Ad

திங்கள், 3 ஆகஸ்ட், 2020

புதுக்கோட்டை: `சட்டவிரோத மதுவிற்பனை; போலீஸாரே மிரட்டுகிறார்கள்!’- கொதிக்கும் மக்கள்

புதுக்கோட்டை மாவட்டம் திருமலைராயசமுத்தரத்தில் சட்டவிரோத மதுவிற்பனை தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளது. சட்டவிரோத மது விற்பனையைக் கட்டுப்படுத்தக் கோரி பொதுமக்கள் சார்பில் ஐ.ஜி, டி.ஐ.ஜி, எஸ்.பி அலுவலகங்களுக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது. மேற்கண்ட அலுவலகங்களிலிருந்து இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி, சுற்றறிக்கை வந்த நிலையில், கிராமத்திற்குச் சென்ற கணேஷ்நகர் போலீஸார் சட்டவிரோத மதுவிற்பனை குறித்து விசாரணை நடத்தாமல், புகார் கொடுத்தவர்களில் ஒருவரைத் தகாத வார்த்தைகளால் திட்டி, மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

கணேஷ் நகர் காவல்நிலையம்

இதையடுத்து, போலீஸாரின் செயலைக் கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்ஸ்பெக்டர் சமாதானம் செய்து அந்தக் காவலரை அழைத்துச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், சட்டவிரோத மதுவிற்பனைக்குத் துணைபோகும் கணேஷ்நகர் போலீஸார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டவிரோத மதுவிற்பனையையும் கட்டுப்படுத்த வேண்டும் என திருமலைராயசமுத்திரம் பொதுமக்கள் திரண்டு எஸ்பி-யிடம் மனுகொடுத்துள்ளனர். எஸ்பி விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திருமலைராயசமுத்திரம் பகுதி மக்கள் கூறும்போது, ``எங்க பகுதியில் சட்டவிரோத மது விற்பனைக் கொடிகட்டிப் பறக்கிறது. முழு ஊரடங்கில் மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தாலும், எங்கள் பகுதியில் மது கிடைக்கும். வெளியூர்களிலிருந்தும் தேடி வந்து வாங்கிச் செல்கின்றனர். டாஸ்மாக் அரசு ஊழியர் சின்னத்துரை என்பவர் டாஸ்மாக்கில் 10 வருடங்களுக்கும் மேலாக பணிபுரிகிறார். டாஸ்மாக் கடையில் மொத்தமாக வாங்கி புகையிலை, ஹான்ஸ் போன்றவற்றைக் கலந்து கலப்பட மதுபானம் தயார் செய்து பல்வேறு பகுதியிலும் விற்பனை செய்கிறார்.

பொதுமக்கள் புகார்

இதுபற்றி, பல முறை புகார் அளித்தும் கணேஷ் நகர் போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை. எஸ்.பி அலுவலகத்திற்குச் சென்றால், செல்பவர்களைப் போலீஸார் மிரட்டுகின்றனர். சட்டவிரோத மதுவிற்பனை செய்பவர்களிடம் இருந்து இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ, காவலர் வரையிலும் செல்ல வேண்டிய பணம் சரியாக செல்கிறது. ஒரு மாதம் செல்லத் தாமதமானால், விடமால் வசூல் செய்துவிடுவார்கள். சட்ட விரோதத்தில் ஈடுபடுவார்களுக்கு விசுவாசமாக, போலீஸார் பொதுமக்களை மிரட்டுகின்றனர். இளைஞர்கள் மீது பொய் வழக்குப் போடவும் வாய்ப்புள்ளது.

Also Read: `ஊரடங்கில் மது விற்பனை; ரூ.1.44 கோடி அபராதம்!' - கதிகலங்கும் கரூர் டாஸ்மாக் ஊழியர்கள்

எந்த பிரச்சினை என்றாலும், எங்கள் பகுதி மக்கள் யாரும் கணேஷ் நகர் ஸ்டேஷனுக்குச் செல்வதில்லை. நேராக எஸ்.பி அலுவலகத்திற்குத் தான் செல்கின்றனர். பழைய எஸ்பி இருக்கும் வரையிலும் மதுவிற்பனை கட்டுக்குள் இருந்தது. தற்போது அதிகரித்துவிட்டது. இதனால், எங்க பகுதி மக்களுக்குக் கடுமையான பாதிப்பு ஏற்படுகிறது. எஸ்.பி தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

கணேஷ்நகர் காவல் ஆய்வாளர் அழகம்மாளிடம் கேட்டபோது, ``சட்டவிரோத மதுவிற்பனை தொடர்பாக, நேரடியாக எங்களிடம் எந்த மனுவும் வரவில்லை. சட்டவிரோத விற்பனையில் யார் ஈடுபட்டாலும், பாரபட்சமின்றி அவர்கள்மீது வழக்குப்பதிவு செய்து வருகிறோம். மாத வசூல் செய்வதாக வீண்பழி சுமத்துகின்றனர். அந்த ஊரில் இரண்டு தரப்பாக இருக்கின்றனர். ஒரு தரப்பு மற்றொரு தரப்பு மீது மாற்றி, மாற்றி குற்றம் சுமத்துவார்கள். கடைசியில் போலீஸார் மீது பழி சுமத்திவிடுவார்கள்" என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/controversy/pudukottai-village-people-files-complaint-with-sp-against-ganesh-nagar-police

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக