Ad

சனி, 15 ஆகஸ்ட், 2020

சென்னை: `திருட்டு வழக்கில் மகன் கைது!' - அவமானத்தில் தந்தை எடுத்த விபரீத முடிவு

செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி, டாக்டர் அம்பேத்கர் நகர், துளுக்கானத்தம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் குமார் (48). இவர் ஊரப்பாக்கத்தில் தனியார் நிறுவனத்தில் வேலைப்பார்த்து வந்தார். இவருக்கு கார்த்திக்கேயன் (27), நீலகண்டன் (24) என 2 மகன்கள். இந்தநிலையில் சம்பவத்தன்று வேலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய குமார், சாப்பிட்டுவிட்டு தூங்குவதற்காக மாடிக்குச் சென்றார்.

Also Read: சென்னை: `குடும்ப வாழ்க்கை; உடல் ஆரோக்கியமின்மை' - திருமணமான 2 மாதத்தில் பட்டதாரிப் பெண் தற்கொலை

தற்கொலை

சிறிது நேரத்தில் கார்த்திக்கேயன் மாடிக்குச் சென்றுள்ளார். அப்போது குமார், தூக்கில் தொங்கியிருந்ததைப் பார்த்து கார்த்திக்கேயன் அதிர்ச்சியடைந்தார். பின்னர் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உதவியோடு குமாரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், குமார் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து கூடுவாஞ்சேரி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார் குமாரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் குமாரின் மரணம் குறித்து போலீஸார் விசாரித்தனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``குமாரின் 2-வது மகன் நீலகண்டனை கடந்த 11-ம் தேதி திருட்டு வழக்கில் சோமமங்கலம் போலீஸார் கைது செய்துள்ளனர்.

எப்ஐஆர்

இந்தத் தகவலை கேள்விபட்ட குமார் அவமானம் அடைந்துள்ளார். அதனால் மனவிரக்தியடைந்த அவர், தற்கொலை செய்துள்ளார்" என்றனர்.

குமாரின் மூத்த மகன் கார்த்திக்கேயன் கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில், `என்னுடைய தம்பி நீலகண்டன், 11-ம் தேதி ஒரு திருட்டு வழக்கு சம்மந்தமாக சோமமங்கலம் ஸ்டேஷனில் தனது நண்பர்களுடன் சேர்ந்து மாட்டிக்கொண்டார். அதை கேள்விபட்ட அப்பா குமார் விசாரித்தார். பின்னர் மாடிக்குச் சென்ற அவர், நைலான் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்' என்று குறிப்பிட்டுள்ளார்.

திருட்டு வழக்கில் மகன் கைது செய்யப்பட்டதால் அவமானத்தில் தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



source https://www.vikatan.com/news/crime/father-commits-suicide-in-guduvanchery-after-son-got-arrested-in-theft-case

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக