Ad

திங்கள், 17 ஆகஸ்ட், 2020

சத்தீஸ்கர்:`மரம் மட்டுமே பிடிப்பு; 16 மணி நேரம்!’- வெள்ளத்தில் இளைஞரின் திக்..திக் போராட்டம் #Video

நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் பருவமழை தீவிரமடைந்து வருகிறது. பீகார், அஸ்ஸாம் உள்ளிட்ட மாநிலங்களின் பல பகுதிகளில் வசிக்கும் மக்கள் மழையால் கடுமையாகப் பாதிப்படைந்துள்ளனர். தாழ்வான பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான பகுதிகளில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர்.

வெள்ளத்திலிருந்து மீட்கப்பட்ட சத்தீஸ்கர் இளைஞர்

சத்தீஸ்கர் மாநிலத்திலும் கடந்த சில நாள்களாகப் பெய்துவரும் தொடர் மழையால் நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், பல இடங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுக்மா மாவட்டத்தின் பல பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. தொடர் மழையால் சபரி உள்ளிட்ட நதிகளில் அதிக அளவு வெள்ளம் பாய்ந்தோடுகிறது. அதேபோல், கோதாவரி நதியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனால், மாநிலம் முழுவதும் வெள்ளத் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முதலமைச்சர் பூபேஷ் பாகெல் உத்தரவிட்டிருக்கிறார். பீஜாப்பூர், தாண்டேவாடா மற்றும் சுக்மா மாவட்டங்களின் பகுதிகளை உள்ளடக்கிய தெற்கு பஸ்டர் பகுதிகள் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த 2, 3 நாள்களாகப் பெய்துவரும் தொடர் மழையால் பல கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. பீஜாப்பூர் மாவட்டத்தில் மட்டும் ஏறக்குறைய 100 கிராமங்கள் மின்சார வசதி மற்றும் போக்குவரத்து போன்றவை துண்டிக்கப்பட்டுள்ளன.

வெள்ளத்திலிருந்து மீட்கப்பட்ட சத்தீஸ்கர் இளைஞர்

இந்தநிலையில், பிலாஸ்பூர் அருகே குடாகட் அணைப் பகுதியில் வெள்ளத்தில் சிக்கி 16 மணி நேரத்துக்கு மேல் போராடிய இளைஞர் ஒருவர் விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டிருக்கிறார். குடாகட் அணைப் பகுதி அப்பகுதியில் பிரபலமான சுற்றுலாத் தலமாகும். ஞாயிறு உள்ளிட்ட விடுமுறை தினங்களில் மக்கள் அதிக அளவில் அங்கு வருவதுண்டு. அந்தவகையில், குடாகட் அணைக்குச் சுற்றிப்பார்க்க வந்த இளைஞர் ஒருவர், அணையின் உபரி நீர் வழிந்தோடும் கால்வாயில் குளிப்பதற்காக நேற்று மாலை இறங்கியிருக்கிறார்.

Also Read: இமாசலப் பிரதேச பனிப்பொழிவு - மீட்கப்பட்ட 45 ஐ.ஐ.டி மாணவர்கள்; மீட்புப் பணியில் இறங்கும் இந்திய விமானப் படை

தொடர் மழையால் அணையிலிருந்து அதிகப்படியான நீர் வெளியேறி வந்த நிலையில், அந்த இளைஞர் இறங்கிய பின்னர் கால்வாயில் நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. இதனால், கால்வாயை விட்டு வெளியேற முடியாமல் அவர் சிக்கியிருக்கிறார். நீர் மட்டம் அதிகரித்த நிலையில், கால்வாயில் இருந்த கல் ஒன்றின் மீது அமர்ந்துகொண்டு அங்கிருந்த மரத்தைப் பிடித்தவாறே உதவிக்காகக் காத்திருந்திருக்கிறார். இதுகுறித்து பிலாஸ்பூர் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர் வந்து இளைஞரை மீட்க எடுத்த முயற்சிகள் பலனளிக்காமல் போகவே, விமானப்படையின் உதவி கோரப்பட்டது.

இதையடுத்து, விமானப்படையின் எம்.ஐ-17 ரக ஹெலிகாப்டர் மூலம் அந்த இளைஞர் மீட்கப்பட்டிருக்கிறார். வெள்ளத்தில் சிக்கி 16 மணி நேரத்துக்கும் மேலாகப் போராடிய அந்த இளைஞரை இந்திய விமானப் படை வீரர்கள், ஹெலிகாப்டரில் இருந்து கயிறு மூலம் இன்று காலைமீட்டனர். விமானப்படை வீரர்களின் மீட்புப் பணி பரவலாகப் பாராட்டைப் பெற்றுள்ளது. இதுகுறித்த தகவலை ட்விட்டரில் பகிர்ந்துள்ள பிலாஸ்பூர் காவல்துறையினர், விமானப்படை வீரர்களுக்குப் பாராட்டையும் தெரிவித்துள்ளனர்.



source https://www.vikatan.com/news/india/air-force-rescues-man-held-to-tree-at-bilaspur-dam-over-16-hours

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக