களின் எண்ணிக்கையை அதிகரித்துக்கொண்டே போனார் தோனி. முதல் ரன்னை அடிப்பதற்கே அவருக்கு 7 பந்துகள் தேவைப்பட்டன. தொடர்ந்து டாட் பால்களின் எண்ணிக்கை அதிகமானது. ஓவருக்கு 7 ரன்களுக்கு மேல் தேவை என்கிற நிலையில் மொத்த ப்ரஷரும் கோலியின் மீது விழ, கோலி கவனம் இழக்க ஆரம்பித்தார். இந்தப் போட்டியில் மட்டும், தான் சந்தித்த 42 பந்துகளில் 27 பந்துகளை டாட் பால்களாக்கினார் தோனி. 7–வது ஓவரில் க்ரீஸூக்கு வந்தவர் 20–வது ஓவர் வரை இருந்தார். ஆனால், அடித்தது 26 ரன்கள் மட்டுமே.

Dhoni

இந்த இன்னிங்ஸ் மட்டுமல்ல, 2019-ன் தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவின் சிட்னியில் நடந்த ஒருநாள் போட்டியிலும் இதே போன்றதொரு ஆட்டம்தான் ஆடினார் தோனி. அன்று அவர் அடித்தது 96 பந்துகளில் 51 ரன்கள்.

ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்யாமல் தன்னுடைய இன்னிங்ஸை பில்ட் செய்யவே அதிகப்பந்துகளை எடுத்துக்கொள்ள ஆரம்பித்ததில்தான் தோனியின் சரிவு தொடங்கியது. டாட் பால்களின் எண்ணிக்கையை அதிகரித்துவிட்டு கடைசியில் அடித்து ஆடவேண்டிய கட்டம் வந்தபோது அவுட் ஆகி வெளியேற ஆரம்பித்தார் தோனி. அவர் கடைசியாக விளையாடிய பல போட்டிகளின் மேட்ச் ரிப்போர்ட் இதுதான்.

ரவி சாஸ்திரியின் ராஜதந்திரங்கள்!

2019 உலகக்கோப்பையிலும் தோனியின் இந்த 'ஃபார்ம்' தொடர்ந்ததுதான் சோகம். ஆப்கானிஸ்தானுக்கு எதிரானப் போட்டியில் 52 பந்துகளில் 28 ரன்கள் அடித்து தன் மேல் இருந்த நம்பிக்கையை தகர்க்கத் தொடங்கினார் தோனி. இந்தப்போட்டியில் இந்தியா தோற்றுவிடுமோ என்கிற அளவுக்குப் பதற்றத்தைக் கூட்டிவிட்டுப் போனார். தோனியின் இந்த இன்னிங்ஸ் ரவி சாஸ்திரியை வேறு மாதிரி யோசிக்கவைக்க, அது இந்தியாவின் உலகக்கோப்பை கனவையே சிதைத்தது.

Ravi Shastri

நியூஸிலாந்துக்கு எதிரான அந்த அரையிறுதிப்போட்டியில் தோனியின் பேட்டிங் ஆர்டரையே சாஸ்திரி மாற்றி, தோனியின் வாழ்க்கையில் விளையாடினார். ராகுல், ரோஹித், கோலி என மூவருமே ஒற்றை ரன்னில் ஆட்டம் இழந்து வெளியேறியபோது அணியின் சூப்பர் சீனியரான தோனியை களத்தில் இறக்கியிருக்கவேண்டிய பயிற்சியாளர் சாஸ்திரி, ஜூனியர்களை இறக்கி தன்னுடைய ராஜதந்திரங்களைக் காட்டினார். பன்ட், கார்த்திக், பாண்டியா என அடுத்தடுத்து வந்தவர்கள் எல்லாம் அவுட் ஆக கோலியே ஒருகட்டத்தில் தோனியின் பேட்டிங் பொசிஷன் பற்றி சாஸ்திரியிடம் விவாதம் செய்யும் அளவுக்குப்போனது. 7-வது பேட்ஸ்மேனாக களத்துக்கு வந்து 50 ரன்கள் அடித்து நம்பிக்கைக் கொடுத்தாலும், ரன்ரேட் எகிறிக்கொண்டே போனதில் பிரஷர் ஏறிப்போனது. இருந்தாலும் தோனி களத்தில் இருப்பதால் வெற்றி நிச்சயம் என நினைத்தபோது அந்த ரன் அவுட் தோனியின் கரியரையே முடிவுக்குக் கொண்டுவந்தது. ஒருநாள் போட்டிகளில் டக் அவுட்டோடு தொடங்கியவரின் பயணம் 50 ரன்களோடு முடிந்தது.

ரபாடா தொடங்கிவைத்ததை ரவி சாஸ்திரி முடித்துவைத்தார்!


source https://sports.vikatan.com/cricket/how-dhonis-midas-touch-changed

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக