Ad

சனி, 15 ஆகஸ்ட், 2020

கோவிட்-19: இந்தியா தவிர பிற நாடுகளில் பாதிப்பு குறைகிறதா?

முதல்முறையாக சீனாவில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து குறைந்தது. அதைத் தொடர்ந்து ஐரோப்பிய கண்டத்திலுள்ள நாடுகளில் பாதிப்பு அதிகரித்து குறைந்தது.

அதைத் தொடர்ந்து தற்போது இந்தியாவுடன் போட்டியில் நிற்கும் அமெரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளில் பாதிப்பின் தீவிரம் குறையத் தொடங்கியிருக்கிறது. அதாவது, இந்த இரண்டு நாடுகளிலும் நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த சில நாள்களாக அதிகரிக்காமல் ஒரே சராசரியில் இருக்கிறது. அதன் காரணமாக மூன்றாவது முறையாக நோயின் தாக்கம் குறையத் தொடங்கியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரை நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் தாக்கம் குறையும் நிலையில் இல்லை என்ற கருத்து முன் வைக்கப்படுகிறது.

இது தொடர்பாகத் தொற்றுநோய் மருத்துவர் அஷ்வின் கருப்பனிடம் பேசினோம்:

``பல்வேறு நாடுகளில் நோயின் தாக்கம் என்பது நிலையான இடத்துக்கு (stabilize) வந்துவிட்டது. கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டு மீண்டவர்களுக்கு உருவாகும் எதிர்ப்பு சக்தி 72 நாள்களுக்குப் பிறகு குறைகிறது. அதனால் மீண்டும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என்ற கருத்து உள்ளதே தவிர அது ஆய்வுபூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. அதனால் பிற நாடுகளில் இரண்டாவது அலை என்பது இதுவரை வரவில்லை. சீனாவில்கூட இரண்டாவது அலை வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறதே தவிர, இதுவரை வரவில்லை.

இந்தியாவில் பரிசோதனைகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளதால் நோயாளிகளின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகமாகவே செய்கிறது. சீக்கிரம் நோயைக் கண்டறிந்து, நோயாளியைத் தனிமைப்படுத்துவதன் மூலம்தான் நோயைக் கட்டுப்படுத்த முடியும் என்பது உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தல். இந்த உத்தியைக் கையாண்டதால்தான் சீனாவில் நோய் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

இந்தியாவில் நோய்ப் பரவல் சற்று தாமதமாகத் தொடங்கியதால் பிற உலக நாடுகளிலிருந்து அதிகமான தரவுகள் நமக்குக் கிடைத்துள்ளன. அதைப் பயன்படுத்தி என்ன சிகிச்சை வழங்கலாம், உயிரிழப்புகளைக் குறைக்க என்ன செய்ய வேண்டும் என்பன போன்ற விஷயங்களில் தெளிவு கிடைத்தது. அதனால்தான் பிற நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் உயிரிழப்புகள் குறைவாக உள்ளன.

Dr.Ashwin Karupan

இரு கணிப்புகள்!

இந்தியாவைப் பொறுத்தவரை இன்னும் உச்சநிலையை அடையவேயில்லை. உச்சநிலையை அடைந்த பிறகுதான் பாதிப்பு குறையத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நம் நாட்டிலேயே மகாராஷ்டிரா மாநிலம் உச்சநிலைக்குச் சென்றுவிட்டது. அதனால்தான் இறப்பு விகிதம் அதிகமாக இருக்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை இன்னும் உச்சநிலைக்குச் செல்லவில்லை. அதற்கு இன்னும் காலம் இருக்கிறது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

நோபல் பரிசு பெற்ற அறிஞரும் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழக பேராசிரியர் மைக்கேல் லீவிட்டின் கணிப்பு, லீவிட் மாடல் (Levitt Model) என்ற பெயரில் அறியப்படுகிறது. இங்கிலாந்து, இத்தாலியில் பாதிப்பு குறைந்துவிடும். அதன்பிறகு லாக்டௌனைத் தளர்த்தலாம் என்று அவர்தான் கணித்தார். அவரின் கணிப்புப்படி இந்தியா மற்ற நாடுகளைப் போல் உச்சநிலைக்குச் செல்லாது. 6 வாரம் முதல் இரண்டு மாதங்களுக்குள் பாதிப்பு குறையும் என்று கணித்துள்ளார். இருவேறு கணிப்புகளில் எது சரி என்பது நாள்கள் செல்லச் செல்லத்தான் தெரியவரும்" என்கிறார்.

covid-19 spread

இந்தியாவின் நிலை என்பது கவலைக்குரியதாகவே இருக்கிறது. கோவிட்-19 பாதிப்பு மேலும் தீவிரமாகலாம் என்ற கருத்தை முன் வைக்கிறார் மருத்துவ செயற்பாட்டாளர் மருத்துவர் சாந்தி ரவீந்திரநாத்.

``தென்கிழக்கு ஆசிய நாடுகளிலேயே இந்தியாவில்தான் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இலங்கை போன்ற நாடுகள் சிறப்பாகப் பாதிப்பைக் கையாண்டு வருகின்றன. இலங்கையைப் பொறுத்தவரை நோயாளிகளின் எண்ணிக்கை, இறப்பு விகிதம் குறைவாகவே உள்ளது. மருத்துவர்கள் இறப்பு நடைபெறவே இல்லை. பொது சுகாதார கட்டமைப்பு நிலையாக இருக்கும் நாடுகளிலெல்லாம் பாதிப்புகள் சிறப்பாகவே நோயைக் கையாள்கின்றன. இதற்கு சிறந்த உதாரணம் ஸ்பெயின், கனடா, இலங்கை போன்ற நாடுகள். பொது சுகாதார கட்டமைப்பு நிலையாக இல்லாமல் தனியாரின் கைகளில் அது செல்லும்போது நோய் கட்டுப்படுத்துதலில் பாதிப்பு ஏற்படும் என்பதற்கு சிறந்த உதாரணம் அமெரிக்கா என்ற வல்லரசு நாடுதான்.

கோவிட்-19 பரவலானது ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டுக்குப் பரவி, தொடங்கிய இடத்தில் பாதிப்பு குறையும். பொதுவாகவே பெருந்தொற்று நோய்களின் பரவும் முறை (Pattern) இப்படித்தான் இருக்கும். ஒரு நாட்டிலிருந்து நோய் பரவத் தொடங்கி மற்ற நாடுகளுக்குப் பரவும். அதன் பிறகு, தொடங்கிய இடத்தில் சற்று தாக்கம் குறையும். பல நாடுகளுக்குப் பரவி மீண்டும் தொடங்கிய இடத்திலேயே இரண்டாவது அலை ஏற்பட்டு நோய்ப் பரவல் அதிகரிக்கும்.

Dr.Shanthi Ravindranath

இந்தியாவைப் பொறுத்தவரை டெல்லி, மும்பை, சென்னையில் அதிகரித்திருந்த பாதிப்பு குறையத் தொடங்கி பீகார், கர்நாடகா, ஆந்திராவில் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. பிறகு, மீண்டும் தொடங்கிய இடத்திலேயே இரண்டாவது அலை ஏற்படும். பெருந்தொற்றுக் காலத்தில் எதிர்பார்க்கப்படும் இயல்புதான் இந்தப் பரவல் முறை. சிறப்பான நோய்த் தடுப்பு உத்திகளைக் கையாளுதல், தடுப்பூசி கண்டுபிடிப்பு ஆகிய நடவடிக்கைகளின் மூலம் இரண்டாவது அலை ஏற்படாமல் தடுக்க முடியும். இல்லையென்றால் பாதிப்பு அதிகரிக்கவே செய்யும். தடுப்பூசி கண்டறியப்பட்டுவிட்டால் மனிதன் நோயைச் சமாளிக்க முடியும்.

திசை மாறிய அரசுகள்!

இந்தியாவில் மத்திய, மாநில அரசுகள் கோவிட்-19 என்ற விஷயத்திலிருந்து தங்கள் கவனத்தை திசைத்திருப்பிவிட்டன. மத்திய அரசு இந்தக் காலகட்டத்தைப் பயன்படுத்தி தன் கொள்கைகளை மக்கள் மீது திணித்து வருகிறது. தமிழக அரசு கொரோனா பணிகளை விடுத்து அடுத்த முதல்வர் வேட்பாளர் யார், மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்கான வழிமுறைகள் என்ன என்பதில் கவனம் செலுத்தி வருகிறது. இதுபோன்ற அலட்சியம் நோய்ப் பரவலை அதிகரிக்கவே செய்யும்.

covid-19 spread

Also Read: `ரஷ்யாவின் கோவிட்-19 தடுப்பூசி முட்டாள்தனமான செயல்!’ - எதிர்க்கும் உலக விஞ்ஞானிகள்

நோயைக் கட்டுப்படுத்துவதற்கான அறிவியல்பூர்வமான உத்திகள் தற்போது கையாளப்படுவதில்லை. புதிய நோயாளிகளின் எண்ணிக்கையில் உலகிலேயே முதலிடத்தில் இருந்துகொண்டும் இன்னும் நோய் கட்டுபாட்டுக்குள் உள்ளது என்று சொல்வதையெல்லாம் ஏற்க முடியாது" என்கிறார்.

ஆக்கபூர்வமான நடவடிக்கைகளின் மூலம் கணிப்புகளைப் பொய்யாக்க முடியும். இதை உணர்ந்து அரசுகள் கோவிட்-19 தடுப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி பாதிப்பு தீவிரமாகாமல் தடுக்க வேண்டும்.



source https://www.vikatan.com/government-and-politics/healthy/will-indias-covid-19-cases-decrease-soon-what-experts-says

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக