Ad

சனி, 15 ஆகஸ்ட், 2020

திருவாரூர்: `கமலா ஹாரிஸ் ஜெயிச்சிடணும்னு வேண்டிகிட்டு இருக்கோம்!’ - பூர்வீக ஊர் மக்களின் பெருமிதம்

அமெரிக்க துணை அதிபர் வேட்பாளராக, ஜனநாயக கட்சியைச்சேர்ந்த கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்டுள்ளார். இவரது தாய்வழித் தாத்தா, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள பைங்காநாடு துளசேந்திரபுரத்தை பூர்வீகமாக கொண்டவர். இதனால் இப்பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார்கள். கமலா ஹாரிஸ் வெற்றிப்பெற ஆங்காங்கே வாழ்த்து பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. தங்களது ஊரை பூர்வீகமாக கொண்ட ஒருவர் அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார் என்றால் இங்குள்ள மக்களின் உணர்வுகள் என்னவாக இருக்கும்?

குலத்தெய்வ கோயில்

அமெரிக்க அதிபர் மற்றும் துணை அதிபருக்கான தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. ஜனநாயக கட்சியின் சார்பில் துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். இவரது தாய்வழி தாத்தா கோபாலன், மன்னார்குடி அருகில் உள்ள பைங்காநாடு கிராமத்தைச் சேர்ந்தவர் என்ற தகவல் வெளியானதில் இருந்து இப்பகுதி மக்கள் மிகுந்த பெருமித உணர்விலும் நெகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளார்கள். இப்பகுதியைச் சேர்ந்த மலர்வேந்தனிடம் பேசியபோது, ``ரொம்ப சந்தோஷமா இருக்கு. கமலா ஹாரிஸோட குலத் தெய்வ கோயில் எங்க ஊர்ல இருக்கு. இவங்களோட சித்தி சரளா கோபாலன் சென்னையில் பிரபல டாக்டர். குலத்தெய்வ கோயிலான ஸ்ரீதர்மசாஸ்தா ஸ்ரீசேவகப்பெருமாள் கோயில் கும்பாபிஷேகத்துக்கு நன்கொடை வழங்கியிருக்காங்க.

ஊர்க்காரர் மலர்வேந்தன்

இந்த கோயிலில் கொண்டாடப்படும் வைகாசி விசாக விழாவுக்கு, கமலா ஹாரிஸோட சித்தி இங்க வருவாங்க. கமலா ஹாரிஸோட தாய் வழித்தாத்தா கோபாலன் ஆங்கிலேய ஆட்சிக்காலத்துல அரசு உயரதிகாரியாக வேலைப்பார்த்தார். ரொம்ப வருசத்துக்கு முன்னாடியே அமெரிக்காவுல போயி செட்டில் ஆகிட்டார். இப்ப கமலா ஹாரிஸோட உறவினர்கள் யாரும் எங்க ஊர்ல வசிக்கலை. அவரோட தாத்தா கோபாலன் வாழ்ந்த வீடு, பல பேர் கைமாறிடுச்சி. இப்ப அந்த வீடும் இல்லை. காலிமனையாக கிடக்கு.

கோபாலனோட தம்பி மகன் சூரியமூர்த்தி, அதாவது கமலா ஹாரிசோட ஒண்ணுவிட்ட மாமா சூரியமூர்த்தி, மன்னார்குடி நேஷனல் ஸ்கூல்ல ஆசிரியராக வேலைப்பார்த்தார். அவரோட குடும்பமும் பல ஆண்டுகளுக்கு முன்னாடியே சென்னை போயி செட்டில் ஆயிட்டாங்க.

வாழ்த்து பேனர்

ஆனாலும் கூட, எங்க ஊரை பூர்வீகமாக கொண்ட ஒரு பெண், அமெரிக்க துணை ஜனாதிபதி வேட்பாளருக்கு போட்டியிடுறாங்கனு நினைக்குறப்ப ரொம்பவே பெருமையா இருக்கு. அவங்க தேர்தல் நின்னு ஜெயிச்சிடணும்னு எங்க ஊர் மக்கள் எல்லாருமே கடவுள்க்கிட்ட பிராத்தனை பண்ணிக்கிட்டு இருக்கோம்” என நெகிழ்ச்சியோடு தெரிவித்தார்.



source https://www.vikatan.com/news/general-news/the-us-vp-candidate-kamala-hariss-grand-fathers-village-people-prays-for-her-victory

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக