கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதியன்று, வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்புப் பணிகள் ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அந்தக் கூட்டம் முடிந்த பிறகு அவர் அளித்த பேட்டியில், ``பத்திரிகையாளர்களுக்கு, கொரோனா நலத்திட்ட உதவிகள் அதிகம் அளிக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. ஆனால், நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசிடம் இது குறித்து எடுத்துரைத்திருக்கிறோம். மத்திய அரசு நிதி வழங்கும் என எதிர்பார்க்கிறோம். கொரோனா நோயாளிகளுக்கு உணவு அளிப்பதற்காக மட்டும் தினமும் 20 கோடி முதல் 25 கோடி ரூபாய் வரை செலவழிக்கப்படுகிறது" என்று பேசியிருந்தார்.
முதல்வர், `கொரோனா நோயாளிகளின் ஒருநாள் உணவுக்காக 25 கோடி ரூபாய் வரை செலவழிக்கப்படுகிறது' என்று பேசியது சர்ச்சையையும் பல விவாதங்களையும் கிளப்பியுள்ளது.
தமிழகத்தில் 24.08.2020 வரை சிகிச்சை பெற்றுவரும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 53,282. இதில் குறைந்தது 5,000 பேராவது தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருவார்கள். இன்னும் சிலர் வீட்டிலேயே தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். முதலமைச்சர் சொன்ன 25 கோடி ரூபாய் உணவுச் செலவு என்பது அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கு மட்டும்தான் பொருந்தும். இருந்தாலும், 53,282 பேரையும் கணக்கில் எடுத்துக்கொள்வோம். 25 கோடி ரூபாயை 53,282 நோயாளிகளைக் கொண்டு வகுத்தால், நமக்குக் கிடைப்பது 4,692 ரூபாய். அதாவது முதல்வரின் கணக்குப்படி பார்த்தால், ஒரு நோயாளிக்கு நாளொன்றுக்கு 4,692 ரூபாய் உணவுக்காக மட்டும் செலவிடப்படுகிறது. தனியார் மருத்துவமனைகள் மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்திக்கொண்ட நோயாளிகளை விட்டுவிட்டு, அரசு மருத்துவமனை மற்றும் அரசு முகாம்களில் சிகிச்சை பெறுபவர்களை மட்டும் கணக்கில் கொண்டால் 5,500 ரூபாயைத் தாண்டும்.
`கொடுக்குறது என்னமோ இட்லியும் சாம்பார் சாதமும்தான். இதுக்கு எதுக்குப்பா 25 கோடி ரூபாய்?’, `சிகிச்சை நேரத்தில் அம்மா சாப்பிட்ட இட்லிக்கு அப்போலோ போட்ட விலைதான் ஞாபகத்துக்கு வருது’ என்பது போன்ற பதிவுகளைத் தட்டி நெட்டிசன்கள் முதல்வரின் உணவுக் கணக்கைக் கலாய்த்துவருகின்றனர்.
முத்தரசன் அறிக்கை!
இந்தநிலையில் இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் முத்தரசன் இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் ,``கொரோனாநோய்த் தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்குக் கொடுக்கப்படும் உணவு தயாரிக்க, தினசரி ரூபாய் 25 கோடி வரை செலவாகிறது’ என முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார். கொரோனா நோய்த்தொற்றில் பாதித்து சிகிச்சை பெற்றுவருபவர்களிடம், குறிப்பாக, சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களிடம் கேட்டறிந்த வகையில் முதல்வரின் கணக்கின்மீது ஆழ்ந்த சந்தேகம் எழுகிறது.
Also Read: Sunday Lockdown: `டாஸ்மாக் விற்பனை', `அதிகாரிகளுக்கு ஓய்வு' - ஒரு நாள் முழு ஊரடங்கால் என்ன நன்மை?
கொரோனாநோய்த் தொற்றுப் பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சை நடவடிக்கையில் நிதித் தவறுகளும், ஊழலும் நடைபெறுவதாகப் புகார்களும் எழுந்துள்ளன. இந்தச் சூழ்நிலையில் கொரோனா நோய் சிகிச்சை பெறுவோருக்கு வழங்கப்படும் உணவு விவரங்கள், அதன் விலை மதிப்பு ஆகியவற்றைத் தெளிவாகப் பட்டியலிட்டு பொதுமக்களுக்கு விளக்க வேண்டும’ எனக் குறிப்பிட்டிருந்தார்.
உண்மை என்ன?
சென்னையிலுள்ள அரசு மருத்துவமனை மற்றும் அரசு கொரோனா சிகிச்சை முகாம்களில் என்ன உணவு வழங்கப்படுகிறது, உணவுக்காக மட்டும் அரசு நாளொன்றுக்கு எவ்வளவு செலவிடுகிறது என்பது குறித்துத் தெரிந்துகொள்ள, சென்னை மாநகராட்சி அதிகாரிகளிடம் பேசினோம்...
மாநகராட்சி அதிகாரிகள் சொன்னபடி உணவுகள் வழங்கப்படுகின்றனவா என்று தெரிந்துகொள்ள, சென்னை கொரோனா சிகிச்சை முகாமில் சிகிச்சை பெற்று குணமடைந்த ஒருவரிடம் பேசினோம், ``அதிகாலை மற்றும் மாலை வேளைகளில் கபசுரக் குடிநீர் மற்றும் டீ வழங்கப்பட்டன. இவை இரண்டுமே டீ கேனில் கொண்டு வரப்பட்டு பேப்பர் கப்பில் கொடுக்கப்பட்டன. காலையில் பெரும்பாலும் இட்லி அல்லது பொங்கல் வழங்கப்பட்டது. அதோடு சிறிய தோசை ஒன்றுமிருக்கும். சில நாள்கள் மட்டும் சிறிய தோசையோடு பூரி வழங்கப்பட்டது. 11 மணிக்கு ஆரஞ்சுப் பழம் ஒன்றும், வாழைப்பழம் ஒன்றும் வழங்கப்பட்டன. மதியம் சாதம், முட்டை, சாம்பார், ரசம் ஏதாவது ஒரு காய்கறி வழங்கப்பட்டது. இரவு இட்லி, கிச்சடி, சிறிய தோசை ஆகியவை வழங்கப்பட்டன. மாலை சுண்டல் வழங்கப்பட்டது. இவற்றோடு இரண்டு வேளை மினரல் வாட்டர் பாட்டில்கள் கொடுக்கப்பட்டன. உணவுகள் அனைத்தும் வெள்ளை நிற பிளாஸ்டிக் காம்போ பாக்ஸில் வழங்கப்பட்டன. உணவு, சாப்பிடும் அளவுக்கு நன்றாகவே இருந்தது" என்று கூறினார்.
உணவு வழங்கியவர் பிபிஇ கிட் அணிந்திருந்தாரா என்ற கேள்வியை அவரிடம் முன்வைத்தோம், ``அணிந்திருந்தார்கள். ஆனால், அது மருத்துவர்கள் அணிந்திருந்ததுபோல நல்ல குவாலிட்டி பிபிஇ கிட் இல்லை" என்றார். அவர் அடிக்கடி வெளியூர்களுக்குச் சென்று நிறைய உணவகங்களில் சாப்பிடும் பழக்கம்கொண்டவர் என்பதால், `மூன்று வேளை சாப்பாடு மற்றும் பழம், டீ யைச் சேர்த்து உங்களுக்குக் கொடுக்கப்பட்ட உணவு என்ன விலை இருக்கும்?' என்று கேட்டோம், ``அதிகபட்சம் 450-500 வரை இருக்கும்'' என்றார்.
சென்னை மாநகராட்சியைச் சேர்ந்த அதிகாரிகள் `நாளொன்றுக்கு ஒரு நபருக்கு 3,500 ரூபாய் வரை செலவு செய்கிறோம்’ என்கிறார்கள். ஆனால், சென்னை அரசு முகாமில் சிகிச்சை பெற்ற ஒருவர் அங்கு வழங்கப்படும் உணவு வகைகள் அனைத்துக்கும் சேர்த்து அதிகபட்சமாக 500 ரூபாய்தான் ஆகும் என்கிறார். இந்த 500 ரூபாயோடு மாநகராட்சித் தரப்பில் சொல்லப்படும் உணவைக் கொண்டு வந்து கொடுக்கும் செலவு, கொண்டு வருவோருக்கான சம்பளம், அவர்களுக்கான பிபிஇ கிட் என எல்லாவற்றையும் சேர்த்தால்கூட ஒரு ஆளுக்கு 3,000 ரூபாய் செலவு செய்யப்படுகிறதா என்ற கேள்வி நமக்குள் எழுகிறது. அந்த முகாமிலிருந்த 3,000 பேருக்கும் சேர்த்து ஒரே வாகனத்தில்தான் உணவு வந்திருக்கிறது. 7, 8 நபர்கள்தான் அதைக் கொண்டு வந்து கொடுத்திருக்கிறார்கள். இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது நிச்சயம் ஒரு நபருக்கு 3,500 ருபாய் வரை செலவு செய்திருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.
Also Read: `சளி, காய்ச்சல், மூச்சுத்திணறல்...'- மருத்துவச் சிகிச்சையில் நல்லகண்ணு
சென்னை மாநகராட்சியைப் பொறுத்தவரை, கொரோனா வைரஸ் பாதிப்பால் 24.08.2020 வரை 13,255 பேர் சிகிச்சை பெற்றுவருகிறார்கள். சிகிச்சை பெற்றுவரும் 13,255 பேரில் தனியார் மருத்துவமனை மற்றும் அவரவர் வீடுகளில் தனிமைப் படுத்திக்கொண்டவர்களும் அடக்கம். அரசு மருத்துவமனை மற்றும் கொரோனா சிகிச்சை முகாம்களில் சிகிச்சை பெற்றுவரும் நபர்களுக்கு மட்டும்தான் சென்னை மாநகராட்சி சார்பில் உணவு வழங்கப்பட்டுவருகிறது.
சரி, இப்போது தமிழ்நாட்டின் கணக்குக்கு வருவோம்... 24.08.2020 வரை தனியார் மருத்துவமனை மற்றும் வீடுகளில் தனிமைப் படுத்திக்கொண்டவர்கள் உட்பட தமிழகம் முழுவதும் 53,282 நபர்கள் கொரோனா சிகிச்சை பெற்றுவருகிறார்கள். இவர்கள் அனைவருக்கும் அரசுத் தரப்பில் நாளொன்றுக்கு 3,500 ரூபாய் என்று கணக்குவைத்து உணவு வழங்கப்பட்டாலும், 18.64 கோடி ரூபாய்தான் செலவாகும். ஆனால், முதல்வரோ அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு மட்டுமே தினசரி உணவு வழங்க 20 முதல் 25 கோடி ரூபாய் வரை செலவாகிறது என்று சொல்வது சந்தேகத்தைக் கிளப்புகிறது.
சென்னை உள்ளிட்ட சில இடங்களைத் தவிர, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு கொரோனா சிகிச்சை முகாம்களில், `மூன்று வேளை உணவு மற்றும் கபசுரக் குடிநீர் மட்டுமே வழங்கப்படுகிறது. எப்போதாவது டீ அல்லது காபி வழங்கப்படுகிறது' என்ற தகவல்களும் நமக்குப் பரவலாகச் சொல்லப்பட்டன. இதன் உண்மைத்தன்மை குறித்துத் தெரிந்துகொள்ள, தமிழகத்தின் சில ஊர்களிலுள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு முகாம்களில் சிகிச்சை பெற்ற சிலரிடம் பேசினோம். அவர்கள் சொன்ன சில விஷயங்கள் நமக்கு அதிர்ச்சியைத் தந்தன.
சிவகங்கை!
முதலாவதாக, சிவகங்கை அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று குணமடைந்த ஒருவரிடம் பேசினோம், ``சிவகங்கை அரசு மருத்துவமனையில், காலை உணவாக எண்ணெய் வடிய வடியப் பொங்கல் மற்றும் கிச்சடி, சுமாரான இட்லி, தோசை ஆகியவை வாழை இலையில் பார்சல் செய்து வழங்கப்பட்டன. இரவும் பொங்கலைத் தவிர்த்து இதே உணவு வகைகள்தான் மாறி மாறி வழங்கப்பட்டன. மதிய உணவுக்கு முன்னர் தினசரி ஒரு வாழைப்பழம் மட்டும் வழங்கினர். மதிய உணவும் பார்சல் செய்துதான் வழங்கப்பட்டது. ஆனால், வாழை இலையில் அல்ல சில்வர் ஃபாயில் பேப்பரில் மடித்து பார்சல் செய்திருந்தனர். மிகவும் சுமாரான சாம்பார், காய்கறிகளோடு அளவுச் சாப்பாடு வழங்கப்பட்டது. எப்போதாவது ஒரு முறை மட்டும் மதிய உணவில் முட்டை இருக்கும். காலை, மாலை என இரண்டு வேளையும் டீ வழங்கினர். பிளாஸ்டிக் பையில் பார்சல் செய்துதான் டீயும் கொடுக்கப்பட்டது. டீ குடிக்க மெழுகு தடவப்பட்ட பேப்பர் கப் வழங்கப்பட்டது. ஒரு சில நாள்கள் தவிர்த்து மற்ற நாள்களில், காலை வேளையில் மட்டும் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.
இதையெல்லாம் பார்த்துவிட்டு நாங்கள் அங்கிருந்தவர்களிடம் `வெளியில் கடையில் பார்சல் வாங்கி வந்து தருகிறீர்களா?' என்று கேட்டோம். அதற்கு அவர்கள் `இல்லை. மருத்துவமனைக்கு அருகிலுள்ள இடத்தில் ஆள்வைத்து சமைத்து, பார்சல் செய்யப்பட்டுக் கொண்டு வருகிறோம்' என்றார்கள். மூன்று வேளை சாப்பாடு, பழம் மற்றும் டீக்கு மொத்தமாக 200 ரூபாய்கூட செலவு செய்திருக்க மாட்டார்கள்" என்று ஆதங்கத்தோடு கூறினார் அவர்.
உணவு வழங்கியவர்கள் பிபிஇ கிட் அணிந்திருந்தார்களா என்று அவரிடம் கேட்டதற்கு, ``எங்களுக்கு உணவெல்லாம் யாரும் கொண்டு வந்து வழங்கவில்லை. தீவிர கொரோனா சிகிச்சைப் பிரிவுக்கு அருகிலுள்ள ஒரு மேசையில் உணவுப் பொட்டலங்கள் வைக்கப்படும். பின்னர் ஒரு வார்டு பாய் வந்து `உணவு வந்துவிட்டது. போய் எடுத்துக்கொள்ளுங்கள்' என்பார். எங்கள் வார்டில் மொத்தம் 15 பேர் சிகிச்சை பெற்றுவந்தோம். ஒருநாள் இரவு உணவை அந்த மேசையிலிருந்து எடுத்துக்கொள்ள, கடைசியாக நானும் இன்னொருவரும் சென்றோம். ஆனால், அந்த மேஜையில் ஓர் உணவு பொட்டலம்கூடச் இல்லை. அங்கிருந்த வார்டு பாய் ஒருவரிடம், `எங்களுக்கு உணவு இல்லையே...’ என்று கேட்டோம். அதற்கு அவர், `எண்ணி 15 பொட்டலங்கள் வைத்தோமே... யாராவது அதிகமாக எடுத்துச் சென்றிருப்பார்கள். அது யாரென்று கண்டுபிடித்து அவர்களிடமிருந்து வாங்கிக்கொள்ளுங்கள்' என்றார்.
நாங்கள் அங்கு சிகிச்சை பெற்றவர்களிடம் கேட்டதற்கு, `நாங்கள் யாரும் அதிகமாக எடுக்கவில்லை' என்று சொல்லிவிட்டார்கள். மீண்டும் வார்டு பாயிடம் விஷயத்தைச் சொன்னோம். அதற்கு அவர் இரண்டு பிரெட் பாக்கெட்டுகளைக் கொடுத்து `இதுதான் இருக்கு. அட்ஜஸ்ட் பண்ணிச் சாப்பிடுங்கள்' என்று அலட்சியமாகச் சொன்னார். நாங்கள் அவரை முறைத்துப் பார்த்த பிறகு `நாங்களும் இதைத்தான் பாஸ் சாப்பிடுறோம்' என்றார்.
Also Read: தூத்துக்குடியில் வளையாத 144; சேலத்தில் வளைந்தது எப்படி? - அரசியல்வாதிகளின் கொரோனா அலப்பறைகள்!
இதேபோல ஒருநாள் மதிய உணவு தீர்ந்துபோய்விட்டது. அப்போது உணவில்லாத மூன்று பேருக்கு பிரெட்டும் பழமும் வழங்கினர். அவர்களுக்கு வழங்கப்பட்ட பிரெட் துண்டுகள் ஊசிப்போவதற்கான ஆரம்பநிலையிலிருந்தன. `ரொம்ப பழைய பிரெட்' என்று சொல்லி அதையும் அவர்கள் குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டு பட்டினியாகவே இருந்தனர்" என்றார்.
மேலும், ``தண்ணீர் கேன் தீர்ந்துவிட்டால், பல முறை அவர்களிடம் தண்ணீருக்காகக் கெஞ்ச வேண்டியிருக்கும். பல மணி நேரம் கழித்துத்தான் தண்ணீர் கொண்டு வந்து வைப்பார்கள். தண்ணீர் கேன் வைத்த சில நிமிடங்களிலேயே தீர்ந்துபோய்விடும். காரணம், நாங்கள் அனைவரும் பாட்டில்களில் நிரப்பிக்கொண்டுவிடுவோம். அது எங்களுக்கு இரவுவரைகூட போதாது. ஆனால், மீண்டும் அடுத்த நாள்தான் தண்ணீர் வரும் என்பதால், அளவாகத் தண்ணீர் குடித்துக் கொண்டோம். மருத்துவமனையில் சுடுதண்ணீரெல்லாம் கிடைக்கும் என்று நினைத்து வந்த எனக்கு, வெறும் தண்ணீர் கிடைப்பதே பெரும்பாடாய் இருந்தது" என்கிறார் அவர்.
மதுரை
மதுரை தியாகராசர் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த கொரோனா சிகிச்சை முகாமில் சிகிச்சை பெற்ற ஒருவர், ``கொரோனா தொற்று பரவ ஆரம்பித்த காலகட்டத்தில் சிகிச்சை பெற்றவர்களுக்கு அதிகாலையில் மாத்திரை மற்றும் கபசுரக் குடிநீர், காலை உணவாக ஏதாவது ஒரு பலகாரம், 11 மணிக்கு மிளகுப் பால் மற்றும் பொட்டுக்கடலை, மதியம் வெரைட்டி ரைஸ் உடன் ஒரு முட்டை வழகப்பட்டுள்ளது. ஒரு சிலநாள் சிக்கன், இரண்டு முட்டையுடன் சிறப்பு அசைவச் சாப்பாடுகூட வழங்கப்பட்டிருக்கிறது. மாலை ஏதாவது ஒரு பயறு வகை மற்றும் டீயும், இரவு பலகார வகைகளில் ஏதாவது ஒன்றும் வழங்கப்பட்டிருக்கிறது. அந்த உணவுகள் அனைத்தும் நன்றாகவே இருந்தன என்று இங்கே எங்களுக்கு முன் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய சில உறவினர்கள் சொன்னார்கள். ஆனால், கடந்த சில நாள்களுக்கு முன்னர் நான் மதுரை தியாகராசர் கல்லூரியிலுள்ள அரசு கொரோனா முகாமில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டேன். அப்போது எங்களுக்கு வழங்கப்பட்ட உணவு தரமானதாக இல்லை. ஒரு சில நாள் கொடுக்கப்படும் உணவைச் சாப்பிட இயலாமல் கீழேதான் கொட்டினோம்'' என்கிறார் அவர்.
`உணவு சரியில்லை’ என்ற புகார் எழுந்த பின் மாநகராட்சி சார்பில் வழங்கப்படும் உணவைத் தவிர்த்துவிட்டு, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடந்த 51 தினங்களாக உணவு வழங்கிவருகிறாராம். கடைசி கொரோனா தொற்றாளர் சிகிச்சை பெற்று, குணமடையும் வரை உணவு வழங்குவதாக உறுதியளித்திருக்கிறாராம் அமைச்சர்.
பெரியகுளம்
துணை முதல்வரின் சொந்த ஊரான தேனியை அடுத்த பெரியகுளத்திலுள்ள அரசு மருத்துவமனையில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்புவரை மிகச்சிறந்த உணவு வழங்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், `தற்போது உணவு அப்படி இல்லை’ என்கிறார் சமீபத்தில் அங்கு சிகிச்சை பெற்று குணமடைந்த ஒருவர்.
`` எங்களுக்கு மூன்று வேளை உணவு மட்டுமே வழங்கப்பட்டது. முன்பிருந்தவர்களுக்கு வழங்கப்பட்டதுபோலப் பழங்கள், பழச்சாறு, மிளகுப்பால் என எதுவுமே எங்களுக்கு வழங்கப்படவில்லை. காலை கபசுரக் குடிநீர் மட்டும் வழங்கப்பட்டது. அதுவும் பிளாஸ்டிக் காகிதத்தில் கட்டிக் கொடுக்கப்பட்டதால், அந்த கபசுரக் குடிநீரைப் பருக மனம் வரவில்லை. எங்களுக்கு வழங்கப்பட்ட உணவின் சுவையும் படு மோசமாக இருந்தது.
ஒருநாள் இரவு சப்பாத்தி வழங்கப்பட்டது. அது மிகவும் காய்ந்து போயிருந்தது. அதற்கு வைக்கப்பட்ட குருமாவும் சுமாராக இருந்த காரணத்தால், அங்கிருந்தவர்களெல்லாம் சேர்ந்து அந்தச் சப்பாத்திப் பொட்டலங்களைக் குப்பையில் போட்டு உணவு உண்ணாமல் போராட்டம் செய்தோம். போராட்டம் செய்த மறுநாள் மட்டும் ஓரளவு நல்ல சாப்பாடு வழங்கினர். அடுத்த நாளிலிருந்து மீண்டும் மோசமான சாப்பாடுதான் கிடைத்தது" என்றவரிடம், `மூன்று வேளை சாப்பாட்டுக்கு எவ்வளவு ரூபாய் செலவு செய்திருப்பார்கள்?’ என்று கேட்டோம். அதற்கு அவர் ``இந்தச் சாப்பாட்டுக்கு அதிகபட்சமாக 300 ரூபாய் செலவழித்திருப்பார்கள். அவ்வளவுதான்’’ என்று முடித்துக் கொண்டார்.
நாங்கள் விசாரித்த வரை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட சில மாவட்டங்களிலுள்ள சில மருத்துவமனைகளில் மட்டுமே கொரோனா சிகிச்சை பெறுபவர்களுக்கு உணவு, பழங்கள், பயறு வகைகள் மற்றும் முட்டைகள் எனச் சத்தான நல்ல உணவுகள் வழங்கப்படுகின்றன. மற்ற மாவட்டங்களிலெல்லாம் சுமாரான சாப்பாடுதான் வழங்கப்பட்டிருக்கிறது. மேலும், `பழம், முட்டை ஆகியவை பல இடங்களில் வழங்கப்படவில்லை’ என்ற தகவல்களும் நமக்குக் கிடைத்தன. பல இடங்களிலும், `பிபிஇ கிட் அணிந்து வந்து உணவு வழங்கப்படவில்லை’ என்கிறார்கள் சிகிச்சை பெற்றவர்கள்.
இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, `நாளொன்றுக்கு 25 கோடி ரூபாய் செலவழிக்கப்படுகிறது’ என்று முதல்வர் சொன்ன கணக்கு குறித்து சிலரின் ஐயங்களுக்கு அரசுத் தரப்பு பதில் சொல்ல வேண்டியது அவசியமாகவே படுகிறது.
source https://www.vikatan.com/government-and-politics/politics/is-truely-tamilnadu-government-spending-25-crores-per-day-for-giving-food-to-corona-patients
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக