Ad

சனி, 15 ஆகஸ்ட், 2020

வயதானவர்களை கொரோனா தொடாமல் இருக்க... 9 டிப்ஸ்!

கொரோனா வரும் முன் தங்களைக் காத்துக்கொள்வதுதான் வயதானவர்களுக்கு நல்லது என்கிறார் முதியோர்நல மருத்துவர் வி. என்.நடராஜன். அதற்கான வழிகளையும் இங்கே சொல்கிறார்.

முதியோர் நல மருத்துவர் வி.என்.நடராஜன்

வயதானவர்களை கொரோனா தாக்குவதற்கான காரணங்கள்...

* 60 வயதுக்கு மேல்தான் முதியோர் என்ற நிலைமை, தற்போது பலருக்கும் 50-களிலேயே வந்துவிடுகிறது. நீரிழிவு, ரத்த அழுத்தம், போன்ற பிரச்னைகள் வெகு சீக்கிரமே வந்துவிடுவதுதான் இதற்குக் காரணம். தற்போதைய பேண்டெமிக் சூழ்நிலையில் கொரோனாவால் முதியோர்கள் அதிகம் பாதிக்கப்படுவதற்கும் இந்த இரண்டு பிரச்னைகள்தான் மிக முக்கியமான காரணங்களாக இருக்கின்றன.


* வயதாக ஆக நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடையத் தொடங்கும். அதனால், செல்களால் ஆன்டிபாடியை உருவாக்க முடியாது. தவிர இதய நோய்கள், சிறுநீரக நோய்கள், புற்றுநோய் போன்றவை இருந்தாலும் நோய் எதிர்ப்பு சக்தி குறைய ஆரம்பித்துவிடும். இதற்காக எடுத்துக்கொள்கிற ஸ்டீராய்டு மருந்துகளும் நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைத்துவிடும்.

* வயதானவர்கள் நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற வாழ்வியல் நோய்களின் காரணமாக `இதைத்தான் சாப்பிடணும்', `இதை சாப்பிடவே கூடாது' என்று உணவுக்கட்டுப்பாட்டில் இருப்பார்கள். இதனால் உடலில் சத்துக்குறைபாடு ஏற்படும். இன்னும் குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால், கிராமத்தில் இருக்கிற வயதானவர்களின் உணவு முறையில் சத்துக்குறைபாடு பிரச்னை அதிகமாக இருக்கும். சத்துக்குறைபாடும் கொரோனா எளிதாக அட்டாக் செய்ய வழி வகுத்துவிடும்.


* செயின் ஸ்மோக்கர்களுக்கு, நுரையீரலில் தொற்று இருப்பவர்களுக்கு, ஆஸ்துமா இருப்பவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பு அதிகம். பெண்களைவிட ஆண்களுக்கு கொரோனா தொற்று சுலபமாக ஏற்படுவதற்கு அவர்களுடைய புகைப்பழக்கமும் ஒரு காரணம்.

கொரோனா வைரஸ்

பலவீனமாக உணர்கிறீர்களா?

கொரோனா வந்தால் உடல்வலி, தலைவலி, தொண்டைவலி, இருமல், இதன் பிறகுதான் காய்ச்சல், மூச்சு விடுவதில் சிரமம் என்று பிரச்னை பெரிதாகும். அதனால், தாங்க முடியாத உடல்வலி, உடல் பலவீனம் வந்தவுடனே எச்சரிக்கையாகி, பரிசோதனை செய்துவிடுவது நல்லது. முதல் தடவை எடுத்துக்கொள்கிற பரிசோதனையில் நெகட்டிவ் வந்தாலும், அறிகுறிகள் தொடரும்பட்சத்தில் அல்லது அதிகரிக்கிறபட்சத்தில் ஒரு வாரம் கழித்து மீண்டும் பரிசோதனை செய்துகொள்ளுங்கள்.

வராமல் தடுக்கும் வழிகள்

* `வீட்டிலேயே அடைந்துகிடக்கிறேன்', `போரடிக்கிறது' என்று பக்கத்துத்தெருவில் இருக்கிற கோயிலுக்குப்போவது, நண்பர்களைப் பார்க்கப்போவதெல்லாம் கூடவே கூடாது. `வேற வழியில்ல. இந்த வேலையைச் செய்ய வெளியே போய்த்தான் ஆகணும்' என்ற நிலைமையில் மட்டும் தகுந்த பாதுகாப்புடன் வீட்டுப்படியைத் தாண்டுங்கள்.

* தினமும் அலுவலகத்துக்குச் சென்று வருகிற மகன், மகள், பேரன், பேத்தி என எல்லோரிடமும் குறைந்தபட்சம் இரண்டடி தூரம் விலகியே இருங்கள்.

* உடலில் நீர்ச்சத்து சரியாக இருக்க வேண்டும். இந்த சீஸனில் அடிக்கடி மழை பெய்துகொண்டிருப்பதால் தாகம் எடுக்காது. அதனால், ஒரு மணி நேரத்துக்கு ஒரு டம்ளர் என்ற அளவில் வெந்நீர் குடியுங்கள். இதயம் மற்றும் சிறுநீரகப்பிரச்னை இருப்பவர்கள் மட்டும் மருத்துவரின் ஆலோசனைப்படி நீர் அருந்துங்கள்.

தண்ணீர்

* ஃபிரிட்ஜில் வைத்த உணவுகளைத் தவிருங்கள். பேரன், பேத்திகளுடன் சேர்ந்துகொண்டு ஐஸ்க்ரீம், ஐஸ்கட்டிகள் மிதக்கிற ஜூஸ் என்று சாப்பிடாதீர்கள்.

* தினமும் விதவிதமான காய்கறிகள் சாப்பிட வேண்டும் என்று அவசியமில்லை. ஒரேயொரு காயை மட்டும் ஃபிரெஷ்ஷாக அன்றைக்கு வாங்கி, அன்றைக்கே சமைத்து சாப்பிடுங்கள். இப்படிச் செய்தால், அந்தக் குறிப்பிட்ட காய்கறியில் இருக்கிற அத்தனை சத்துகளும் அப்படியே கிடைக்கும்.

Also Read: ஓப்பன் ஹார்ட் சிரிப்பு, டக் ஆஃப் வார் சிரிப்பு... சிரிப்பு யோகாவின் வகைகளும் பலன்களும்!

* தினமொரு கொய்யா அல்லது நெல்லிக்காய் சாப்பிடுங்கள். ஒரு நாளைக்குத் தேவையான `வைட்டமின் சி' முழுதாகக் கிடைத்துவிடும். நாளொன்றுக்கு ஊறவைத்த இரண்டு பாதாம், மஞ்சள்தூள் சேர்த்த பால் ஆகியவற்றை மறக்காமல் சாப்பிடுங்கள். இவற்றைத் தவிர, பட்டை, கிராம்பு, சீரகம், மிளகு, காளான், முட்டையின் மஞ்சள் கரு ஆகியவையும் உங்கள் உணவில் இருப்பது நல்லது. இதயநோயாளிகள் மட்டும் முட்டையின் மஞ்சள் கரு சாப்பிடுவதைப் பற்றி உங்கள் மருத்துவரிடம் கலந்து ஆலோசித்து விடுங்கள்.

* மூச்சை மெதுவாக உள்ளிழுத்துக்கொண்டே மனதுக்குள் 10 வரை எண்ண வேண்டும். பிறகு மூச்சை மெதுவாக வெளிவிட்டுக்கொண்டே 20 வரை எண்ண வேண்டும். இப்படிச் செய்யும்போது உதரவிதானமானது நன்கு கீழிறங்கி, நுரையீரல் விரிவடைய ஆரம்பிக்கும். இதனால் ஆக்ஸிஜன் அதிகம் கிடைக்கும். இது கொரோனாவை எதிர்க்கும் வலிமையைத் தரும். அதனால், காலையில் 10 முறை, மாலையில் 10 முறை என மேலே சொன்னபடி மூச்சுப்பயிற்சி செய்யுங்கள்.

Corona Vs Fear

* வாக்கிங் போவது, வெளிவாசலுக்குச் செல்வது போன்ற வழக்கமான செயல்பாடுகள் இல்லாமல் வீட்டுக்குள்ளேயே இருப்பதால், தசைகள் இறுக்கமாகிவிடும். இதைத் தவிர்க்க வீட்டுக்குள்ளேயே சின்னச் சின்ன உடற்பயிற்சிகள் செய்யுங்கள். தினமும் காலை, மாலை இரண்டு வேளையும் தலா அரை மணி நேரம் சூரிய ஒளியில் நில்லுங்கள். நிற்க முடியவில்லை என்றால், சூரிய ஒளி படுகிற இடத்தில் சிறிதுநேரம் உட்கார்ந்திருங்கள்.

* பயம் கூடவே கூடாது. தொலைக்காட்சியில் கொரோனா தொடர்பான அச்சம் தரும் செய்திகளைப் பார்ப்பதைத் தவிருங்கள். கொரோனா மரணங்களைப் பார்க்கும்போது பயம் வந்துவிடும். பயம் வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துவிடும், கவனம்.



source https://www.vikatan.com/health/healthy/9-precaution-tips-for-older-people-to-prevent-coronavirus-infection

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக