கொரோனா வைரஸ் காரணமாக வெளிநாட்டு விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில், வந்தே பாரத் திட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் தவித்து வரும் இந்தியர்கள் தாயகத்துக்கு அழைத்து வரப்படுகின்றனர். அதன்படி, துபாயில் இருந்து கோவை வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
Also Read: சென்னை: `திருட்டு வழக்கில் மகன் கைது!' - அவமானத்தில் தந்தை எடுத்த விபரீத முடிவு
அதன் அடிப்படையில், கோவை வந்த பயணிகளிடம் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திருப்பூர் மாவட்டம், பல்லடத்தை சேர்ந்த ஓர் தம்பதியினரின் நடவடிக்கையில் அதிகாரிகள் சந்தேகம் அடைந்தனர்.
அவர்களது உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்தபோது எதுவும் கிடைக்கவில்லை. இதையடுத்து, இருவரையும் தனியறையில் வைத்து சோதனை செய்தனர். அப்போது உள்ளாடைகளில் 6 பாக்கெட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. `Paste form’ என்ற முறையில் தங்கத்தை பொடியாக்கி கெமிக்கல்கள் உடன் கலந்து, உள்ளாடையில் தைத்து எடுத்து வந்ததும் தெரியவந்தது.
Paste form முறையில் கடத்தினால், அவற்றை பரிசோதனை கருவிகளால் கண்டுபிடிக்க முடியாது. இதைத்தொடர்ந்து, அந்தத் தம்பதியினரிடம் இருந்து 1.15 கோடி ரூபாய் மதிப்புள்ள, 2 ஆயிரத்து 163 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து, அந்தத் தம்பதியினரிடம் விசாரணை நடத்தியதில், அவர்கள் கடந்த மார்ச் மாதம் அரபு நாடுகளுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். கொரோனா தாக்கத்தால் கையில் இருந்த பணம் செலவாகிய நிலையில் சொந்த ஊருக்கு திரும்பி முடியாமல் தவித்துள்ளனர். அப்போது ஒரு கும்பல் தம்பதியினருக்கு உதவி செய்வதாக சொல்லி தங்கம் கடத்தி வரச் சொல்லியுள்ளனர். வேறு வழியில்லாமல் அந்தத் தம்பதியினரும் அதை நம்பி தங்கத்தை கடத்தியுள்ளனர்.
அவர்கள் இருவரையும் கைது செய்த வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள், இந்தக் கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை விமான நிலையத்தில் Paste form வடிவில் தங்கம் கடத்தப்பட்டது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
source https://www.vikatan.com/news/crime/two-arrested-in-coimbatore-for-gold-smuggling
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக