Ad

புதன், 5 ஆகஸ்ட், 2020

`வாழ்விழந்து போன காஷ்மீர் தெருக்கள்!' - பிரிவு 370 ரத்து செய்யப்பட்டு ஓர் ஆண்டு நிறைவு #Article370

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த பிரிவு 370, மத்திய பா.ஜ.க அரசால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி அதிரடியாக நீக்கப்பட்டது. அதன் பிறகு, ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக ஜம்மு - காஷ்மீர் மாற்றப்பட்டது. இந்த நடவடிக்கைக்காக ஜம்மு - காஷ்மீர் முழுவதும் ராணுவம் குவிக்கப்பட்டு, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தொலைபேசி இணைப்புகள் மற்றும் இணையதள சேவைகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டன. முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோரும் பிற அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் தலைவர்களும் வீட்டுச் சிறைகளில் அடைக்கப்பட்டனர். பரூக் அப்துல்லாவும் ஒமர் அப்துல்லாவும் விடுதலை செய்யப்பட்டுவிட்டாலும், மெகபூபா முப்தி இன்னும் வீட்டுச்சிறையில்தான் இருக்கிறார். ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டபோதிலும், இன்னும் அங்கு முழு இயல்பு நிலை திரும்பவில்லை.

காஷ்மீர்

பிரிவு 370 ரத்து செய்யப்பட்டு இன்றுடன் (ஆக. 5) ஓராண்டு நிறைவடைகிறது. இதையொட்டி, ஆகஸ்ட் 5-ம் தேதியை கறுப்புதினமாக அனுசரிக்க பிரிவினைவாத அமைப்புகள் திட்டமிட்டுள்ளதாகவும், அதனால் வன்முறை சம்பவங்கள் நிகழலாம் என்றும் ஜம்மு காஷ்மீர் நிர்வாகத்துக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. அதையடுத்து, இரண்டு நாள்களுக்கு அங்கு 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜம்மு - காஷ்மீர் முழுவதும் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது. சாலைகளில் ஆங்காங்கே முள்கம்பி தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது. சாலைகளில் வரும் வாகனங்கள் பாதுகாப்புப் படையினரால் திருப்பியனுப்பப்படுகின்றன. ஜம்மு - காஷ்மீர் முழுவதும் மயான அமைதி நிலவிவருகிறது.

சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு

Also Read: பிரிவு 370 விவாதங்களுக்குத் தடை! - வலுக்கும் எதிர்ப்பு

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட அதே நாளில்தான், அயோத்தியில் ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டு விழாவும் நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கப்படும், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவோம் என்பது பல ஆண்டுளாக பாஜ.க-வின் தேர்தல் வாக்குறுதிகளாக இருந்துவந்தன. இந்த இரண்டையும் ஒரே நாளில் நடத்தி முடிக்கிறோம் என்ற ஆனந்தத்தில் பா.ஜ.க-வினர் மூழ்கியுள்ளனர்.

இந்த நேரத்தில், ஜம்மு - காஷ்மீரின் கடந்த கால வரலாற்றைத் திரும்பிப் பார்ப்பது முக்கியம். இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின்போது, `நாங்கள் எந்தப் பக்கமும் சாராமல் இருப்போம்’ என்றார் காஷ்மீர் சமஸ்தானத்தின் மன்னர் ஹரிசிங். மன்னர் ஓர் இந்து என்றாலும், அப்போது காஷ்மீரில் மக்களில் 87 சதவிகிதம் பேர் இஸ்லாமியர்கள். அத்தகைய முரணான சூழலில், இந்தியா-பாகிஸ்தான் போர் நடைபெற்றது. காஷ்மீரைக் காக்க இந்தியாவிடம் முறையிட்ட மன்னர் ஹரிசிங், காஷ்மீரை இந்தியாவுடன் இணைப்பதற்கான ஒப்பந்தத்திற்கு உடன்பட்டார். அதேநேரத்தில் சுயாட்சி, மொழி, கலாசாரம், வாழ்வியல் என அனைத்திலும் காஷ்மீரின் தனித்தன்மை உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று அவர் கோரினார். இதனை ஏற்கும் பொருட்டு காஷ்மீர் தன்னாட்சி உரிமைச் சட்டப் பிரிவு 370 மற்றும் 35 A வழங்கப்பட்டன. இந்த சிறப்பு அந்தஸ்து என்பது, எந்த நாட்டுடன் காஷ்மீர் மக்கள் சேர விரும்புகிறார்கள் என்பது குறித்து அந்த மக்களிடம் பொது வாக்கெடுப்பை நடத்தும் வரைதான் என்று அன்றைய பிரதமர் நேரு கூறினார். ஆனால், பொது வாக்கெடுப்பு நடத்தப்படவே இல்லை.

மோடி

பிரிவு 370 மற்றும் 35 A ஆகிய சலுகைகள் ஜம்மு - காஷ்மீருக்கு வழங்கப்பட்டது, அன்றைய ஜனசங்கம் மற்றும் அதன் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ் இயக்கம் ஆகியவற்றுக்குப் பிடிக்கவில்லை. வடக்கில் ஹிமாச்சல் பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் வடகிழக்கில் சில மாநிலங்கள் தங்கள் தனித்தன்மையைப் பொறுத்து சில தன்னாட்சி உரிமைகளைக் கொண்டுள்ளன. ஆனால், காஷ்மீரிய மக்களின் தேவையை உணராத இந்த இயக்கங்கள், `காஷ்மீர் தன்னாட்சி' உரிமையை, முஸ்லீம்களுக்கான சலுகையாகப் பார்த்தனர்.

புல்வாமா தாக்குதல்

1980-களின் இறுதியில் ஆட்சிக் கலைப்பு, தேர்தல் முறைகேடு போன்ற ஜனநாயக அத்துமீறல்கள் காஷ்மீரில் நடைபெற்றன. அதனால் அதிருப்தியுற்ற ஒரு தலைமுறை ஆயுதப் போராட்டத்திற்கு மாறியது. தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்துவதற்கு ஜம்மு - காஷ்மீர் முழுமைக்குமாக மைய அரசின் அதிகாரத்தை நிறுவுவது, ராணுவத்தைக் குவிப்பது போன்ற நடவடிக்கைகளில் காங்கிரஸ் உள்பட மத்தியில் அமைந்த அரசுகள் செய்துவந்துள்ளன.

2014-ம் ஆண்டு நரேந்திர மோடி பிரதமராக ஆனபோது, அமைதியான வழியில் காஷ்மீர் பிரசனைக்குத் தீர்வு காணப்படும் என்றார். பிரதமர் பதவியேற்பு விழாவிற்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு அழைத்துவிடுத்தார் மோடி. பாகிஸ்தான் பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். 2015-ம் ஆண்டு நவாஸ் ஷெரீப் பிறந்த நாளுக்கு முன்னறிவிப்பின்றி பாகிஸ்தான் சென்று ஆச்சரியப்படுத்தினார் மோடி. 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாகிஸ்தானின் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு `பதான் கோட்' தாக்குதலை நடத்தியது. அந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தான் அரசு உதவியது என்று கருதிய இந்திய அரசு, பாகிஸ்தான் மீது `சர்ஜிக்கல் ஸ்டரைக்' நிகழ்த்தியது. மேலும், 2017-ம் ஆண்டு `Operation All out' என்ற பெயரில் ஆயுதக் குழுக்களைக் களையெடுக்க காஷ்மீர் முழுவதும் போலீஸ் மற்றும் ராணுவப் படைகள் குவிக்கப்பட்டன.

காஷ்மீர்

Also Read: தொடரும் ஊரடங்கு... மிரட்டும் கொரோனா; என்ன செய்யப்போகிறது காஷ்மீர்?

2019-ம் ஆண்டு புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு நிலைமை மேலும் சிக்கலானது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யுமாறு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கோரினார். அதற்கு ட்ரம்ப்பும் ஒப்புக்கொண்டார். ஆனால், காஷ்மீர் இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்சனை என்று இந்திய அரசு கூறிவிட்டது. மேலும், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி பிரிவு 370 மற்றும் 35 A ஆகியவற்றை நீக்கியது. காஷ்மீர் மக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் யாருடனும் ஆலோசனை நடத்தாமல், அவர்களின் கருத்துக்களைக் கேட்காமல் மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கையால், நாடு முழுவதும் எதிர்ப்பலை வீசியது.

ஜம்மு - காஷ்மீர் மக்களின் எதிர்ப்புகளைச் சமாளிக்க இந்திய அரசு தயாராகவே இருந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட தலைவர்கள் சிறை வைக்கப்பட்டனர். அங்கு, வெளிநாட்டு ஊடகங்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. ஆனாலும், `தி நியூயார்க்கர்' இதழின் பத்திரிகையாளரான டெக்ஸ்டர் ஃபில்கின்ஸ் மறைமுகமாக காஷ்மீர் சென்று கள ஆய்வை மேற்கொண்டார். அவர், `ஸ்ரீநகர் விமான நிலையத்திலிருந்து வாகனத்தில் புறப்பட்ட சிறிய தூரம், காஷ்மீரின் நிலையை உணர்த்தியது. சாலையெங்கும் ராணுவ வீரர்கள் சூழ்ந்திருந்தனர். ஆயுத தளவாடங்கள் வரிசையாக குவிக்கப்பட்டிருந்தன. எங்கும் கடைகள் மூடப்பட்டிருந்தன. பழைமைவாய்ந்த `Khanqah-e-Moula' மசூதியில் வெள்ளிக்கிழமைத் தொழுகை தடைப்பட்டிருந்தது. பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. இணைய சேவைகள் முடக்கப்பட்டிருந்தன. ராணுவத்தைத் தவிர, காஷ்மீரின் தெருக்கள் வாழ்விழந்து போயின' என்றார். மேலும், `போலீஸ் மற்றும் ராணுவத்தின் பெல்லட் குண்டுகளால் கண்களை இழந்தவர்களுக்கென காஷ்மீர் மருத்துவமனைகளில் கண் சிகிச்சை சிறப்புப் பிரிவு உள்ளது' எனப் பதிவுசெய்தார்.

மெகபூபா முப்தி, பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா

காஷ்மீரில் எந்தவித அத்துமீறல்களும் நிகழவில்லை என்றும், அங்கு இயல்பு வாழ்க்கை இருக்கிறது என்றும் ஆட்சியாளர்கள் கூறுகிறார்கள். ஆனால், யதார்த்தம் வேறு மாதிரியாக இருப்பதாகவே செய்திகள் அங்கிருந்து செய்திகள் வருகின்றன. `காஷ்மீர் மக்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவதைக் கண்டு மனஉளைச்சல் அடைகிறேன்’ என்று ஐ.ஏ.எஸ் பதவியை ராஜினாமா செய்தார், கண்ணன் கோபிநாதன். காஷ்மீரின் தன்னாட்சி உரிமையை நீக்கியதற்கான முக்கியக் காரணமாக சில காரணங்களை இந்திய அரசு முன்வைக்கிறது. ஊழல், தீவிரவாதம், ரகசிய ஆயுதப் பரிவர்த்தனை போன்றவை காரணங்களாக அரசால் முன்வைக்கப்படுகின்றன. கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு என்று பலவற்றில் பின்தங்கிய மாநிலமாக காஷ்மீர் இருக்கிறது என்பதும் இந்திய அரசின் வாதம். ஆனால், இந்தியாவின் வேறு சில மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, பலவற்றில் காஷ்மீர் முன்னேறிய மாநிலமாக உள்ளது என்பதை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

காஷ்மீரில் வேலைவாய்ப்பின்மையும் ஒரு பிரச்னையாக இருக்கிறது. அரசு வேலை, குடியேற்ற உரிமை, நிலம் பெறுதல் போன்ற விஷயங்களுக்கு வெளி மாநிலத்தவர்களுக்கு அரசு கதவைத் திறந்துவிட்டது. கடந்த டிசம்பர் மாதம் காஷ்மீரில் காலியான 33 அரசுப் பணியிடங்களுக்கு நாடு முழுவதும் அழைப்பு விடுத்தது காஷ்மீர் உயர்நீதிமன்றம். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து காஷ்மீரின் அனைத்துக் கட்சிகளும் போராட்டத்தில் குதித்தன.

காஷ்மீர்

தன்னாட்சி உரிமை நீக்கப்பட்ட பிறகு காஷ்மீர் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியடைந்தது. பொது வாழ்வு மற்றும் இணைய முடக்கம், ஊரடங்கு, பரிவர்த்தனை தட்டுப்பாடு போன்ற காரணங்களால் 2019-ம் ஆண்டு இறுதியில் 178.9 பில்லியன் பொருளாதாரம் இழப்பு ஏற்பட்டது. சுற்றுலா, கைவினை மற்றும் தொழில்நுட்பத் தொழிலாளர்கள் என 90,000 பேர் வேலையிழந்தனர். இந்தியாவின் ஜி.டி.பி-யில் 8 சதவிகிதம் (80 பில்லியன்) பங்களிப்பைச் செலுத்தும் காஷ்மீர் ஆப்பிள் வணிகம், கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவிற்குப் பாதிக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க-வின் அரசியல் கனவு நிறைவேறியிருக்கலாம். ஆனால், துயரம் தோய்ந்த வாழ்க்கையிலிருந்து காஷ்மீர் மக்களுக்கு எப்போது விடிவுகாலம் பிறக்கும் என்ற கேள்விக்கு விடை தெரியவில்லை.



source https://www.vikatan.com/government-and-politics/news/one-year-of-article-370-abrogation-in-jammu-and-kashmir

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக