Ad

புதன், 26 ஆகஸ்ட், 2020

`அவருக்கே குற்றவுணர்வு ஏற்பட்டதால்தான் விளக்கம் கொடுத்திருக்கிறார்' - உதயநிதி குறித்து கி.வீரமணி

``தமிழ்நாடு வந்தேறிகளின் வேட்டைக்காடாகிவிட்டது, தமிழ்நாடு என்ன திறந்த வீடா, யாரும் வந்து நுழைய?’’ என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்த கருத்து பலத்த சர்ச்சையை உண்டாகியிருக்கிறது. அவரின் இந்தக் கருத்து தேச ஒற்றுமை மற்றும் பாதுகாப்புக்கு எதிராக இருப்பதாக பா.ஜ.க-வினர் கொதித்தெழுந்துள்ளனர். இந்தநிலையில் அவரைச் சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தோம்...

``கறுப்பர் கூட்ட விவகாரத்தில், `இயக்கத்துக்கு நேரிடையாகத் தொடர்பு இல்லாத இளைஞர்கள் அதே மொழியில் பதிலடி கொடுத்தால், அதற்கு நாங்கள் பொறுப்பல்ல’ என நீங்கள் சொன்னது கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கிறதே?

``அது முடிந்துபோன பிரச்னை. அதைப் பற்றி இப்போது பேச வேண்டிய அவசியம் இல்லை. அது முழுக்க முழுக்கத் தேர்தல் அரசியலுக்காக உருவாக்கப்பட்ட ஒன்று. கடந்த நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் நான் கிருஷ்ணனைப் பற்றிப் பேசியதாகச் சொல்லி மூக்கறுபட்டார்கள். இப்போதும் அதுபோல ஒரு விஷயத்தைக் கையிலெடுத்து ஏமாந்துபோயிருக்கிறார்கள்.’’

கந்தர் சஷ்டிக் கவசம் - கறுப்பர் கூட்டம்

``விநாயகர் சதுர்த்தி சர்ச்சைகள் குறித்து நீங்கள் ஏதும் வாய் திறக்கவில்லையே?’’

``தேவையே இல்லை. இந்த விஷயத்தில் தமிழக அரசாங்கமும் உயர் நீதிமன்றமும் தெளிவான நிலைப்பாட்டை எடுத்துவிட்டன. அதை நாங்கள் வரவேற்றிருக்கிறோம்.’’

`` `தமிழ்நாடு வந்தேறிகளின் வேட்டைக்காடாகிவிட்டது. தமிழ்நாடு என்ன திறந்தவீடா யாரும் வந்து நுழைய?’ என்று கருத்து தெரிவித்திருக்கிறீர்கள். இந்தியா என்பதும் ஒரு நாடுதானே... இங்கு யாரும், எங்கு வேண்டுமானாலும் வேலைக்குச் செல்லலாம்தானே... நீங்கள் பேசுவது தேசப்பிரிவினை இல்லையா?’’

``அதை முதலில் மும்பையிலும் மத்தியப்பிரதேசத்திலும் போய்க் கேட்க வேண்டும். `தங்கள் மாநில மக்களுக்கு வேலையில் முன்னுரிமை கொடுக்க சட்டம் கொண்டு வருவோம்’ என மத்தியப் பிரதேச பா.ஜ.க முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் பேசுவது பிரிவினையா எனச் சொல்ல வேண்டும். மண்ணின் மைந்தர்களுக்கு அந்தந்த மாநில வேலைகளில் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பது எப்போதும் ஒப்புக்கொள்ளப்பட்ட கொள்கைதான். அதனால் அதைப் பற்றிப் பேசுவது தேசப்பிரிவினை அல்ல; அதற்கு எதிராகப் பேசுவதுதான் தேசப்பிரிவினை.’’

``தமிழ்த்தேசியவாதிகளும் இதே விஷயத்தைத்தானே பேசுகிறார்கள்... ஆனால், அவர்களை நீங்கள் கடுமையாக விமர்சிக்கிறீர்களே..?’’

``இந்த விஷயத்தில் எங்களுக்கும் அவர்களுக்கும் முரண்பாடே இல்லை. தமிழர்கள் என்பவர்கள் யார் என்பதில்தான் முரண்பாடு.’’

`` `69 சதவிகித இட ஒதுக்கீடு விவகாரத்தில், தமிழக அரசுக்கு நீங்கள் வழங்கியது சரியான வழிகாட்டல் இல்லை’ என பெரியாரியவாதியான வே.ஆனைமுத்து முன்வைத்துள்ள விமர்சனம் குறித்து..?’’

``நான் ஒரு வழக்கறிஞர். சட்டம் தெரிந்தவன். தவிர, 69 சதவிகித இட ஒதுக்கீடு விஷயத்தில் பல நீதிபதிகள் என்னைப் பாராட்டியிருக்கிறார்கள். தற்போது, மருத்துவப் படிப்பில் ஓபிசி இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கில்கூட சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி 69 சதவிகித இட ஒதுக்கீட்டை அடிப்படையாகவைத்துத்தான் `50 சதவிகிதம் வழங்கலாம்’ என்று சொல்லியிருக்கிறார். ஆனைமுத்துவின் சட்ட ஞானம் பெரியது. எங்களுக்கு அவ்வளவு சட்டஞானம் இல்லை என்று வேண்டுமானால் வைத்துக்கொள்ளலாம்.’’

ஆனைமுத்து

`` `ஓ.பி.சி இட ஒதுக்கீடு விவகாரத்தில் 50 சதவிகிதம் கேட்டு நீதிமன்றம் சென்றவர்கள் தமிழக மக்களுக்கு துரோகம் இழைத்துவிட்டனர்’ எனும் பா.ம.க-வின் குற்றச்சாட்டு குறித்து..?’’

``சமூகநீதியில் ஈடுபாடுள்ள பா.ம.க இந்த விஷயத்தில் ஏன் தவறிழைத்தார்கள் என எனக்குத் தெரியவில்லை. சட்டப்படி 50 சதவிகிதம் கேட்டதுதான் சரி. 27 சதவிகிதம் என்பது மத்திய அரசால் நடத்தப்படக்கூடிய மருத்துவக் கல்லூரிகளுக்கு மட்டும்தான் பொருந்தும். பா.ம.கதான் இந்த விஷயத்தில் தவறாகப் புரிந்துகொண்டு சறுக்கிவிட்டது.’’

``ஆனால், இந்த விவகாரத்தில் வெறும் அறிக்கை, வழக்கோடு திராவிடர் கழகம் நின்றுகொண்டது விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறதே..?’’

``இப்போது மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தினால் நோய்த்தொற்று பரவும் வாய்ப்பிருக்கிறது. உயிர்க்காப்புதான் தற்போது முதன்மையானது. அதற்குப் பிறகுதான் உரிமைக் காப்பு. பொது இடத்தில் ஒன்றுகூடி ஏதாவது பிரச்னையென்றால் எங்கள்மீது பழிவர வாய்ப்பிருக்கிறது. அதைத் தவிர்க்கத்தான் இணையம்வழியாக பரப்புரைகளை, கருத்தரங்குகளை எங்கள் இயக்கத்தின் சார்பாக நடத்துகிறோம்.’’

Also Read: விநாயகர் ட்வீட்: `பகுத்தறிவு பேசும் உதயநிதி பதில் சொல்லவேண்டும்' - நாம்தமிழர் கட்சி கேள்வி!

`` `தி.மு.கவில் 90 சதவிகிதம் பேர் இந்துக்கள்தான். அதிகமான இந்துக்களால் ஆதரிக்கப்படும் கட்சி தி.மு.க’ என்று அந்தக் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பேசுவதை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

``தேர்தல் அரசியலில் இதெல்லாம் சாதாரணம். நாங்களே, தேர்தல் அரசியலுக்குச் சென்றால் இந்த நிலைக்குத் தள்ளப்படலாம் என்பதால்தான் திராவிடர் கழகம் தேர்தலில் பங்கேற்பதில்லை. ஆனால், தி.மு.க விஷயத்தில் நாம் அவர்களின் உருவத்தைப் பார்க்கத் தேவையில்லை. அவர்களின் உள்ளத்தைப் பார்த்தால் போதும். அவர்களின் அடிப்படை நோக்கம், இலக்கு என்ன என்பது எங்களுக்குத் தெளிவாகத் தெரியும்.’’

``இந்து, இந்துமதம் ஆகிய விஷயங்களைச் சுற்றியே அரசியல் விவாதங்கள் இருக்க வேண்டும் என்கிற பா.ஜ.க-வின் சூழ்ச்சிக்குள் தி.மு.க சிக்கிக்கொண்டதாக வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்து..?’’

``தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இந்து-இந்து அல்லாதவர் என்கிற அரசியலை யாரும் செய்ய முடியாது. தமிழ்நாட்டில் எந்தத் தேர்தலும் அப்படி நடந்ததில்லை. அந்த எண்ணத்தோடு இருப்பவர்கள் ஏமாந்துதான் போவார்கள்.’’

ஸ்டாலின்

`` `இந்தியாவின் பன்மொழி கலாசாரத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் நிகழ்வுகள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் பா.ஜ.க ஆட்சியில் நடைபெற்றுக்கொண்டே இருக்கின்றன’ என்று சொல்லியிருக்கிறீர்கள். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இந்தித் திணிப்பு இல்லையா?’’

``அப்போதைய காங்கிரஸ் கட்சி வேறு; இப்போதைய காங்கிரஸ் கட்சி வேறு. அதேபோல, அகில இந்திய காங்கிரஸ் தலைமையின் போக்கு வேறு; மாநில காங்கிரஸ் கமிட்டியின் நிலைப்பாடு என்பது வேறு. மாநிலங்களின் கருத்தை ஏற்றுச் செயல்படும் நிலைக்கு காங்கிரஸ் கட்சி இப்போது வந்திருக்கிறது.’’

``மாநில சுயாட்சி குறித்து தமிழகம் மட்டும் குரல் கொடுத்தால் போதும் என்று நினைக்கிறீர்களா?’’

``வரும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, தமிழகத்தின் முதலமைச்சராக ஸ்டாலின் வந்த பிறகு அதற்கான பணிகள் விரிவடையும். இப்போதே அவர் அதற்கான பணிகளைத் தொடங்கிவிட்டார்.’’

``சமூகநீதியில் முன்னோடி மாநிலமான தமிழகத்தில் இன்னும் பட்டியல் வகுப்பைச் சேர்ந்த ஒருவர் முதல்வராக வர முடியவில்லையே?’’

``மக்களிடம் இன்னும் பக்குவம் வர வேண்டும். சாதி ஆதிக்க மனப்பான்மை மாற வேண்டும்.’’

``பா.ஜ.க-வில் முடிகிறது, ஆனால், திராவிட இயக்கங்களில் பட்டியல் வகுப்பைச் சேர்ந்த ஒருவர் இன்னும் தலைவராக வரமுடியவில்லையே?’’

``ஒவ்வோர் இயக்கத்துக்கும் ஓர் அடிப்படை இருக்கிறது. அந்த இயக்கத்தின் நோக்கம், கொள்கைதான் முக்கியம். பொம்மைத் தலைவர்களை அடையாளப்படுத்துவதன் மூலம் `லட்சியத்தில் வெற்றி பெற்றுவிட்டோம்’ என்று சொல்ல முடியாது. ஒரு சாதியைக் காட்டி அடையாளப்படுத்துவது ஒருவிதமான வித்தையே தவிர, கொள்கையின் வெளிப்பாடு அல்ல.’’

உதயநிதி பதிவிட்ட விநாயகர் படம்

``கோவையில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவரை நாற்காலியில் உட்காரவிடாமல் செய்தது, திருவள்ளூரில் கொடியேற்றவிடாமல் செய்தது போன்ற சம்பவங்களை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

``வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்த நாட்டில் தீண்டாமை ஒழிந்துவிட்டது என்பது வெறும் ஏட்டுச்சுரக்காயாக இருக்கிறது என்பதற்கு இந்தச் சம்பவங்களெல்லாம் உதாரணம். இவை மாற வேண்டும்.’’

``உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் விநாயகர் சிலையைப் பகிர்ந்ததை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

``அது குறித்து அவரே விளக்கம் கொடுத்துவிட்டார். அவருக்கு கடவுள் நம்பிக்கை இல்லை எனத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். அவருக்கு குற்றவுணர்வு ஏற்பட்டதால்தான் தானாக முன்வந்து விளக்கமளித்திருக்கிறார். இனி அதைப் பற்றிப் பேச ஒன்றுமில்லை.’’



source https://www.vikatan.com/news/politics/dravidar-kazhagam-leader-kveeramani-speaks-about-various-issues

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக